ஒசாமா மகன் ஹம்ஸா பின்லேடன் பலி .!

breaking
அல்- கொய்தா பயங்கரவாத இயக்கத்தின் தலைவரான ஒசாமா பின்லேடன் கடந்த 2011 ஆம் ஆண்டு மே மாதம் பாகிஸ்தானில் உள்ள அபோடாபாத் நகரில் சுட்டுக்கொல்லப்பட்டதாக அமெரிக்கா அறிவித்தது. இதையடுத்து தனது தந்தையை கொன்றதற்காக அமெரிக்காவையும், அமெரிக்கர்களையும் பழிக்குப்பழி வாங்குவேன் என ஒசாமா பின்லேடனின் மகனான ஹம்ஸா பின்லேடன் எச்சரித்திருந்தார். பின்லேடனுக்கு பின்னர் அல்-கொய்தா இயக்கத்தின் தலைவராகவும், அல்-கொய்தா பயங்கரவாத இயக்கத்தின் முடிக்குரிய இளவரசராகவும்  பார்க்கப்படும் ஹம்ஸா பின்லேடனை கடந்த 2017 ஆம் ஆண்டு அமெரிக்கா சர்வதேச பயங்கரவாதியாக அறிவித்தது. அதுமுதல் ஹம்ஸா பின்லேடனை அமெரிக்கா தேடிவரும் நிலையில், அவர் பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான் உள்ளிட்ட நாடுகளில் பதுங்கி இருப்பதாகவும் ஈரானில் வீட்டுக் காவலில் இருப்பதாகவும் பல்வேறு தகவல்கள் வெளியாகின. இதற்கிடையே, ஹம்ஸா பின்லேடனின் வசிப்பிடம் பற்றி தகவல் கொடுப்பவர்களுக்கு ஒரு  மில்லியன் அமெரிக்க டொலர்கள் பரிசாக வழங்கப்படும் என்று அமெரிக்கா அறிவித்திருந்தது. இந்நிலையில், ஒசாமா பின்லேடனின் மகன் ஹம்ஸா பின்லேடன் சுட்டுக் கொல்லப்பட்டிருக்கலாம் என அமெரிக்க உளவுத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். கடந்த 2 ஆண்டுகளில் எடுக்கப்பட்ட கடும் நடவடிக்கைகளில் சிக்கி ஹம்ஸா பின்லேடன் கொல்லப்பட்டிருக்க வாய்ப்புள்ளதாக அமெரிக்க அதிகாரி ஒருவர் தெரிவித்தார். ஆனால், ஹம்ஸா பின்லேடன் இறந்த இடம் அல்லது திகதி குறித்த விவரங்கள் குறிப்பிடப்படவில்லை.