பிரான்சில் பேரெழுச்சியாக இடம்பெற்ற மாவீரர் நினைவு சுமந்த மெய்வல்லுநர் போட்டி 2019 இன் இறுதிப்போட்டிகள்.!

breaking
பிரான்சில் பேரெழுச்சியாக இடம்பெற்ற மாவீரர் நினைவு சுமந்த மெய்வல்லுநர் போட்டி 2019 இன் இறுதிப்போட்டிகள்! பிரான்சு தமிழர் ஒருங்கிணைப்புக்குழு, தமிழர் விளையாட்டுத்துறை பிரான்சு 26 ஆவது வருடமாக நடாத்திய  மாவீரர் நினைவு சுமந்த மெய்வல்லுநர் போட்டி 2019 இன் இறுதிப்போட்டிகள் பிரான்சு சார்சல் நெல்சன் மண்டேலா மைதானத்தில் கடந்த (21.07.2019) ஞாயிற்றுக்கிழமை மிகவும் எழுச்சியாக நடைபெற்று முடிந்தது. கடந்த (13.07.2019) சனிக்கிழமை, கடந்த (14.07.2019) ஞாயிற்றுக்கிழமை மற்றும் (20.07.2019) சனிக்கிழமை ஆகியதினங்களில் தெரிவு மற்றும் இறுதிப்போட்டிகள் இடம்பெற்றிருந்த நிலையில் கடந்த 21.07.2019 ஞாயிற்றுக்கிழமை மாபெரும் இறுதிப்போட்டிகள் இடம்பெற்றிருந்தன. அன்றையதினம் சார்சல் நெல்சன் மண்டேலா மைதானப் பகுதியில் அமைந்திருக்கும் தமிழீழ விடுதலை புலிகளில் முதற்களப்பலியான லெப்.சங்கர் ஞாபகார்த்த நினைவுத்தூபி முன்பாக காலை 9.30 மணிக்கு இடம்பெற்ற ஆரம்ப வணக்க நிகழ்வில் ஈகைச்சுடர் ஏற்றப்பட்டு மலர்வணக்கம் செலுத்தியதைத் தொடர்ந்து முழவு (பான்ட்) வாத்திய அணிவகுப்புடன் விருந்தினர்கள் அழைத்து வரப்பட்டதைத் தொடர்ந்து, பொதுச்சுடரினை தமிழ் பெண்கள் அமைப்பின் செயற்பாட்டாளர் திருமதி மகேந்திரராஜா புஸ்பராணி அவர்கள் ஏற்றிவைக்க பிரெஞ்சுக்கொடியை சார்சல் நகரபிதா பற்றிக் கட்டாட் (Patrick Haddad) அவர்கள் ஏற்றிவைக்க, தமிழீழத் தேசியக் கொடியை பிரான்சு தமிழர் விளையாட்டுத்துறைப் பொறுப்பாளர் திரு.கிருபா அவர்கள் ஏற்றிவைத்தார். ஈகைச்சுடரினை 16.11.2007 அன்று மன்னார் நிலாச்சேனையில் இடம்பெற்ற நேரடி மோதலின் போது வீரச்சாவடைந்த சிறப்பு வேவுப்புலி மாவீரர் லெப். தழல்வீரன் (சிலம்பரசன்) அவர்களின் சகோதரி ஏற்றிவைக்க, 13.12.1998 அன்று ஒட்டுசுட்டான் பகுதியில் இடம்பெற்ற நேரடி மோதலின் போது வீரச்சாவடைந்த புரட்சி முதல்வனின் சகோதரன் மலர்வணக்கம்  செலுத்தினார். ஒலிம்பிக்  தீபத்தை மெய்வல்லுநர் போட்டி முகாமையாளர் திரு.இராஜலிங்கம் அவர்கள் மெய்வல்லுநர் போட்டித் தலைவன் செல்வன் பாலசுப்பிரமணியம் ரிசி மற்றும் மெய்வல்லுநர் தலைவி திருமதி சுரேஸ் நிரோஜினி ஆகியோரிடம் ஒப்படைத்தார். இருவரும் கழக வீரர்களுடன் மைதானத்தை வலம்வந்து ஒலிம்பிக் தீபம் ஏற்றப்பட்டது. தொடர்ந்து வீரர்கள், நடுவர்கள் சத்தியப்பிரமாணம் இடம்பெற்றதையடுத்து போட்டிகள் ஆரம்பமாகின. வீரர்களின் சார்பில் செல்வன் ரிசி அவர்களும் நடுவர்களின் சார்பில் தீர்ப்பாளர் திருமதி பா. உதயராணி அவர்களும் சத்தியப்பிரமாணம் எடுத்துக்கொண்டனர். போட்டிகளை மாவீரர் லெப்.தழல்வீரன்(சிலம்பரசன்) அவர்களின் சகோதரி திருமதி ரட்ணா அவர்கள் ஆரம்பித்துவைத்தார். தமிழர் வி.க. 93, தமிழர் வி.க. 94, தமிழர் வி.க. 95, யாழ்டன் வி.க., நல்லூர்ஸ்தான் வி.க., அரியாலை ஐக்கிய கழகம், வட்டுக்கோட்டை வி.க., ஈழவர் வி.க. எப்.சி.நெவ் த்றுவா வி.க. ஆகிய கழகங்களிடையே விறுவிறுப்பாக போட்டிகள் இடம்பெற்றிருந்தன. 26 வருடங்களாக பிரான்சு தமிழர் விளையாட்டுத்துறையினரால் நடாத்தப்பட்டுவரும் இந்த விளையாட்டுப் போட்டிகள் திறம்பட நடைபெறுவதற்கு அயராது உழைத்துவரும் தமிழர் விளையாட்டுத்துறை உறுப்பினர்கள், விளையாட்டுக் கழகங்கள், நீதிதவறாத நடுவர்கள் உணர்வுபூர்வமான அறிவிப்புடன் உற்சாகமான கரகோசத்துடன் அழைத்துவரப்பட்டமை மெய்சிலிர்க்கவைத்தது. தொடர்ந்து கழக வீரர்களின் அணிவகுப்பு சிறப்பாக அமைந்திருந்தது. அணிவகுப்பு மரியாதையினை பிரதமவிருந்தினராகக் கலந்துகொண்ட மாவீரர் லெப். தழல்வீரன்(சிலம்பரசன்) அவர்களின் சகோதரி திருமதி ரட்ணா, சார்சல் நகரபிதா பற்றிக் கட்டாட், பிரான்சு தமிழர் ஒருங்கிணைப்புக்குழு நிர்வாகப் பொறுப்பாளர் திரு.பாலசுந்தரம், தமிழர் விளையாட்டுத்துறை உறுப்பினரும் உதவிப்போட்டி முகாமையாளருமான திரு.பீலிக்ஸ், , தமிழ் பெண்கள் அமைப்பின் செயற்பாட்டாளர் திருமதி மகேந்திரராஜா புஸ்பராணி,  தமிழர் ஒருங்கிணைப்புக்குழு மாவீரர் பணிமனையின் துணைப்பொறுப்பாளர் திரு.பாக்கியநாதன் ஆகியோர் ஏற்றுக்கொண்டனர். மாவீரர் நினைவு சுமந்த உதைபந்தாட்டப்போட்டிகளின் இறுதிப்போட்டிகளும் கரப்பந்தாட்டப்போட்டிகளின் செற்றப் போட்டிகளும் குறித்த மைதானத்தில் சிறப்பாக இடம்பெற்றிருந்தன. உதைபந்தாட்டத்தின் இறுதிப்போட்டிகளில் சென் பற்றிக்ஸ் அணியும் என்.எஸ்.பரிஸ் அணியும் விறுவிறுப்பாக மோதியமை கண்கொள்ளாக் காட்சியாக இருந்தமை குறிப்பிடத்தக்கது. அணிவகுப்பில் நல்லூர்ஸ்தான்  வி.க. முதலிடத்தையும் யாழ்ட்டன் வி.க. இரண்டாமிடத்தையும் தமிழர் வி.க. 94 மூன்றாம் இடத்தையும் தமதாக்கிக்கொண்டன. [gallery type="slideshow" columns="1" size="full" bgs_gallery_type="slider" ids="80727,80728,80729,80730,80731,80732,80733,80734,80735,80736,80737,80738,80739,80740,80741,80742,80743,80744,80745,80746,80747,80748,80749,80750,80751,80752,80753,80754,80755,80756,80757,80758,80759,80760,80761,80762,80763,80764,80765,80766,80767,80768,80769,80770,80771,80772,80773,80774,80775,80776,80777,80778,80779,80780,80781,80782,80783,80784,80785,80786,80787,80788,80789"] ஆண்கள் உதைபந்தாட்டப் போட்டிகளில் சென் பற்றிக்ஸ் அணி முதலிடத்தையும் என்.எஸ்.பரிஸ் அணி இரண்டாமிடத்தையும் ஈழவர் அணி மூன்றாமிடத்தையும் பெற்றுக்கொண்டன. 13 வயதின் கீழ் ஆண்கள் உதைபந்தாட்டப் போட்டிகளில் ஈஸ்ரன் வி.க. முதலிடத்தையும் யாழ்ட்டன் வி.க. இரண்டாமிடத்தையும் வட்டுக்கோட்டை வி.க. மூன்றாமிடத்தையும் பெற்றுக்கொண்டன. 15 வயதின் கீழ் ஆண்கள் உதைபந்தாட்டப் போட்டிகளில் ரோமியோ வி.க. முதலிடத்தையும் தமிழர் வி.க. 93  இரண்டாமிடத்தையும், யாழ்ட்டன் வி.க. மூன்றாமிடத்தையும் பெற்றுக்கொண்டன. பெண்கள் உதைபந்தாட்டப் போட்டிகளில் யாழ்ட்டன் வி.க. முதலிடத்தையும் பரிஸ்சுப்பர் கிங்ஸ் வி.க. இரண்டாமிடத்தையும் நல்லூர்ஸ்தான் வி.க. மூன்றாம் இடத்தையும் பெற்றுக்கொண்டன. கரப்பந்தாட்டம் போட்டிகளில் தமிழ் இளைஞர் வி.க. 94 முதலிடத்தையும் விண்மீன்கள் 94 வி.க. இரண்டாம் இடத்தையும் பெற்றுக்கொண்டன. துடுப்பெடுத்தாட்டப்போட்டிகளில் அரியாலை ஐ.க. முதலிடத்தையும் ஈழவர் வி.க. இரண்டாமிடத்தையும் ஸ்கந்தா வி.க. மூன்றாம் இடத்தையும் பெற்றுக்கொண்டன. சிறப்புரையினை பிரான்சு தமிழர் ஒருங்கிணைப்புக்குழு பரப்புரைப் பொறுப்பாளர் திரு. மேத்தா அவர்கள் ஆற்றியிருந்தார். அவர் தனது உரையில், மாவீரர் நினைவு சுமந்த விளையாட்டுப் போட்டிகளில் கலந்துகொண்டு ஆதரவு தந்த அனைத்துக் கழகங்களையும் பாராட்டியதுடன், நன்றியறிதலையும் வெளிப்படுத்தியிருந்தார். அனைவரும் விளையாட்டுக்களில் மட்டுமல்லாமல் எமது ஏனைய தமிழ்த்தேசிய நிகழ்வுகளிலும் கலந்துகொள்ளவேண்டிய அவசியத்தையும் வலியுறுத்தியிருந்தார். தொடர்ந்து வெற்றிபெற்ற கழகங்களுக்கும் வீரர்களுக்கும் வெற்றிக்கிண்ணமும் பதக்கமும் வழங்கி மதிப்பளிக்கப்பட்டது. நிகழ்வின் ஆரம்பம் முதல் இறுதிவரை  திரு.குருபரன் , திருமதி கவிதா கஜேந்திரன், செல்வி துசி ஆகியோர் நிகழ்வினைத் தமது அறிவிப்பின் ஊடாகக் கொண்டு சென்றிருந்தனர். தடகள விளையாட்டு, மற்றும் அனைத்து விளையாட்டுக்கள் என்ற அடிப்படையில் இரண்டு சுற்றுக் கேடயங்கள் வழங்கிவைக்கப்பட்டன. அனைத்து விளையாட்டுக்களின் புள்ளிகளின் அடிப்படையில் முதல் இடத்தை யாழ்ட்டன் விளையாட்டுக் கழகமும் இரண்டாமிடத்தை தமிழர் விளையாட்டுக்கழகம் 93 உம்  மூன்றாம் இடத்தை நல்லூர்ஸ்தான் விளையாட்டுக்கழகமும் பெற்றுக்கொண்டன. தடகள விளையாட்டுக்களின் புள்ளிகளின் அடிப்படையில் முதல் இடத்தை 727 புள்ளிகளைப்பெற்று  யாழ்ட்டன் விளையாட்டுக்கழகமும் இரண்டாமிடத்தை 597 புள்ளிகளைப்பெற்று  நல்லூர்ஸ்தான் விளையாட்டுக்கழகமும் 379.5 புள்ளிகளைப்பெற்று மூன்றாம் இடத்தை தமிழர் விளையாட்டுக்கழகம் 93 உம் பெற்றுக்கொண்டன. தமிழீழத் தேசியக்கொடி பிரெஞ்சுக் கொடி,  கழகங்களின் கொடிகள் இறக்கப்பட்டதைத் தொடர்ந்து நிறைவாக நம்புங்கள் தமிழீழம் நாளை பிறக்கும் பாடலுடனும் தமிழரின் தாகம் தமிழீழத் தாயகம் என்ற தாரக மந்திரத்துடனும் நிகழ்வுகள் நிறைவுகண்டன.