வறட்சியால் வவுனியாவில் 607 குடும்பங்கள் பாதிப்பு

breaking
  வடதமிழீழம்: வவுனியாவில் இன்று வரையான காலப்பகுதியில் 607 குடும்பங்களைச் சேர்ந்த 2013பேர் குடிநீர் இன்றி வறட்சியினால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் அவர்களுக்கான குடிநீர் மாவட்ட அனர்த்த நிவாரண சேவைகள் நிலையத்தினால் வழங்கிவைக்கப்பட்டு வருவதாக மாவட்ட அனர்த்த நிவாரண சேவைகள் நிலையத்தினால் தெரிவிக்கப்பட்டுள்ளது. வவுனியா மாவட்டத்திலுள்ள நான்கு பிரதேச செயலகப்பிரிவுகளில் நேற்று மாலை வரையான காலப்பகுதியில் 607குடும்பங்களைச் சேர்ந்த 2013பேர் குடிநீர் இன்றி பாதிப்படைந்துள்ளதாக கிராம அலுவலகரினால் பிரதேச செயலகங்களுக்கு அறிக்கையிடப்பட்டு மாவட்ட அனர்த்த நிவாரண சேவைகள் நிலையத்திற்கு புள்ளிவிபரத் தகவல்கள் வழங்கப்பட்டுள்ளதாகவும் வவனியா வெங்கலச் செட்டிகுளம் பகுதிகளிலுள்ளவர்களே அதிகமான வறட்சியினால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் இவ்வாறு பாதிப்பை எதிர்கொண்டுள்ளவர்களுக்கான குடிநீர் வழங்கும் நடவடிக்கை அந்தப்பகுதிகளில் தண்ணீர் தொட்டிகள் வைக்கப்பட்டு தண்ணீர் தாங்கிகளுடாக தண்ணீர் வழங்கப்பட்டு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. மாவட்ட செயலகத்திலுள்ள பௌதீக வளங்களை வைத்து விரைவாக இந்நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றோம். இன்னும் வறட்சியுடனான கால நிலை நீடித்துச் செல்லுமாக இருந்தால் பாதிப்படைபவர்களின் தொகை இன்னும் அதிகரிக்க வாய்ப்புக்கள் காணப்படுவதாகவும் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இவ்வாறான பல்வேறு நெருக்கடியான காலப்பகுதியில் இன்று முதலாம் திகதி மாலை 2மணிக்கு வவுனியா மாவட்ட ஒருக்கிணைப்புக்குழுக் கூட்டம் கைத்தொழில் வர்த்தக வாணிபத்துறை அமைச்சர் ரிஷாட் பதியூதீன் தலைமையில் கூடுகின்றது. காலை மன்னாரில் இடம்பெறவுள்ள ஒருங்கிணைப்புக்குழுக் கூட்டத்தில் கலந்து கொள்ளவுள்ள அமைச்சர் மாலை வவுனியா ஒருங் கிணைப்புக்குழுக்கூட்டத்தில் கலந்து கொள்ளவுள்ளதாக மாவட்ட செயலகத்தின் தகவல்கள் தெரிவிக்கின்றன. வவுனியாவில் குளங்களில் தண்ணீர் சேகரிக்கும் திட்டம் எவையும் இன்றுவரையிலும் மேற்கொள்ளப்படவில்லை. இத்திட்டத்தினை மேற்கொள்வதற்கு எவ்விதமான ஆக்கபூர்வமான நடவடிக்கைகளும் இன்று வரையிலும் முன்னெடுக்கப்படவில்லை. அவ்வாறான ஒரு நடவடிக்கை கடந்த காலங்களில் மேற்கொள்ளப்பட்டிருந்தால் இன்று வவுனியாவில் வறட்சியான கால நிலை ஏற்பட்டிருக்காது. மாவட்ட ஒருங்கிணைப்புகுழு கூட்டங்கள் சரியான முறையில் சீராக இடம்பெறு வதில்லை. அவ்வாறு இடம்பெற்றாலும் அதில் எடுக்கப்படும் நடவடிக்கைகள் பின்பற்றப்படுவதில்லை. சகல திணைக்களங்களிலுமுள்ளவர்கள் கலந்து கொள்வதும் கிடையாது மக்களின் அத்தியாவசிய பிரச்சினை ஒன்றினை கூட்டத்தில் முன்வைத்தால் அதற்கான பதிலை வழங்குவதற்கு கூட்டத்தில் அத்திணைக்களத்தின் அதிகாரிகள் கலந்துகொண்டு பதிலினை வழங்குவதில்லை. கூட்டத்தின் தலைமையேற்பவர் முறையான பதில்களை வழங்காமல் முன்வைக்கப் பட்ட கோரிக்கைக்கும் சரியான பதில் வழங்கப்படுவதில்லை என்றும் பொதுமக்கள் குற்றச்சாட்டுக்களை முன்வைத்துள்ளனர். நாட்டில் இடம்பெற்ற குண்டு வெடிப்பு பின்னர் இடம்பெற்ற அமைச்சர்கள் பதவி விலகல் என்பன பல்வேறு குழறுபடிகளுக்கு அப்பால் மாவட்ட ஒருங்கிணைப்புக்குழுக் கூட்டம் இன்று மாலை 2மணிக்கு இடம்பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.