காணாமலாக்கப்பட்டோருக்கான நீதி?

breaking
சிறிலங்கா இராணுவத்தினரிடம் சரணடைந்து அல்லது அவர்களால் கைது செய்யப்பட்டு காணாமல் ஆக்கப்பட்டவர்களின் பிரச்சினை மீண்டும் சர்ச்சைக்கு உள்ளாக்கப்பட்டிருக்கின்றது. காணாமல் ஆக்கப்பட்டவர்களில் எவரும் தம்மிடம் சரணடையவில்லை எனவும் அது தொடர்பாக அரசிடமே கேட்க வேண்டும் எனவும் சிறிலங்கா இராணுவத்தின் பொறுப்பு வாய்ந்த அதிகாரியான சிமித் அத்தப்பத்து தெரிவித்திருந்தார். இதனையடுத்தே காணாமல் ஆக்கப்பட்டவர்களின் பிரச்சினை மீண்டும் சர்ச்சைக்குள்ளாகி இருக்கின்றது. உள்நாட்டிலும், சர்வதேச ரீதியாகவும் இதற்காகக் குரல் கொடுக்க வேண்டியவர்களின் மௌனம் அல்லது இயலாமை சிறிலங்கா அரசாங்கமும், இராணுவத் தலைமையும் பொறுப்புக் கூறும் கடப்பாட்டை புறந்தள்ளுவதக்கு வழிவகுத்திருக்கின்றது. இராணுவத்தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ள இந்த கருத்துக்கு எதிராக காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் அமைப்பு போர்க்கொடி தூக்கி இருக்கின்றது. "எமது பிள்ளைகளை இராணுவத்திடமே ஒப்படைத்தோம். அவர்கள் காணாமல் ஆக்கப்பட்டுள்ள நிலைமையில் அதற்கான பொறுப்பை இராணுவமே கூற வேண்டும்" என வடக்கு கிழக்கு காணாமல் ஆக்கப்பட்டோர் உறவினர்களின் சங்கம் தெரிவித்திருக்கின்றது. வவுனியாவில் வெள்ளிக்கிழமை நடத்திய ஊடக சந்திப்பு ஒன்றின் போது இந்த சங்கத்தின் முக்கிய உறுப்பினரான லீலாதேவி இது தொடர்பில் தெரிவித்திருக்கின்றார். "அரசாங்கம் வேறு இராணுவம் வேறு என்று கூறிப் பொறுப்புக்களைத் தட்டிக்கழித்துவிட முடியாது" என்பதையும் சுட்டிக் காட்டியிருக்கும் அவ்வமைப்பு, போர்க் காலத்தில் முன்னரங்கில் நின்று இராணுவமே சரணடைந்த தங்களுடைய பிள்ளைகளை பொறுப்பேற்றது என்பதையும் தெரிவித்திருக்கின்றது. அதனால் இந்தப் பொறுப்பில் இருந்து இராணுவம் விலகிச் சென்று விட முடியாது என்பது அவருடைய கருத்தாக இருந்தது. சரணடைந்த அல்லது கைது செய்யப்பட்டவர்களின் பெயர்ப்பட்டியலை ஒப்படைக்குமாறு முல்லைத்தீவு நீதிமன்றம் இராணுவ அதிகாரிகளை ஏற்கனவே கேட்டிருந்தமையும் குறிப்பிடத்தக்கது. இவ்வாறு சரணடைந்தவர்களின் பட்டியல் ஒன்று தம்மிடம் இருப்பதாக இராணுவத் தலைமை தெரிவித்திருந்ததையடுத்தே அந்தப் பட்டியலை ஒப்படைக்குமாறு நீதிமன்றம் கேட்டிருந்தது. போர் ஆரம்பமான போதே வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் பிரச்சினைகளும் ஆரம்பமாகியிருந்தது. இளைஞர்களை வகைதொகையின்றிக் கைது செய்வதும், பின்னர் அவர்கள் காணாமல் போவதும், வழமையானதாகவே இருந்துள்ளது. இரகசியமான சித்திரவதை முகாம்கள் பல இருந்துள்ளதை யஸ்மின் சூக்கா போன்ற சர்வதேச புகழ்பெற்ற மனித உரிமைகளுக்காகப் போராடுபவர்களுடைய அமைப்புக்கள் ஆதாரங்களுடன் வெளிப்படுத்தியிருந்தன. போர் முடிவுக்கு வந்த காலகட்டத்தில்தான் ஆயிரக்கணக்கானவர்கள் ஒரேயடியாகச் சரணடைந்தார்கள். போர் முடிவுக்கு வந்த பின்னரும் நூற்றுக்கணக்கானவர்கள் கைது செய்யப்பட்டனர். இவர்களிலும் பெருந்தொகையானவர்களுக்கு என்ன நடந்தது என்பது இதுவரை தெரியவில்லை. காணாமலாக்கப்பட்டவர்களின் உறவினர்களின் போராட்டங்கள் பல வருடகாலமாகத் தொடர்கின்றபோதிலும், அவர்களுக்கு நம்பிக்கையளிக்கக்கூடிய பதில்கள் எதுவும் இதுவரையில் வழங்கப்படவில்லை. பெருந்தொகையான உறவினர்களின் பங்குபற்றுதலுடன் ஆரம்பமான இந்தப் போராட்டத்தில் தற்போது பங்கேற்பவர்களின் தொகை குறையத் தொடங்கிவிட்டது. போராட்டத்தில் ஈடுபட்டிருந்த சுமார் 10 வரையிலான தாய்மார் வயோதிபம் மற்றும் நோய்களால் மரணமடைந்திருக்கின்றார்கள். தொடர்ந்தும் போராடும் மற்றையவர்களும் இறுதிவரையில் போராடுவது என்பதில் உறுதியாக இருக்கின்றார்கள். அரசாங்கமோ காலங்கடத்தப்படும் நிலையில், இந்தப் போராட்டமும் நீர்த்துப்போய்விடும் என தமது வழமையான தந்திரோபாயத்ததுடன் காத்திருக்கின்றது. நிலைமாறுகால நீதிப் பொறிமுறையில் பொறுப்புக் கூறல் முக்கியமானதாகும். பொறுப்புக் கூறலைப் பொறுத்தவரையில் காணாமல் ஆக்கப்பட்டவர்களின் பிரச்சினைகளுக்குத் தீர்வு காணப்படுவது பிரதானமானது. இந்தப் பிரச்சினைக்குத் தீர்வைக்காணமல் நிலைமாறுகால நீதிப்பொறிமுறையின் மற்றைய விடயங்களைக் கையாள முடியாது. சிறிலங்கா அரசாங்கத்தால் ஏற்படுத்தப்படும் உள்நாட்டு நீதிப் பொறிமுறையைப் பயன்படுத்தி இவ்வாறான பிரச்சினைக்குத் தீர்வைக்காண முடியாது என்பது ஏற்கனவே பல சந்தர்ப்பங்களில் நிரூபிக்கப்படடிருக்கின்றது. திருமலையில் ஐந்து மாணவர்களின் படுகொலைகள் தொடர்பில் அண்மையில் நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பு மட்டுமன்றி, குமாரபுரம் படுகொலைகள் தொடர்பான தீர்ப்பும் இந்த நிலையை உறுதிப்படுத்தியிருப்பதாக சர்வதேச மனித உரிமை அமைப்புக்கள் சுட்டிக்காட்டியிருக்கின்றன. இந்த இரு சம்பவங்களிலுமே படுகொலைகளைப் புரிந்தவர்கள் சிறிலங்கா இராணுவத்தினர்தான் என்பதை உறுதிப்படுத்தியிருந்த போதிலும், சாட்சிகள் - ஆதாரங்கள் இல்லை எனக் கூறப்பட்டு குற்றஞ்சாட்டப்பட்ட படையினர் விடுவிக்கப்பட்டனர். இது உள்நாட்டு விசாரணைகள் எதுவும் படையினரைப் பாதுகாப்பதற்கான பொறிமுறையாகத்தான் இருக்கும் என்பதை இந்தச் சம்பவங்கள் உணர்த்துகின்றன. காணாமல் ஆக்கப்பட்டவர்களின் விவகாரத்தைக் கையாள்வதற்காக ஏற்கனவே இரண்டு ஆணைக்குழுக்கள் சிறிலங்கா அமைக்கப்பட்டிருந்தன. அவை மக்களிடம் நேரடியாகச் சென்று தகவல்களைச் சேகரித்திருந்தன. அதனைவிட, ஜெனீவாவில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்துக்கமைய காணாமல் ஆக்கப்பட்டோருக்கான அலுவலகம் ஒன்றும் அமைக்கப்பட்டது. இப்போது காணாமல் ஆக்கப்பட்டோருக்கான அலுவலகமும் காணாமல் போய்விட்டது. ஆரம்ப கட்டமாக மக்கள் கருத்துக்களை அறிந்துகொள்ள அது முற்பட்டதற்கு அப்பால், அதன் செயற்பாடுகள் எதனையும் காணக்கூடியதாக இருக்கவில்லை. அந்த அலுவலகத்துக்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரங்களும், இந்தப் பிரச்சினையைத் தீர்பதற்குப் போதிதல்ல என்ற கருத்தும் முன்வைக்கப்பட்டிருந்தது. காணாமல் ஆக்கப்பட்டோர் தொடர்பான சிறிலங்கா ஜனாதிபதியால் நியமிக்கப்பட்ட பரணகம ஆணைக்குழுவுக்கு சுமார் 23 ஆயிரம் முறைபபாடுகள் கிடைத்திருந்தன. இதில் சுமார் 5 ஆயிரம் முறைப்பாடுகள் காணாமல்போன படையினர் தொடர்பானதாகும். ஜனாதிபதி ஆணைக்குழு காலாவதியான பின்னர், காணாமல் ஆக்கப்பட்டவர்கள் விவகாரத்தைக் கையாள்வதற்கு காணமல் போனோர் அலுவலகம் (OMP) அமைக்கப்பட்டது. ஜெனீவாவில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்துக்கு அமைவாக - சர்வதேச சமூகததைச் சமாளிப்பதற்கான ஒரு உத்தியாகவே இது அமைக்கப்பட்டது. காணாமல் ஆக்கப்பட்டவர்கள் குறித்த தகவல்களைச் சேகரிப்பதும், அவர்கள் எவ்வாறு? எந்தச் சூழ்நிலையில் காணாமல் ஆக்கப்பட்டார்கள் என்பதையும், அதற்குப் பொறுப்பானவர்கள் யார் என்பதையும் கண்டறிவதுதான் அதன் முக்கியமான பணி. காணாமல் ஆக்கப்பட்ட பலருடைய தகவல்கள் ஏற்கனவே இந்த அலுவலகத்துக்கு வழங்கப்பட்டிருக்கின்றது. அவர்களைப் படை அதிகாரிகளிடம் கையளித்த உறவினர்களே, எப்போது, யாரிடம், எங்கே வைத்து தமது உறவுகளைக் கையளித்தார்கள் என்ற தகவல்களை நேரில் தெரிவித்திருக்கின்றார்கள். பெரும்பாலான உறவினர்கள் இவ்விடயத்தில் ஒரே விதமான சாட்சியத்தையே வழங்கியிருந்தார்கள். அந்தத் தகவல்களை அடிப்படையாகக்கொண்டு மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு, உண்மைகளை வெளிக்கொண்டுவருவதற்கு அரசாங்கமும் படைத் தரப்பும் முயற்சிகளை மேற்கொண்டிருக்க வேண்டும். அவ்வாறு எதுவும் நடைபெற்றதாகத் தகவல் இல்லை. காணாமல் போனோர் அலுவலகமும் அந்தப் பிரச்சினைக்குத் தீர்வைக்காண்பதற்கான அதிகாரத்தைக் கொண்டிருக்கவில்லை. அதனால், அதுவும் காலத்தைக் கடத்துவதற்கான ஒரு கண்துடைப்பு நாடகமாகவே இருக்கின்றது. இந்தப் பின்னணியில், தம்மிடம் யாரும் சரணடையவில்லை எனவும், அது தொடர்பில் அரசிடம்தான் கேட்கவேண்டும் எனவும் இராணுவ அதிகாரி ஒருவர் தெரிவித்திருப்பது, இந்தப் பிரச்சினையில் தமக்கு இருக்கும் பொறுப்பை ஏற்கமறுக்கும் இராணுவத் தலைமையின் நிலைப்பாட்டைத்தான் வெளிப்படுத்துகின்றது. அதாவது காணாமல் ஆக்கப்பட்டோர் விவகாரத்துக்குப் பொறுப்பேற்க யாரும் தயாராகவில்லை. இந்த நிலையில், காணாமல் ஆக்கப்பட்டோர் அலுவலகம் அல்லது அரசு நியமிக்கும் ஆணைக்குழுக்கள் மூலமாகத் தீர்வு ஒன்று கிடைக்கும் என்பதில் நம்பிக்கை வைக்க முடியாதவர்களாகவே உறவினர்கள் உள்ளனர். ஐ.எஸ். பிரச்சினை போன்றவற்றால், இராணுவ அதிகாரியின் இந்தக் கருத்து போதியளவுக்கு ஊடக கவனத்தைப் பெறவில்லை. சர்வதேச மனித உரிமைஅமைப்புக்களும், உலக நாடுகளும், புலம்பெயர்ந்தோர் அமைப்புக்களும் இவ்விடயத்தில் கவனத்தைக் குவித்து செயற்படாத நிலையில், இந்தப் பிரச்சினை கைவிடப்பட்டுவிடலாம் என்பதற்கான ஒரு எச்சரிக்கையாகவே சிறிலங்கா இராணுவ அதிகாரியின் இந்தக் கருத்தைக் கவனத்தில் எடுக்க வேண்டும். இனப்படுகொலையைச் செய்த சிங்கள இராணுவம் முறையான - நடுநிலையான விசாரணை ஒன்றை முன்னெடுக்கும் என்பதையோ உண்மைகளை ஏற்றுக்கொள்ளும் என்பதையோ எதிர்பார்க்க முடியாது. அதனால், ஜெனீவாவை மட்டும் நம்பியிருக்காமல் சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்துக்குப் பிரச்சினையைக் கொண்டு செல்வதற்குத் தேவையான செயற்பாடுகளை முன்னெடுப்தே தமிழ்த் தரப்பின் செயற்பாடாக இருக்கவேண்டும். தாயகத்திலும் புலம்பெயர்ந்த மக்கள் மத்தியில் செயற்படும் அமைப்புக்கள் நன்கு திட்டமிட்ட முறையில் இதற்கான செயற்பாடுகளை முன்னெடுக்க வேண்டும். இல்லையெனில், அனைத்துத் தரப்பினரும் பொறுப்புக் கூறலைத் தட்டிக்கழிக்கும் நிலையில், காணாமலாக்கப்பட்டவர்களுக்கான நீதியும் காணாமலாக்கப்பட்டுவிடலாம்.