"கானா பாட்டிலேயே போலீசுக்கு கொலை மிரட்டல்.!

breaking
கடந்த ஆண்டு ஜூலை 2-ந்தேதி இரவு சென்னை ராயப்பேட்டையில் பி.எம். தர்கா அருகே ஒரு கும்பல் குடிபோதையில் தகராறு செய்தது. அப்போது, ரோந்து சென்ற தலைமைக் காவலர் ராஜவேல், அவர்களை கலைந்து செல்லுமாறு எச்சரித்தார். மித மிஞ்சிய போதையில் இருந்த அந்த கும்பல், காவலர் மீது கொலைவெறித் தாக்குதல் நடத்தியது. இதையடுத்து கூடுதல் படையோடு சம்பவ இடத்திற்கு வந்த போலீஸார், ராஜவேலுவை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தது. போலீஸ்காரரை தாக்கிய ரவுடிகள்  ஜிந்தா, வேல்முருகன், அஜித்குமார், சீனு, மகேஷ் ஆகியோர் கைது செய்யப்பட்டனர். மெயின் ரவுடியான ஆனந்தன் தலைமறைவாகிவிட, அவனை ஜூலை 4-ந்தேதி என்கவுன்டரில் போட்டு பழி தீர்த்துக் கொண்டது காவல்துறை. ஆனந்தனை பிடிக்க முயன்றபோது போலீஸார் மீது தாக்குதல் நடத்தியதால், என்கவுன்டர் செய்ய வேண்டிய நிலை ஏற்பட்டதாக காவல்துறை தரப்பில் சொல்லப்பட்டது. அப்போது, என்கவுன்டர் நடத்திய உதவி ஆணையர், இப்போதும் அதே சரகத்தில் தான் பணியாற்றி வருகிறார்.

இந்த நிலையில், கடந்த 4-ந்தேதி ஆனந்தனின் நினைவுநாளையொட்டி, அவனது நண்பர்கள் 'டிக்டாக்' வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளனர். மயிலாப்பூர் கைலாசபுரம் இடுகாட்டின் பின்னணியில் பதிவு செய்யப்பட்ட அந்த வீடியோவில் " வந்திட்டோம்டா.. வந்திட்டோம்டா... எங்க ஆனந்த் அண்ணனை செஞ்சவனை போட வந்திட்டோம்டா.." என கானா பாடல் பாடி போலீஸாருக்கு கொலை மிரட்டல் விடுத்துள்ளனர்.

இதையடுத்து, வீடியோவில் இடம்பெற்றுள்ள சுரேஷ்குமார், விஜய், கார்த்திக், பிரசாத், கானா பாடகர் மணிகண்டன், சமீர் பாட்ஷா என 6 பேரை ராயப்பேட்டை போலீஸார் கைது செய்து சிறைக்கு அனுப்பி உள்ளனர்.