போர்த்துக்கல்லினை அச்சுறுத்தும் காட்டுத் தீ .!

breaking
மத்திய போர்த்துக்கல்லின் பல இடங்களில் ஏற்பட்ட காட்டுத்தீயால் பலர் தங்களின் வீடுகளை விட்டு வெளியேறும் நிலை ஏற்பட்டுள்ளது. போர்த்துக்கலின் மத்திய பகுதியிலுள்ள காஸ்டெலோ பிரான்கோ என அழைக்கப்படும் மலை பிராந்தியத்தில் மூன்று இடங்களில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. இந்தத் தீ விபத்தில் 20 பேர் படுகாயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. அத்துடன், நேற்று(ஞாயிற்றுக்கிழமை) இரண்டு இடங்களில் தீ கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவரப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். உலங்கு வானூர்திகளும், விமானங்களும் தீயணைப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டு வருகின்றன. பலத்த காற்று காரணமாக கடந்த சனிக்கிழமை முதல் தீ வேகமாக பரவி வருவதாக தெரிவிக்கப்படுகின்றது. மீட்புப்பணிகளில் நூற்றுக்கணக்கான தீயணைப்பு வீரர்களும், இராணுவத்தினரும் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாகவும், பல முக்கிய வீதிகள் மூடப்பட்டுள்ளதாகவும் குறிப்பிடப்படுகின்றது. அத்துடன், காஸ்டெலோ பிரான்கோ பகுதியில் வெப்பநிலை 31 பாகை வரை அதிகரிக்கலாம் எனவும் எதிர்பார்க்கப்படுகின்றது. இதன்காரணமாக போர்த்துக்கல்லின் மத்திய மற்றும் தெற்கு பகுதியின் ஆறு இடங்களில் தீ ஏற்படலாம் எனவும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.