இந்தியாவிற்கு பெருமை சேர்த்த தமிழச்சியை பாராட்ட மறந்த தமிழ்நாடு அரசு !

breaking
கடந்த 14 ந் தேதி ஆஸ்திரேலியா சமோவா தீவில் நடந்த 14 நாடுகள் பங்கேற்ற காமன்வெல்த் பளு தூக்கும் போட்டியில் 85 கிலோ எடைப் பரிவில் 221 கிலோவை அசால்டாக் தூக்கி இந்தியாவுக்கும், தமிழ்நாட்டிற்கும் பெருமை தேடிக் கொடுத்தார் புதுக்கோட்டை மாவட்டம் வாராப்பூர் நெம்மேலிப்பட்டி கிராமத்தைச் சேர்ந்த அனுராதா (27). (இவர் தஞ்சை தொகூர் காவல் நிலையத்தில் உதவி ஆய்வாளராக உள்ளார்.) தமிழகத்தில் இருந்து பெண்கள் யாரும் காமன்வெல்த்தில் பளு தூக்கி தங்கம் வென்றதாக சரித்திரம் இல்லை. அனுராதாவே அந்த சாதனையை செய்துள்ளார். வெற்றி பதக்கத்துடன் டெல்லிக்கு வந்தார் பாராட்டினார்கள். ஒரு ஓரத்தில் நிறுத்தி படமும் எடுத்தார்கள்.   சென்னை வந்தார். தமிழக அரசின் வரவேற்பும், பாராட்டும் இருக்கும் என்று எதிர்பார்த்தாரோ இல்லையோ.. எதுவும் இல்லை. தமிழக அரசின் ஒரு வாழ்த்துச் செய்தி கூட இல்லை. முதலமைச்சரோ, மாவட்ட அமைச்சரோ, விளையாட்டுத்துறை அமைச்சரோ ஒரு வாழ்த்துக் கூட சொல்லவில்லை. எதிர்கட்சி தலைவர்கள் வாழ்த்தினார்கள். இந்த சம்பவம் புதுக்கோட்டை மாவட்ட விளையாட்டு வீரர்கள் மத்தியில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. இது குறித்து புதுக்கோட்டை மாவட்டம் விளையாட்டு வீரர்கள் கூறும் போது.. காமன் வெல்த்தின் பளு தூக்கி தங்கம் வென்ற முதல் தமிழச்சி அனுராதா தான். அதற்கு முதலமைச்சர் அழைத்து பாராட்டி வாழ்த்து சொல்லி இருந்தால் ரொம்ப உற்சாகமாக இருந்திருக்கும். 19 ந் தேதி சட்டமன்றம் வரை அனுராதா சென்றிருக்கிறார். அப்போது கூட முதலமைச்சர் அழைத்து சந்திக்கவில்லை. மாவட்ட அமைச்சர் விஜயபாஸ்கர், மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர் யாரும் வாழ்த்தவில்லை. ஆனால் சட்டமன்றத்தில் தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் பார்க்க வந்துள்ளார். அப்போது முதலமைச்சர் இன்னும் பார்க்கவில்லை என்று சொன்னதும் முதலமைச்சர் பார்த்த பிறகு சந்திக்கிறேன் என்று சொல்லி இருக்கிறார்.  ஏன் தமிழக முதலமைச்சரும், அமைச்சர்களும் சாதனை செய்துவிட்டு வந்துள்ள வீராங்கனையை சந்திக்கவில்லை என்பது ஒட்டுமொத்த விளையாட்டு வீரர்களுக்கும் ஆதங்கமாக உள்ளது என்றனர். மேலும் விளையாட்டு வீரர்கள் உற்சாகமாக போட்டிகளில் கலந்து கொள்ளவும், வெற்றி பெறவும் அவர்களுக்கு வாழ்த்துகளும், பாராட்டுகளும் தான் வேகத்தை கொடுக்கும். சட்டமன்றம் முடிந்துவிட்ட நிலையிலாவது அழைத்து சந்தித்து வாழ்த்தினால் நல்லது என்றார்கள்.