முல்லைத்தீவில் மண்ணெண்ணெய் தட்டுப்பாடு!

breaking
முல்லைத்தீவு சாலையில் நிலைகொண்டுள்ள வெளி மாவட்டக் கடற்றொழிலாளர்கள், மிக அதிகமாக மண்ணெண்ணெயைக் கொள்வனவு செய்வதால், உள்ளூர் கடற்றொழிலாளர்களும் பொது மக்களும் ​ மண்ணெண்ணெயைப் பெற்றுக்கொள்வதில் நெருக்கடி நிலைமையை எதிர்கொண்டுள்ளனர். புதுக்குடியிருப்பு எரிபொருள் நிலையத்துக்கு, ஓரளவான மண்ணெண்ணெயே கொழும்பில் இருந்து எடுத்துவரப்படும் நிலையில், சாலைப் பகுதியில் சட்டவிரோத மீன்பிடியில் ஈடுபடும் வெளி மாவட்டங்களைச் சேர்ந்த மீனவர்கள், வாகனங்களில் வந்து பரல் கணக்கில் மண்ணெண்ணெய் கொள்வனவு செய்வதால், உள்ளூரில் மண்ணெண்ணெய்க்கு தட்டுப்பாடு நிலவுகிறது. இதனால் தாங்கள், கிளிநொச்சி - பரந்தன் எரிபொருள் நிலையத்துக்கே செல்லவேண்டி உள்ளதாகவும் முல்லைத்தீவின் கரைதுறைபற்று எரிபொருள் நிலையத்தினூடாக, சுமார் 18 ஆயிரம் லீற்றர் வரையான மண்ணெண்ணெய்க்கு கேள்வி நிலவுகின்ற போதிலும், 6,600 லீற்றர் மண்ணெண்ணெய் மாத்திரமே அங்கு கொண்டுவரப்படுவதாகவும் தெரிவிக்கப்படுகின்றது. எனவே, கரைதுறைபற்று, புதுக்குடியிருப்பு எரிபொருள் நிலையங்களுக்கு, கூடுதலான மண்ணெண்ணெயை விநியோகம் செய்ய, உரிய அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டுமெனக் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.