போராட்ட பூமியாகும் தமிழகம் சதியில் மத்திய அரசு.?

breaking
தமிழகத்தில் காவிரி டெல்டா மாவட்டங்களான தஞ்சாவூர், நாகப்பட்டினம், திருவாரூர், கடலூர் மற்றும் ராமநாதபுரம் உள்ளிட்ட பல மாவட்டங்களில் ஹைட்ரோகார்பன் எடுக்க வேதாந்தா நிறுவனத்துக்கும், ஓஎன்ஜிசி, ஐஓசி நிறுவனத்திற்கும் மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது. அதாவது, கடலூர் மாவட்டம்,  தியாகவள்ளியிலிருந்து  நாகை மாவட்டம்,  வைத்தீஸ்வரன் கோவில் வரையுள்ள நிலப்பரப்பில் 731 சதுர கிமீ, மரக்காணம் முதல் குள்ளஞ்சாவடி வரை 1,794 சதுர கிமீ, பரங்கிப்பேட்டை முதல் நாகை  மாவட்டம், புஷ்பவனம் வரை 2,674 சதுர கிமீ, கடலூர் மாவட்ட தென் பகுதி, நாகை மாவட்ட வடக்கு பகுதிகளை உள்ளடக்கி 459.89 சதுர கிமீ, ராமநாதபுரம் மாவட்டத்தில் 1,403.41 சதுர கிமீ பரப்பளவில் ஹைட்ரோகார்பன் எடுப்பதற்கு மத்திய அரசு அனுமதி வழங்கி உள்ளது. இந்த பரப்பளவில் ஒற்றைச்சாளர அனுமதி முறையில் மீத்தேன் உள்ளிட்ட பூமிக்கடியில் கிடைக்கும் எந்த வகையிலான எரிவாயுக்களையும் எடுத்துக் கொள்ள அனுமதிக்கப்பட்டுள்ளது. நவீன தொழில்நுட்பத்தை பயன்படுத்தி எரிவாயுக்கள் எடுக்கப்பட உள்ளதாக கூறப்படுகிறது. பல லட்சம் ஹெக்டேர் பரப்பளவில் விவசாயம் நடந்து வரும் டெல்டா மாவட்டங்களில் இந்த திட்டத்தை கொண்டு வருவதற்கு கடும் எதிர்ப்பு கிளம்பி உள்ளது. ஏற்கனவே நெடுவாசலில் ஹைட்ரோகார்பன் திட்டத்தை எதிர்த்து பொதுமக்கள் சுமார் 150 நாட்களுக்கும் மேலாக போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனைத்தொடர்ந்தே இத்திட்டம் இப்பகுதியில் கைவிடப்பட்டது. தற்போது மீண்டும் சுமார் 300க்கும் மேற்பட்ட இடங்களில் ஹைட்ரோகார்பன் திட்டத்தில் கிணறுகள் அமைக்கவும், எரிவாயுக்களை சேமிக்கவும் அனுமதி வழங்கப்பட்டுள்ளதால் மீண்டும் ஒரு போராட்டம் வெடிக்கும் சூழல் உருவாகி உள்ளது. தண்ணியில்லா காட்டில்... தென்மாவட்டங்களை பொறுத்தவரை ஏற்கனவே நியூட்ரினோ திட்ட (தேனி மாவட்டம், பொட்டிப்புரம்) அனுமதியால் மீண்டும் பரபரப்பான சூழல் நிலவி வரும் நிலையில், ‘தண்ணியில்லா காடு’ என அழைக்கப்படும் ராமநாதபுரம் மாவட்டத்திலும் ஹைட்ரோகார்பன் திட்டத்திற்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. இங்கு ஏற்கனவே குடிநீர் பஞ்சம் தலைவிரித்தாடுகிறது. நிலத்தடி நீர் அதலபாதாளத்தில் உள்ளது. கீழக்கரை பகுதியில் ஒரு சில இடங்களில் லேசான நில அதிர்வும் தென்பட்டது. தற்போது இம்மாவட்டத்தில் ஆர்.எஸ்.மங்கலம் அருகே கருங்குடி, தேவிப்பட்டினம் அருகே  பெருங்குடி, பெருவயல், ராமநாதபுரம் அருகே பனங்குளம் உள்ளிட்ட இடங்களில் ஹைட்ரோகார்பன் எடுக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளதால் மக்கள் கடும் அச்சத்தில் உள்ளனர். ஏற்கனவே ஆற்றில் ஊற்று தோண்டி தண்ணீர் எடுத்து வரும் சூழலில், தற்போது இந்த திட்டம் கொண்டு வந்தால் நிலத்தடி நீர்மட்டம் மிக கடுமையாக பாதிக்கப்படும் என அஞ்சுகின்றனர். சட்டமன்றத்தில் தமிழக அரசு கொள்கை முடிவெடுத்து, ஹைட்ரோகார்பன் திட்டத்துக்கு தடை விதிக்க வேண்டுமென சட்டமன்ற எதிர்க்கட்சி  தலைவர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியிருந்தார். இதற்கு பதிலளித்த சட்ட  அமைச்சர் சி.வி.சண்முகம், ‘‘மாநில அரசு அனுமதியின்றி எந்த திட்டத்தையும்  ஆரம்பிக்கக்கூடாது. மீறி கொண்டு வந்தால் கிரிமினல் நடவடிக்கை  எடுக்கப்படும்’’ என கூறி உள்ளார். ‘‘நல்ல ஜனநாயகம் என்பது கடைக்கோடியில் வாழ்பவன் கூட, தனது நாட்டில் தனது குரலுக்கு மதிப்பும், மரியாதையும் இருக்கிறது என்பதை உணர வேண்டும். அப்படி இல்லாவிட்டால், அது மக்களாட்சி அல்ல’’ - இதுதான் தேசப்பிதா காந்தியடிகளின் கருத்து. இதை மத்திய, மாநில அரசுகள் உணர வேண்டுமென்பதே போராட்டத்தை முன்னெடுக்கும் மக்களின் ஒருமித்த குரலாக உள்ளது. ‘பொன்னு விளையுற பூமி’ என்ற பெயரெடுத்த டெல்டா உட்பட தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் ஹைட்ரோகார்பன் எடுப்பதற்கான நடவடிக்கைகளில் மத்திய அரசு முழு முயற்சி எடுத்து வருகிறது. பசுமை படர்ந்து நிற்கும் நெல் வயல்களில் இந்த திட்டத்தை நிறைவேற்ற உள்ளதால் விவசாயிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். சுற்றுச்சூழல் பாதிக்கப்படும் அபாயத்தால், தமிழகத்தில் மீண்டும் மக்கள் போராட்டம் வெடிக்கும் சூழல் உருவாகி உள்ளது. பூகம்பம் உருவாகுமா? ஹைட்ரோகார்பன் திட்டத்தால் நில அதிர்வு ஏற்படும் வாய்ப்புள்ளதால், ஜெர்மனி, தென்கொரியா மற்றும் சில ஐரோப்பிய நாடுகள் இந்த திட்டங்களையே கைவிட்டார்கள். அரேபிய நாடுகளில் பாலைவன பகுதிகளில் எரிபொருட்களை எடுப்பதால் சுற்றுச்சூழலுக்கோ, பொதுமக்களுக்கோ எந்த பாதிப்பும் இல்லை. ஆனால், சுமார் 36 லட்சம் ஹெக்டேர் பரப்பளவில் விவசாயம் மேற்கொள்ளப்படும் காவிரிப்படுகையில், இத்திட்டத்தை செயல்படுத்தினால் விவசாயம் பாதிக்கும் அபாயம் உள்ளது. எதற்காக இந்த திட்டம் நாம் அன்றாடம் பயன்படுத்தும் பெட்ரோல், டீசலை சுமார் 75 சதவீதம், எரிவாயுவை 45 சதவீதம் வெளிநாடுகளில் இருந்தே இறக்குமதி செய்கிறோம். இதற்காக நாம் அதிக பொருட்செலவு செய்ய வேண்டி உள்ளது. எனவேதான், மத்திய அரசு எரிபொருள் உற்பத்தியை உள்நாட்டிலேயே செய்து செலவினங்களை குறைக்க திட்டமிட்டுள்ளது. இதன்காரணமாகவே ஹைட்ரோகார்பன் திட்டத்தை முழுவீச்சில் செயல்படுத்த முன்வந்துள்ளது. ‘சுற்றுச்சூழல் கடுமையாக பாதிக்கும்’ தமிழ்நாடு அறிவியல் இயக்க கருத்தாளர் சேதுராமன் கூறியதாவது: ஹைட்ரோகார்பன் 2 முறைகளில் எடுக்கப்படுகிறது. ஒன்று மரபுசார் முறை அல்லது வழக்கமான முறை என்று கூட கூறலாம். மற்றொன்று மரபு சாரா முறை. முதலில் மரபுசார் முறைப்படி எரிவாயு எடுப்பது எப்படி என்பதை பார்ப்போமா? ஹைட்ரோகார்பன் திட்டத்தின் கீழ் எரிவாயுவை 2 முறைகளில் எடுக்கின்றனர். டெல்டா மாவட்டங்களை பொறுத்தவரை 5 ஆயிரம் - 7 ஆயிரம் அடிக்கு கீழே எரிவாயு உள்ளது. இவைகள் மண்ணுக்கடியில் உள்ள களிமண் பாறைகளில் தென்படும் வெடிப்புகளில் ஆங்காங்கே படிந்திருக்கும். நிலத்தில் துளையிட்டு சாதாரணமாக ஒரு பைப்பை சொருகும்போது இயற்கையான முறையில் திரவ, வாயு எரிபொருள்களை சேகரிக்கும் முறையை மரபு சார் முறை என்கிறோம். அடுத்ததாக, மரபு சாரா முறையில் எரிவாயவை எடுக்கும் முறைக்குத்தான் விவசாயிகள், பொதுமக்கள் கடும் எதிர்ப்பு தெரிவிக்கின்றனர். இதை ஆங்கிலத்தில் Hydrolic fracturing என்கின்றனர். அதாவது, பூமிக்கடியில் வேதி வினைகளை ஏற்படுத்தி எரிவாயுவை எடுக்கும் முறையைத்தான் அவ்வாறு குறிப்பிடுகின்றனர். மரபு சாரா முறைப்படி சுமார் 5 ஆயிரம் அடி முதல் 10 ஆயிரம் அடி வரை பூமிக்குள் துளையிட்டு ஒரு பெரிய குழாயை செங்குத்தாக உள்ளே இறக்குவார்கள். அதன் தொடர்ச்சியாக படுக்கைவசத்தில் ஒரு குழாயை பொருத்துவார்கள். இந்த குழாயில் ஆங்காங்கே துளைகள் இடப்பட்டிருக்கும். இப்போது பல லட்சக்கணக்கான லிட்டர் அளவுக்கு தண்ணீரை எடுத்துக்கொள்வார்கள். இவற்றுடன் ஆற்றுமணல் மற்றும் நூற்றுக்கணக்கான வேதிப்பொருட்களை சேர்ப்பார்கள். அதாவது, தண்ணீர் 99.50 சதவீதம், 0.50 சதவீதம் மணல் + வேதிப்பொருட்கள் என்ற விகிதத்தில் இருக்கும். இந்த தண்ணீர் கலவையை அதிவேக அழுத்தத்தில் செங்குத்தான குழாயில் உள்ளே செலுத்துவார்கள். அதிக அழுத்தத்தில் கலவை செல்லும்போது துளைகள் வழியாக வெளியேறி பாறைகள் மீது பட்டு, வேதியியல் மாற்றங்கள் ஏற்படும். சில நேரங்களில் சிறு வெடிப்புகள் உருவாகும். இதன்மூலம் பாறைகளின் அடியில் மட்டும் ஆங்காங்கே படிமங்களாக படிந்திருக்கக்கூடிய எரிவாயுக்கள் ஒன்றிணைக்கப்படும். இப்போது முதல்கட்டமாக குழாயில் செலுத்திய தண்ணீரில் 60 சதவீதம் கழிவுநீராக குழாய் மூலமாக வெளியேற்றப்படும். இதனுடன் பூமிக்கடியில் உள்ள பல்வேறு வகையிலான தேவையற்ற பொருட்கள் சேர்ந்து வெளியே வரும். தண்ணீர் முழுமையாக வெளியேறியதும் குழாய் மூலம் எரிவாயுக்கள் வெளிக்கொணரப்பட்டு சேமிக்கப்படும். இந்த 2 முறைகளிலும் எரிவாயுக்கள் எடுக்கப்படும் முறை ஆபத்தானது என்றாலும், மரபு சாரா முறையில்தான் சுற்றுச்சூழல், நிலப்பரப்பு, நிலத்தடி நீர் உள்ளிட்டவைகள் கடுமையாக பாதிக்கப்படும் அபாயம் உள்ளது. இவ்வாறு அவர் கூறினார். ‘கடல் நீர் பூமிக்குள் புகும்’ மதுரையைச் சேர்ந்த ஓய்வு இணை பேராசிரியர் ராஜமாணிக்கம் கூறியதாவது: இந்த உலகம் பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு நீர், நிலம், காற்று, கடல், வானம், வனம் என இருந்தது. கால மாற்றத்தில் கடல் பரப்பு சுருங்கி, அதில் வாழ்ந்த அரிய வகை நுண்ணுயிரிகள், உயிரினங்கள், தாவரங்கள், கடல் பாசிகள் அழுகி, மட்கி பூமிக்கடியில் கிடக்கின்றன. இவைகளுக்குள் நிகழ்ந்த ரசாயன மாற்றங்களே, நிலக்கரி, பெட்ரோலியம், மீத்தேன், ஈத்தேன் என பல வடிவங்களில் கிடைக்கின்றன.  மண்ணில் புதைந்த மரங்கள் நிலக்கரியாக மாறுகின்றன. பெரும்பாலும், மீத்தேன் உள்ளிட்ட எரிவாயுக்கள் ஆற்றுப்படுகைகள் மற்றும் நிலக்கரி படுகைகளிலேயே அதிகம் உள்ளன. நெய்வேலியில் 100 அடியில் சாதாரணமாக கிடைக்கும் நிலக்கரி, அதன் தொடர்ச்சியாக உள்ள மன்னார்குடி படுகையில் 400 - 500  அடியில் கிடைக்கின்றன. ஆனால், இதே நிலக்கரி படுகையில் குறைந்த அடியில் மீத்தேன் கிடைப்பது ஆய்வில் உறுதியாகி உள்ளது. பாலைவனப்பகுதிகளில் ஹைட்ரோகார்பன் உள்ளிட்ட திட்டங்களை செயல்படுத்துவதில் பிரச்னையில்லை. ஆனால், காவிரிப்படுகையில் ஹைட்ரோகார்பனை எடுக்க முயற்சிக்கின்றனர். புதிய தொழில்நுட்ப முறையில் எடுப்பதால் நில அதிர்வு ஏற்படும் வாய்ப்புகள் உள்ளன. பூமிக்கடியில் வேதி வினை நிகழும்போது ஏற்படும் அதிர்வில் கடல் நீர் கூட உள் புக வாய்ப்புள்ளது. எனவேதான், வாழ்வாதாரத்தை பாதிக்கும் இந்த திட்டத்தை பொதுமக்கள் வலுவாக எதிர்க்கிறார்கள். இதில் அந்நிய நேரடி முதலீடு 100 சதவீதம் ஈடுபடுத்தப்பட உள்ளதாக கூறப்படுவதும் அச்சுறுத்தலை தருகிறது. இவ்வாறு அவர் கூறினார். ‘நிலத்தடி  நீர் விஷமாகும்’ பூமிக்கடியில் வேதிப்பொருட்களை உட்செலுத்தும்போது, இடையிலேயே குழாய்களில் விரிசல் ஏற்பட வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. இதன்மூலம் கலவை நீர் பூமிக்கு சில அடியிலேயே கிடைக்கும் நிலத்தடி நீரில் கலந்து விஷமாகும் வாய்ப்புள்ளது. மேலும், உறிஞ்சப்படும் நீரை அருகிலேயே குளம் போலவோ அல்லது வேறு கலனிலோ சேமிப்பார்கள். கதிரியக்க பொருட்களோடு வெளியேறும் இக்கழிவு நீரால் புற்றுநோய் உள்ளிட்ட பாதிப்புகள் ஏற்படுவதற்கான வாய்ப்புகளும் உள்ளன. நிலத்தால் இந்த நீர் உறிஞ்சப்பட்டால் நிலத்தடி நீர் கெட்டுப்போகும் சூழல் உள்ளது. நாளடைவில் நிலப்பரப்பு ஈரத்தன்மை குறைய, குறைய நிலத்தடி நீர்மட்டம் முற்றிலும் குறையும் நிலை ஏற்படும் வாய்ப்புள்ளது. ஒரு அனுமதி பெற்று ஒரேடியாக அள்ளலாம் மார்ச் 2016ல் மத்திய அரசால் புதிய எண்ணெய் எடுப்புக் கொள்கை HELP (Hydrocarbon Exploration Licensing Policy) அறிமுகப்படுத்தப்பட்டது. இதன் மூலம் ஒற்றை அனுமதி என்கிற பெயரில் கச்சா எண்ணெய் அனுமதியுடன் மீத்தேன், ஷேல், டைட் கேஸ் உள்ளிட்ட எந்த வகையான எண்ணெய் மற்றும் எரிபொருட்களையும் எடுத்துக் கொள்ளலாம். முன்பு தனித்தனியாக அனுமதி பெற வேண்டும். இந்த முறை மாற்றப்பட்டுள்ளது. மேலும், எண்ணெய் நிறுவனங்களே தங்களுக்குரிய பகுதிகளை தேர்வு செய்யவும், லாபத்தில் பங்கு என்கிற நடைமுறையை மாற்றி, வருமானத்தில் பங்கு என்கிற புதிய நடைமுறையையும் கொண்டதாக இந்த ஒற்றை அனுமதி மாற்றியமைக்கப்பட்டது. அமைச்சர் சொல்வது என்ன? மத்திய அமைச்சர்  தர்மேந்திர பிரதான் கூறுகையில், “தமிழகத்தில் கடல் பகுதிகளை ஒட்டி தான்  ஹைட்ரோகார்பனை எடுக்க உள்ளோம். இதனால் கண்டிப்பாக பாதிப்பு ஏற்படாது.  மேலும் தமிழக விவசாயிகளும் எதிர்ப்பு தெரிவிக்கமாட்டார்கள் என நம்புகிறோம்’’  என்கிறார்.