அகதிகளை சந்திக்க சென்ற ஆஸ்திரேலிய செனட் உறுப்பினர்.!

breaking
பப்பு நியூ கினியாவில் உள்ள மனுஸ்தீவில் ஆஸ்திரேலியாவின் கடல்கடந்த அகதிகள் தடுப்பு முகாம் செயல்பட்டு வருகின்றது. இம்முகாமில் உள்ள அகதிகளை/ தஞ்சக்கோரிக்கையாளர்களை சந்திக்க சென்ற ஆஸ்திரேலிய பசுமைக்கட்சி செனட் உறுப்பினர் நிக் மெக்கிம்க்கு பப்பு நியூ கினியா நாடுகடத்தல் நோட்டீஸ் விடுத்திருக்கின்றது.  தடுப்பு முகாமை பார்வையிட சென்ற பொழுது அவர் தடுத்து நிறுத்தப்பட்டு அவரின் கடவுச்சீட்டை அதிகாரிகள் பெற்றுள்ளனர். முகாமின் நிலையை நான் ஆய்வு செய்யலாமா என அதிகாரியிடம் கேட்டதாக கூறியுள்ள மெக்கிம், “எனது முந்தைய பயணங்களின் போது மனுஸ்தீவில் நடப்பது குறித்து தவறான தகவலை பரப்பியதாக அதிகாரிகள் கூறினர்,” எனக் கூறியிருக்கிறார்.  அவரின் கடவுச்சீட்டை மீண்டும் கொடுக்கப்பட்ட நிலையில், அவர் பப்பு நியூ கினியாவை விட்டு வெளியேறுவதற்கான நோட்டீஸ் கொடுக்கப்பட்டுள்ளது. பப்பு நியூ கினியாவுக்கு பலமுறை வந்து செல்லும் 12 மாத விசா மூலம்  மெக்கிம் சென்றிருக்கிறார்.  “வெளியேறுவதற்கான நோட்டீசை ஏற்றுக்கொள்கிறேன், நாளை வெளியேறுகிறேன். எதுவாயினும், தடுப்பு முகாம் பற்றிய உண்மையை வெளிக்கொண்டு வருவதற்கான போராட்டத்தை நிறுத்த மாட்டேன்,” என தனது டீவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்  நிக் மெக்கிம். படகு வழியாக வரும் தஞ்சக்கோரிக்கையாளர்களை கடல் கடந்த முகாமில் தடுத்து வைக்கும் ஆஸ்திரேலிய கொள்கை நடைமுறைப்படுத்தப்பட்டு ஆறு ஆண்டுகள் நிறைவடைந்துள்ள நிலையில் அவர் மனுஸ்தீவில் உள்ள அகதிகளை பார்வையிட சென்றிருக்கிறார்.  “எனக்கு என்ன நடந்தாலும், நான் 24 மணிநேரத்திலோ 48 மணிநேரத்திலோ அல்லது 72 மணிநேரத்திலோ ஆஸ்திரேலியாவுக்கு திரும்பி விடுவேன். ஆனால், பப்பு நியூ  கினியாவில் இருக்கப்போகும் நூற்றுக்கணக்கானோர் எதிர்காலம் குறித்த எந்த நம்பிக்கையுமின்றி இருக்கின்றனர்,” என செனட் உறுப்பினர் நிக் மெக்கிம் வருந்தியுள்ளார்.  கடந்த 2013 முதல் கடுமையான எல்லையோர கொள்கைகளை நடைமுறைப்படுத்தி வரும் ஆஸ்திரேலிய அரசு, படகு வழியாக வந்த தஞ்சக்கோரிக்கையாளர்களை மனுஸ் மற்றும் நவுருத்தீவில் அமைந்துள்ள கடல் கடந்த முகாமில் தடுத்து வைத்துள்ளது. சுமார் 500 பேர் அமெரிக்காவுடனான ஒப்பந்தத்தின் அடிப்படையில் மீள்குடியேற்றப்பட்டுள்ள போதிலும் நூற்றக்கணக்கான அகதிகள் சுமார் 6 ஆண்டுகளுக்கு மேலாக தடுத்து வைக்கப்பட்டுள்ளனர். இதில் பலர் உடல் மற்றும் மனரீதியான பாதிப்புகளை எதிர்கொண்டு வருகின்றனர்.