தமிழ், முஸ்லீம் மக்களுக்கிடையில் தவறான புரிதல்களாலேயே முரண்பாடு தோன்றியது

breaking
கடந்த காலத்தில் முஸ்லிம் மக்கள் தமிழ் மக்கள் தொடர்பில் கொண்டிந்த தவறான புரிதல்களே தமிழ்-முஸ்லிம் மக்களிடையே முரண்பாடுக் தோன்றுவதற்கு காரணமாக அமைந்ததாக வடமாகாண முன்னாள் முதலமைச்சரும் தமிழ் மக்கள் கூட்டணியின் செயலாளர் நாயகமுமான சீ.வி.விக்னேஸ்வரன் தெரிவித்தார். முன்னைய காலத்தில் முஸ்லிம்கள் தங்களை தமிழர்கள் என்றே அழைத்து வந்ததாகவும் ஆனால் பின்னர் அவர்கள் தங்களை வேறுபடுத்திக் காட்டமுற்பட்ட நிலையிலேயே தமிழ்-முஸ்லிம் மக்கள் பிரியும் நிலையேற்பட்டதாகவும் அவர் தெரிவித்தார். மட்டக்களப்பு,களுவாஞ்சிகுடி பிரதேச செயலாளர் பிரிவுக்கு உட்பட்டட மகிழுர் கண்ணகிபுரத்தில் நேற்று (20) மக்கள் சந்திப்பு நடைபெற்றது. இங்கு தொடர்ந்து உரையாற்றிய விக்னேஸ்வரன்,ஏப்ரல் 21 தாக்குதலுக்கு பின்னர் இந்த நாட்டில் மாற்றங்கள் ஏற்பட்டுள்ளன.இந்த தாக்குதலின் பின்னர் பல்வேறு விதமான சிந்தனைகள் மக்கள் மத்தியில் ஏற்பட்டுவருகின்றன. தமிழ் முஸ்லிம் மக்கள் மத்தியில் ஒரு காலத்தில் சகோதரத்துவம் நிலவி வந்தது.ஆனால் இன்று சந்தேக நிலைமையே இரு சமூகங்கள் மத்தியிலும் நிலவி வருகின்றது. ஒருகாலத்தில் முஸ்லிம்களும் தமிழ் மக்களும் பிட்டும் தேங்காய்ப் பூவும் போல வாழ்ந்து வந்த நிலைதான் கிழக்கு மாகாணத்தின் பல இடங்களிலும் இருந்தது. அண்மைக்காலமாக இந்த நிலையில் பல மாற்றங்கள் ஏற்பட்டுள்ளது. எங்களுடைய மக்கள் பல காரணங்களுக்காக தங்களுடைய காணிகளை விற்றுவிட்டு வெளிநாடுகளுக்கும் வேறு இடங்களுக்கும் செல்கின்றனர். அந்தக்காணிகளை ஒரு இனத்தவர்கள் வாங்கிக்கொள்கின்றனர். ஆகையால் காணி சம்பந்தமான அவர்களுடைய உரிமைகள் விரிவுபடுகின்றன. எங்களுடைய காணி சம்பந்தமான உரிமைகள் குறைந்துகொண்டு வருகின்றன. இதைவிட வேறுசில நடவடிக்கைகளும் நடந்துவருகின்றன. இதுவரை காலமும் முஸ்லிம் மக்கள் எங்களது காணிகளை கொள்வனவு செய்தார்கள் அல்லது கபளீகரம் செய்தார்கள். இந்த இரண்டையும் நாங்கள் இனி விடக்கூடாது. எங்களுடைய தமிழ் மக்கள் சிந்திக்க வேண்டிய தருணம் இப்போது ஏற்பட்டுள்ளது. இதை தொடர்ந்து செய்தால் கிழக்கு மாகாணத்தில் நாங்கள் இல்லாது போய்விடுவோம். தமிழருக்கும் சிங்களவருக்கும் இடையிலான வித்தியாசம் யாதெனில் தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் முடிவின்போது யாழ்ப்பாணத்திலே முஸ்லிம்கள் வெடி கொளுத்தி பாற்சோறு உண்டனர். ஆனால் ஏப்ரல் 21ன் பின்னர் முஸ்லிம்களுக்கு ஏற்பட்ட நிலைக்கு தமிழர்கள் எவருமே அவ்வாறான சிந்தனைகளில் ஈடுபடவில்லை. அப்படியிருந்தும் கல்முனையில் எங்களுக்குரிய சில உரித்துக்களை தரமுடியாது தரக்கூடாது என்ற விதத்தில் முஸ்லிம் பிரதிநிதிகள் கூறிக்கொண்டு வந்தனர். ஆனால் இப்போது அவர்களுடைய மனதில் மாற்றங்கள் ஏற்பட்டுவருவதை நாங்கள் காண்கின்றோம். இவ்வாறான மாற்றங்களுக்குக் காரணம் பிழையான சிந்தனைகளில் ஈடுபட்டு முஸ்லிம் மக்கள் தமிழ் மக்களிலிருந்து பிரிந்து சென்றமையால் கிழக்கு மாகாணத்தில் தமிழ் மக்கள் பலவிதமான கஷ்டங்களுக்கு முகங் கொடுக்கவேண்டி ஏற்பட்டது. சுமார் 300 தமிழ் கிராமங்கள் தமிழ் பெயரைக்கொண்ட கிராமங்கள் முஸ்லிம் கிராமங்களாக முஸ்லிம் பெயர்களைக்கொண்ட கிராமங்களாக மாறிவிட்டன என்றார்.