ஓராண்டாக ஒரே பெண்ணைச் சீரழித்த நால்வர்.!

breaking
பேஸ்புக், வாட்ஸ்-ஆப், இன்ஸ்டாகிரம் போன்ற சமூக வலைத்தளங்களை இருபாலரும் பயன்படுத்தி வருகின்றனர். உலக அளவில், எத்தனையோ நல்ல காரியங்களுக்காக இவை பலராலும் கையாளப்பட்டு வருகிறது.  அதேநேரத்தில், நம் நாட்டில்,  தனிமையில் இருக்கும் பெண்கள்  ‘பொழுதுபோக்கு‘ என்ற பெயரில், பின்னாளில் ஏதோ ஒரு வில்லங்கத்தில் மாட்டுவோம் என்பதை அறிந்திடாமல், பெரும்பாலான நேரத்தை வலைத்தளங்களிலே செலவிடுகின்றனர். அதுபோன்ற ஒரு பெண்ணுக்கு என்ன நேர்ந்தது என்று பார்ப்போம்!

ஆந்திர மாநிலம் – அனந்தப்புரம் மாவட்டம் – ராயதுர்கத்தைச் சேர்ந்த பகவத்தும் (பெயர் மாற்றப்பட்டுள்ளது) ஹனிதாவும் (பெயர் மாற்றப்பட்டுள்ளது) 4 ஆண்டுகளுக்கு முன் திருமணம் செய்துகொண்டனர். இவர்களின் மகனுக்கு 3 வயது ஆகிறது. கணவன், ஆண் குழந்தை என நன்றாகப் போய்க்கொண்டிருந்த ஹனிதாவின் வாழ்க்கையில், மகேஷ் என்பவன் புகுந்தான். வீட்டை அடுத்துள்ள கடையில் பால் வாங்கச் செல்லும்போது, அவன் பழக்கமானான். வாய்ப்பு கிடைக்கும்போதெல்லாம் தனிமையில் சந்திக்கும் அளவுக்கு இவ்விருவரும் நெருக்கமானார்கள்.

மகேஷ் சும்மா இருக்கவில்லை. ஹனிதாவுடனான தவறான உறவு குறித்து, தன்னுடைய நண்பர்கள் பவன், மல்லிகார்ஜுனா, ஷாருக் ஆகியோரிடம் பெருமையடித்தான். அந்த மூவரும், மகேஷுடன் பழகும் ஹனிதா தங்களுடனும் பழக வேண்டும் என்று போட்டி போட்டனர். அதற்கு வாய்ப்பு ஏற்படுத்தித் தந்தது பேஸ்புக். ஒருவருக்குத் தெரியாமல் ஒருவர் என, மூவரும் ஹனிதாவின் பேஸ்புக் நண்பர்கள் ஆனார்கள். ஹனிதாவின் முகநூல் பக்கத்தில் மேய்ந்து பல விபரங்களைச் சேகரித்தனர். பிறகென்ன? சாட்டிங்தான்!

இந்த சாட்டிங் இருக்கிறதே! படு வில்லங்கமானது. தவறான எண்ணத்துடன் எதிர் தரப்பில் உள்ள ஆண் என்ன கேள்வி கேட்டாலும், பலவீனமாக உள்ள பெண்கள்  ‘சாட்டிங்தானே’ என்று கூசாமல் பதில் சொல்லிவிடுவார்கள்.  ‘சாப்பிட்டாச்சா?’ என்பதில்தான் ஆரம்பிக்கும். போகப்போக என்ன பேசுகிறோம் என்பது தெரியாமலே மதிமயங்கச் செய்துவிடும்.

ஹனிதாவும் மதிமயங்கி, தன்னுடைய செல்போன் நம்பரை மூவரிடமும் கொடுத்துவிட்டாள். மூவரும் மாறி மாறிப் பேச,   ஏற்கனவே மகேஷுடன் பழகிவருவதை மறைக்காமல் சொல்லிவிட்டாள். இது மகேஷே தங்களிடம்  சொன்ன சமாச்சாரம்தான் என்பதை மூவரும் காட்டிக்கொள்ளவில்லை. ஆனால், பிளாக்-மெயில் பண்ணினார்கள். ‘மகேஷுக்கு மட்டும்தானா? அதே பழக்கத்தை எங்களிடமும் வைத்துக்கொள்’ என்று ஹனிதாவை ‘டார்ச்சர்’ செய்தனர்.

விளையாட்டாக ஆரம்பித்த  ‘பேஸ்புக் ப்ரண்ட்ஷிப்’ விபரீதமாகச் செல்வதை ஹனிதா அறிந்த நேரத்தில், “உன்னைப் பற்றி.. உன் நடத்தையைப் பற்றி.. நீ மகேஷுடன் தவறாக நடந்துவருவது பற்றியெல்லாம், உன் கணவனிடம் கூறிவிடுவோம். இதெல்லாம் தெரிந்தால், உன்னை வீட்டை விட்டே விரட்டி விடுவார்கள். நீ நடுத்தெருவுக்குத்தான் வரவேண்டியிருக்கும். அப்படி ஒரு நிலைமை உனக்கு வரவேண்டாம் என்று நீ நினைத்தால். எங்களின் ஆசைக்கு இணங்க வேண்டும்.  ‘அதெல்லாம் முடியாது; நான் குடும்பப் பெண்’  என்று நாங்கள் சொன்னதைக் கேட்காமல் அடம்பிடித்தால்,   உன் மீது ஆசிட் அடிப்போம். உன் கணவரையும் குழந்தையையும் கொன்றுவிடுவோம்.’ என்று பயங்கரமாக மிரட்டியிருக்கின்றனர்.

ஹனிதாவுக்கு வேறு வழியே தெரியவில்லை. அவர்கள் சொல்வதையெல்லாம் கேட்டாள். எல்லாவற்றுக்கும் உடன்பட்டுத் தொலைத்தாள். நண்பர்கள் மூவரைக் காட்டிலும் நான் சீனியர் எனச்சொல்லி, மகேஷும் தன் பங்குக்கு ஹனிதாவைக் கொடுமைப்படுத்தினான். ஒருநாள்.. இரண்டு நாள் அல்ல.. கடந்த ஒருவருடமாக இந்த நால்வரிடமும் மாட்டிக்கொண்டு, ஹனிதா படாதபாடு பட்டாள். நாளுக்குநாள் தொல்லை அதிகமானதே ஒழிய, குறையவில்லை.  ஒருகட்டத்தில்,  ‘கணவனுக்குத் துரோகமிழைத்து,  இத்தனை கேவலமாக நடந்துகொண்டு,  உயிர் வாழத்தான் வேண்டுமா?’ என்ற கேள்வி ஹனிதாவுக்கு எழுந்தது. வீட்டில் யாரும் இல்லாதபோது, அளவுக்கதிகமாக தூக்க மாத்திரைகளை விழுங்கி மயங்கிச் சரிந்தாள்.

மனைவி ஹனிதா, தற்கொலைக்கு முயன்றதை அறிந்து பதறிய பகவத், அவளை ராயதுர்கம் அரசு மருத்துவமனையில் கொண்டுபோய்ச் சேர்த்தார். சிகிச்சை அளிக்கப்பட்டுவரும் நிலையில், கணவனிடம் நடந்த கொடுமையைச் சொல்லி அழுதாள் ஹனிதா. ராயதுர்கம் காவல்நிலையம் புகாரைப் பெற்றுக்கொண்டு, நான்கு பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவுசெய்து,   ஹனிதாவை கடந்த ஒருவருடமாகச் சீரழித்துவந்த நண்பர்கள் மகேஷ், பவன், மல்லிகார்ஜுனா, ஷாருக் ஆகிய நால்வரையும் கைது செய்து விசாரணை நடத்தி வருகிறது.

அறிவியல் வளர்ச்சியில் உலகமே திக்குமுக்காடுகிறது. டெக்னாலஜி எங்கேயோ போய்விட்டது. நன்மைகள் ஒருபுறம் இருந்தாலும், தீமைகளுக்குப் பஞ்சம் இல்லை. செல்போன் தொடர்பு என்பது எல்லோர் வாழ்க்கையிலும் இரண்டறக் கலந்துவிட்டது. சமூக வலைத்தளங்களும் முண்டியடித்து நம் வாழ்க்கையோடு ஒட்டிக்கொண்டது.  வேறென்ன சொல்ல முடியும்? டெக்னாலஜியை மனம்போன போக்கில்  கையாண்டால்,  ஹனிதாவுக்கு ஏற்பட்ட கதிதான்!