வைத்தியர் ஷாபிக்கு தொடர்ந்து விளக்கமறியல்: உத்தரவிட்ட நீதிபதிக்கு எதிராக முறைப்பாடு

breaking
சர்ச்சைக்குரிய விதத்தில் பெண்களிற்கு கருத்தடை சத்திரசிகிச்சை மேற்கொண்டார் என குருநாகல் வைத்தியர் ஷாபி மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டு ஆதாரமற்றது என பொலிசார் அறிவித்த பின்னரும், வைத்தியரை விளக்கமறியலில் வைக்க உத்தரவிட்டுள்ள நீதவான் நீதிமன்ற நீதிபதி மீது நீதிச்சேவைகள் ஆணைக்குழுவில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளது. சர்ச்சைக்குரிய கருத்தடை குற்றச்சாட்டு வைத்தியர் ஷாபி மீது பெண்களாலும், பௌத்த பிக்குகளாலும், சில ஊடகங்களாலும் குற்றம்சுமத்தப்பட்டிருந்தது. இது குறித்து பொலிசார் நடத்திய விசாரணையில், அந்த குற்றச்சாட்டுக்கள் நிரூபிக்கப்படவில்லை. வைத்தியர் ஷாபி மீதான குற்றச்சாட்டுக்கள் நிரூபிக்கப்படவில்லை, அவரை பயங்கரவாத தடுப்பு சட்டத்தில் தடுத்து வைக்க முகாந்திரமில்லையென பொலிசாரால் நீதிமன்றத்தில் அறிக்கை தாக்கல் செய்யப்பட்டிருந்தது. எனினும், அவரை தொடர்ந்து விளக்கமறியலில் வைக்க நீதிபதி சம்பத் ஹேவவாசம் உத்தரவிட்டிருந்தார். நீதிபதிக்கு எதிராக, நீதிச்சேவைகள ஆணைக்குழுவிடம் முறைப்பாடு பதிவு செய்துள்ளனர் இளம் ஊடகவியலாளர் சங்கம். ஷாபி விவகாரத்தில் நீதிபதி தவறு செய்தாரா அல்லது சிலரை உள்ளடக்கியதாக நடக்கும் தவறின் ஒரு பகுதியா என்பதை அறிய விசாரணை நடத்தப்பட வேண்டும் என அந்த முறைப்பாட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 750 பேரின் சாட்சியங்களுடன், 210 பக்க பீ அறிக்கையை பொலிசார் தாக்கல் செய்திருந்தனர். இதில், ஷாபி மீதான எந்த குற்றச்சாட்டும் நிரூபிக்கப்படவில்லையென குறிப்பிடப்பட்டிருந்தது. இந்தநிலையில், தற்போது நீதிச்சேவைகள் ஆணைக்குழு இந்த விவகாரத்தில் கவனம் செலுத்தியுள்ளது. வைத்தியர் ஷாபி தொடர்பாக சத்திரசிகிச்சை தகவல்களை வெளியிட்டதாக குற்றம்சாட்டப்பட்டுள்ள குருநாகல டிஐஜி கீத்சிறி ஜயலத் மற்றும் நீதிபதி சம்பத் ஹேவவாசம் ஆகியோரின் மனைவிகள், குருநாகல் வைத்தியசாலையில் வைத்தியர்களாக பணியாற்றி வருவதாகவும் அந்த முறைப்பாட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது.