லண்டன் குப்பையை கொண்டு வந்தது இவர்தானாம்.!

breaking
களஞ்சியத்தில் வைக்கப்பட்டுள்ள கழிவுகள் அடங்கியுள்ளதாக சந்தேகிக்கப்படும் 130 கொள்கலன் பெட்டிகளை இலங்கைக்கு இறக்குமதி செய்த Ceylon Metal Processing Corporation (Pvt) Ltd நிறுவனத்தின் உண்மையான உரிமையாளர் சசிகுமாரன் முத்துகுமார் என ஆங்கில இணையத்தளம் ஒன்று தெரிவித்துள்ளது. சசிகுமாரன் முத்துகுமார் அந்த நிறுவனத்தின் பணிப்பாளர் என்பதுடன் பயன்படுத்தப்பட்ட மெத்தைகளை இலங்கைக்கு அனுப்பியுள்ள இங்கிலாந்தில் இயங்கும் Vengaads Ltd என்ற நிறுவனத்தின் பணிப்பாளராகவும் கடமையாற்றுகிறார். Vengaads Ltd நிறுவனம் இரண்டு ஆண்டுகளுக்கு முன்பாக அதாவது 2017 ஆம் ஆண்டு மே மாதம் 19 ஆம்திகதி ஆரம்பிக்கப்பட்டுள்ளது. மறுசூழற்றி செய்யக் கூடிய உலோகங்கள் இலங்கைக்கு கழிபொருட்கள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாகவும் அதனை தாம் திரும்ப இங்கிலாந்து அனுப்பி வைக்க போவதாக இலங்கை அதிகாரிகள் அறிவித்துள்ளதை அடுத்து, விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. எனினும் இது சம்பந்தமான உரிய விசாரணைகளை மேற்கொள்ளுமாறு இலங்கை இன்னும் கோரிக்கை விடுக்கவில்லை என பிரித்தானியாவின் பேச்சாளர் ஒருவர் கூறியதாக த டெலிகிராப் பத்திரிகை கூறியுள்ளது. இதனிடையே சுகாதாரம் மற்றும் சுற்றாடலுக்கு பாதிப்பு ஏற்படுத்தும் கழிவு பொருட்கள் அடங்கிய கொள்கலன் பெட்டிகள் தொடர்பாக உரிய விசாரணைகளை மேற்கொள்ளுமாறு நிதியமைச்சர் மங்கள சமரவீர, சுங்க பணிப்பாளருக்கு நேற்று உத்தரவிட்டுள்ளார். வெளிநாடு சென்று நாடு திரும்பிய அமைச்சர், பிரச்சினை தொடர்பாக கவனம் செலுத்தியுள்ளதுடன் சுங்க பணிப்பாளருக்கு இந்த உத்தரவை பிறப்பித்துள்ளார். உலோகங்கள் போன்ற நகரங்களின் கழிவு பொருட்களை இலங்கைக்கு இறக்குமதி செய்ய வேண்டுமாயின், சுற்றாடல் அதிகார சபையின் அனுமதியை பெற வேண்டும். இந்த சட்ட ரீதியான தேவைகள் மற்றும் நிபந்தனையை மீறி இதற்கான அனுமதி வழங்கப்பட்டிருந்தால், அவர்களுக்கு எதிராக ஒழுங்காற்று நடவடிக்கை எடுக்க வேண்டும் என அமைச்சர் கூறியுள்ளார். கொள்கலன் பெட்டிகள் வைக்கப்பட்டுள்ள Hayleys Free Zone ஏனைய உலக வர்த்தக வலயங்களில் போன்ற மறு ஏற்றுமதிக்காக களஞ்சியப்படுத்தவும் பெறுமதி சேர் சேவைகளை வழங்கவும் 2013 இலக்கம் 1 சட்டத்தின் கீழ் ஸ்தாபிக்கப்பட்டுள்ள சட்ட ரீதியான நிறுவனம் என அந்த நிறுவனத்தின் முகாமையாளர் ருவான் வைத்தியரத்ன தெரிவித்துள்ளார். Hayleys Free Zone நிறுவனத்திற்கு இறக்குமதி செய்யப்படும் கொள்கலன்களை பரிசோதிக்கும் அதிகாரம் சுங்க திணைக்களத்திற்கு இல்லை. அவற்றை பரிசோதிக்கும் அதிகாரம் BOI அதிகாரிகளுக்கே உள்ளது. இதுவே இந்த பிரச்சினைக்கு காரணம் என சுங்க திணைக்களத்தின் தகவல்கள் தெரிவிக்கின்றன.