உண்ணாவிரதமிருக்கும் கைதியின் உடல் நிலை மோசம்: மனோ கணேசனுக்கு கடிதம்

breaking
  கொழும்பு, மகஸின் சிறைச்சாலையில் உணவு தவிர்ப்புப் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் தமிழ் அரசியல் கைதி, அமைச்சர் மனோ கணேசனுக்கு கடிதமொன்றினை அனுப்பி வைத்துள்ளார். இன்று (திங்கட்கிழமை) 8ஆவது நாளாக உணவுத் தவிர்ப்பில் ஈடுபட்டுள்ள தமிழ் அரசியல் கைதியான கனகசபை தேவசிங்கத்தின் உடல்நிலை மிகவும் மோசமடைந்திருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ள நிலையில், அவர் தனது விடுதலையை வலியுறுத்தி கடிதம் எழுதியுள்ளார். மகஸின் சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டிருக்கும் கனகசபை தேவசிங்கம் கடந்த 15ஆம் திகதி முதல் உணவு தவிர்ப்புப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளார். தன்னை பிணையில் செல்ல அனுமதிக்க வேண்டும், அரசியல் கைதிகளின் விடுதலையைத் துரிதப்படுத்த வேண்டும் என்ற கோரிக்கைகளை முன்வைத்து அவர் நீர்கூட அருந்தாமல் உண்ணாவிரதம் இருந்து வருவதாக அறியமுடிகின்றது. இவர், கோட்டை ரயில் நிலைய குண்டுவெடிப்பு சம்பவத்துடன் தொடர்பு கொண்டிருந்தார் என்ற சந்தேகத்தின் பேரில் கடந்த 2008ஆம் ஆண்டு கைது செய்யப்பட்டார். இவருக்கு எதிராக இரண்டு வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டிருந்தன. ஒரு வழக்கில் ஆயுள் தண்டனையும், மற்றைய வழக்கில் 20 வருட கடூழிய சிறைத் தண்டனையும் விதித்துத் தீர்ப்பளிக்கப்பட்டிருந்தது. இந்த இரண்டு வழக்குகளிலும் தனக்குத் தானே வாதாடியிருந்த தேவதாசன் தீர்ப்புக்களின் பின்னர், தனக்குரிய சாட்சிகளைத் தயார் செய்து முறைப்படி நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்துவதற்காக தன்னை பிணையில் செல்ல அனுமதிக்க வேண்டும் என்று கோரி இரண்டு வழக்குகளுக்கும் எதிராக மேன்முறையீடு செய்துள்ளார். இந்நிலையில் தனது விடுதலை குறித்து அவர் தனது கடிதத்தில் வலியுறுத்தியுள்ளார்