தேசியத் தலைவரின் கைக்கு இறுக்கமாக வலுவூட்டிய குடும்பத்தில் பிறந்த கப்டன்அக்கினோ...

breaking

போராட்டம். ....

இந்தச் சொல்லுக்குள் தான் எத்தனை விதமான உணர்ச்சி அலைகள் அடங்கி இருக்கின்றன.குடும்பம் என்ற சிறிய பரப்புக் குள் சில மனிதர்கள், சில உணர்வுகளென்று வாழ்ந்த நாம் 'விடுதலை இயக்கம்' என்ற விரிந்த பரப்புக்குள் வந்ததால் , எத்தனை விதமான உள்ளங்களை , சந்தோசங்களை, பிரிவுத்துயரங்களை வாழ்வின்உண்மைகளைக் கண்டுகொண்டிருக்கிறோம்.

எமது போராட்ட வாழ்வில் உன்னதமான உள்ளங்களோடு பழகும்போது சந்தோசப்படும் நாங்கள், பிரிவு என்று வருகின்ற போது அதிகமாகத்தாக்கப்படுவதென்னவோ உண்மைதான். கப்டன் அக்கினோவின் உள்ளம் கூட அந்த உன்னதமான உள்ளங்களில் ஒன்றுதான்.

மிகவும் வசதியான குடும்பம். வாழ்வில் பொருளாதாரக் கஸ்டங்களையோ , துன்பங்களையோ கண்டிராத செல்வந்தமானகுடும் பச்சூழலின் கடைசிப்பிள்ளை தான் அக்கினோ.

"நாங்கள் செல்லமாக வளந்தனாங்கள், போராட்ட கஸ்டங்களை எங்களால் தாங்க ஏலாது" என்று சொல்கின்றவர்களுக்கு அக்கினோ வாழ்ந்து காட்டி இருக்கின்றாள். விடுதலை உணர்வுக்கு முன்னால் வேறெந்தப்புறஉலக உணர்வுகளும் தாக்குப்பிடிக்க முடியாது என நிரூபித்திருக்கின்றாள். ஏனென்றால் ?

அக்கினோவும் ஒரு செல்லப்பிள்ளைதான். பாடசாலை நாட்களில் அக்கினோவைக் கண்டவர்கள், பழகியவர்கள் அக்கினோவைப் பற்றிக்கூறும் தகவல்கள். "இவள் எப்படி இந்த வாழ்வை ஏற்றுக்கொண்டாள்?" என ஆச்சரியப்படவைக்கும்.

அக்கினோவின் எடுப்பான தோற்றம் அவளைப் பற்றியபார்வையில் ஒரு தவறான கணிப்பைக் கொடுத்திருக்கலாம். ஏன்? நாம் கூட. "இவள் எப்படி எல்லாப் போராளிகளோடும் ஏற்றத் தாழ்வின்றிப் பழகப் போகிறாள்?" என நினைத்ததுண்டு. ஆனால் பழகிய போது புரிந்தது. அவள் இதயத்தில் ஏற்றத் தாழ்வுக்கு இடமில்லை என்று .

அக்கினோவின் அப்பா தமிழீழத்தின் நேதாஜி மாமனிதர்.  (நன்றி வேர்கள் இணையம்)தமிழீழ விடுதலைப்போராட்டத்தின் ஆரம்ப காலத்தில் எங்கள் தலைவனின் கைக்குஇறுக்கமாகவலுவூட்டியவர்.

உண்மைதான் இப்படி ஒரு தந்தைக்குப் பிறந்த குழந்தைகள் எப்படி எங்கள் மண்ணை நேசிக்காமல் இருக்கமுடியும்? அக்கினோவின் அப்பா மட்டுமல்ல அவளது அக்கா கூட எங்கள் அமைப்பில்தான் இருக்கின்றாள்.அப்பாவின் தலைமறைவு வாழ்க்கைக்காலத்திலும், அப்பாவின்நிரந்தரமறைவின் பின்னான வாழ்க்கைக் காலத்திலும், அந்தத் துன்ப நிகழ்வுகளின் தாக்கம் அம்மாவை அதிகம் தாக்காது இருப்பதற்காக தனது கலகலப்பையே தாயின் கவசமாக்கினாள் அக்கினோ.

இன்று எல்லாத் துயரங்களைமே அம்மா தனியாகச் சுமந்துகொண் டிருக்கிறாள் . அக்கினோ எம்மோடு இருந்த போது ஒருநாள்.

'அப்பாவின்ரை படத்துக்கு இட துபக்கம் என்ரை படமும் வலது பக்கம் அக்காவின்றை படமும் வைக்க இடம் விடுங்கோ அம்மா' என்று தாயிடம் சொன்னதாகச் சொன்னாள்.

எங்களுடைய ஒவ்வொரு போராளிகளும் ஒன்றை ஆழமாக உணர்ந்திருக்கிறார்கள்.என்றோ ஒருநாள் அது இன்றோ.......

நாளையோ .......

அல்லது இன்னும் சில காலங்களில் பின்னோ. இந்த மண்ணிற்கான மரணத்தை நாம் சந்திப்போம் என்ற உண்மை தான் அது. அதனால் தான் என்னவோ , சண்டைக்கு போக வேண்டும் என்று எல்லோரும் சண்டை பிடித்துக்கொள்கிறார்கள்.

அப்படித்தான் அக்கினோவும்.

சண்டை என்றதும் அவள் சந்தோசப்படுகின்ற கணங்களைத் தான் பார்த்திருக்கின்றோம்.

விடுதலைபுலிகள் எல்லோருமே கூறுகின்ற, 'நல்லா அடிபட வேணும். நிறைய அயுதங்கள் எடுக்கவேணும் அதுக்குப்பிறகுதான் சாகவேணும் என்பதைத் தான் அக்கினோவும் சொல்லிக் கொண்டிருப்பாள்.

கட்டுவன்சந்தி இராணுவ மினி முகாம் முன்னால் இவள் காவல்நின்ற காலம்......

இவள் தான் குழுவின் இரண்டாவது பொறுப்பாளர் பலாலி இராணுவத்தினர் அடிக்கடி வெளியேற முற்படும் முக்கிய பாதைகளில் கட்டுவன் சந்தியும் ஒன்று. இந்தமினிமுகாமிற்கு முன்னால் காவல்நிற் கும் எங்கள் குழுவில் அடிக்கடி உறுப்பினர்களை மாற்றவேண்டிவரும். ஏனென்றால் அடிக்கடி தாக்குதல் நடக்கும்போதோ, அல்லது வெளியேறும்போதோ எம்மில் பல போராளிகள் வீழ்ந்திருப்பார்கள். அல்லது காயப்பட் டிருப்பார்கள்.

அக்கினோ வருவதற்கு ஐந்து நாட்கள் முதல்தான் கட்டுவன் நிலையிலிருந்து வெளியேற முற்பட்ட இராணுவத்தினருடன் மோதியதில் சுந்தரியுடன் எட்டுப் போராளிகள் வீரமரணமடைந்தனர். அக்கினோ சென்ற நான்கு நாட்களுக்குள் திரும்பவும் அந்த இடத்தில் இராணுவம் வெளியேறியது. கப்டன் சுந்தரி வீரச்சாவடைந்த தாக்குதலில் ஏற்பட்ட எமது தரப்பு இழப்பு அவளை உற்சாகப்படுத் தியிருந்தது போலும், அனால் அன்றைய சண்டை முடிவோவேறு மாதிரி இருந்தது. அன்று எதிரிகளை பின்வாங்கச் செய்ததில் அக்கினோவின் துப்பாக்கிக்கு அதிகபங்குண்டு.

 

அக்கினோவுக்கு கணிசமான ஆங்கில அறிவுண்டு. அத்தோடு எந்தத்துறையிலும் விடயங்களை கிரகிக்கும் ஆற்றலுண்டு. தான் பெற்றிருக்கும் அறிவினை சக போராளிக்குச் சொல்லிக் கொடுக்க வேண்டும் என்ற துடிப்பு அவளுக்கு நிறையவே இருந்தது. அதனால்தான் பயிற்சி முகாமில் கூட கடும் பயிற்சிகளுக்கு நடுவேயும் அவள் இரவில் அவர்களுக்காக ஒரு மணிநேரம் ஒதுக்கி வைத்திருந் தாள்.

வவுனியாவில் இராணுவம் வெளியே வந்த காலத்தில் காட்டின் ஒரு பக்கத்தில் இவளின் குழுவும் நின்றது. திசைகாட்டியை (கொம்பாஸ்) எவ்வாறு படிக்க வேண்டும், என்று எல்லோருக்கும் தெரிந்திருக்க வேண்டும். எந்த நேரமும்வந்து விழுந்து வெடித்துக் கொண்டிருக்கும் செல்களுக்கும் நடுவே ஒரு இடத்தைக் குறிவைத்து திசைகாட்டி மூலம் அந்த இடத்துக்குப் போய் வந்து, பின்னர் தனது குழுவினருக்கும் அவ்வாறே காட்டிக் கொடுத்து, போய்வரப் பழக்கினாள்.

காட்டிலே போர் நடக்கும் போது காடுமாற நேரிட்டால் அதுவே போராளிகளின் இழப்புக்கு மிகப் பெரிய காரணமாகிவிடும். போராளிகளின் இழப்பு ஒரு புறமும், இராணுவ முன்னேற்றம் மறுபுறமுமாகப்பாதகமான தாக்கங்களுக்கு, தான்காரணமாயிருக்கக் கூடாது என்பதில் அவள் உறுதியாக இருந்தாள்.வவுனியாவில் இருந்து வந்தவுடன் ஆனையிறவுச்சண்டை ஆரம்பித்துவிட்டது. வெட்ட வெளிகளில் இராணுவத்தினரை இறக்க விடாது காவல் செய்யும்பகுதியில் அவள்கடமையிலீடுபட்டிருந்தாள்.

அடுத்தடுத்துச் சண்டைகள். ஓய்வெடுக்க எமது போராளிக ளுக்கு நேரமில்லை . குண்டுச்சத்தங்களுக்கும் குருதிவெள்ளத்துக்கும் நடுவே எங்கே நாங்கள் ஓய்வைத் தேடுவது?

எப்படி ஓய் வெடுப்பது?

முப்படைத் தாக்குதலுக்கும் முகம் கொடுத்தபடி முன்னேற வேண்டியவர்களாயிற்றே நாங்கள். களைப்பும் அலுப்பும் இருக்கத்தான் செய்யும். ஆனால் அவையே எங்களைக் கட்டுப்படுத்திவிட முடியுமா?

நித்திரை என்பது எங்களை விட்டு நிரந்தரமாகவே வெளியேறிவிட்டால் என்ன வென்று எண்ணுபவர்கள் நாங்கள். கண்ணுக்குள் நித்திரைசுழன்று

கொண்டிருக்கும். அரைக் கண்ணில் ஆடி ஆடித் தான் நடந்தாலும் கண் மூடிவிடமுடியுமா? கண்முடக் கண் மூட எம் தேசம் காணாமல் போய் விடுமல்லவா?

அதனால் தான்.....

ஓய்வு இல்லாத தேசத்தின் எந்த எல்லையில் சண்டை நடந்தாலும் அங்கு எட்டி நடந்து கொண்டிருக்கின்றோம்.

ஆனையிறவுச்சண்டையின் வேகம் குறைய மணலாற்றில் சண்டை ஆரம்பித்துவிட்டது. அக்கினோவின் குழுவும் மணலாற்றிற்கு விரைகிறது. மணலாறு எங்கள் தேசத்தின் மையப்புள்ளி. மணலாற்றுக்காடு தான் எங்கள் தாய்வீடு. பிராந்துகளிடமிருந்து செட்டைக்குள்ளாய் எமை வளர்த்த தாய்க் கோழி. பிராந்திய வல்லரசு ஒன்றை எமது பிரதேசத்திலிருந்து பின்வாங்கச் செய்யுமளவிற்கு அவர்களுக்கு இழப்பைஏற்படுத்திய இடம். அங்குலம் அங்குலமாக அந்நிய இராணுவம் கால் பதித்து தேடியபோதும் தமிழீழத் தின் தலைவரை தக்க வைத்துக் காத்த பெருமை மணலாற்றிற்கு மட்டும் தான் உண்டு. குண்டு களைத்தாங்கித் தாங்கியே மணலாற்றுக்காடு வலிமை பெற்றுவிட்டது. உரிமைப்போர் அல்லவா.

உக்கிரமான சண்டைதான். காடு பற்றி எரிகின்றது. எங்கும் ஒரே புகை மண்டலம் தான். மண லாறு மண் அதிர்ந்து கொண்டே இருக்கின்றது. முதல் நாள் சண்டையின் போது அக்கினோ நின்ற பக்கமாக இராணுவம் முன்னேறியது. அங்குல நிலம் கூட எதிரியை அசையவிடாத சண்டை. அக்கினோவின் குழுவில் இரண்டு போராளிகள் விழுந்து விட்டார்கள். ஒரு உடல் கைப்பற்றக் கூடியதாக இருந்தது. ஆனால் அடுத்த து......

எங்களுக்கும் அவர்களுக்குமிடையில் ......

அவர்களுக்கு மிக நெருக்கமாக.....

வீழ்ந்த போராளிகளின் உடல்களை மீட்பதற்காகவே புதிய போராளிகள் விழுகின்றவரலாறுதானே எம்வரலாறு. போர்நிலமை உடனுக்குடன் பொறுப்பாளருக்கு அறிவிக்கப்படவேண் டும். அக்கினோ அறிவிக்கின்றாள்."உடலை எடுப்பது கஸ்டம் தான் அக்கா. ஆனால் எப்படியும் நான் எடுப்பேன்"தலைநிமிர்த்த முடியாதளவுக்கு தரையோடு தரையாக வரும் துப்பாக்கி சூடுகளுக்கு அடியில் ஊர்ந்து முன்னேறினாள். எப்படியோ உடலை எடுத்துவிடுகிறாள். அந்த இடத்தில் அனைவருக்கும் ஒரு உறுதி பிறக்கிறது. கடைசிவரைக்கும் இச்சண்டை யில் எந்த உடலும் எம்மால் கைவிடப்படக் கூடாது என்பதில் எல்லோரும் முனைப்பாக இருந்தோம்.

ஒத்துழைக்க மறுத்தகாட்டுச் சூழலாலும், நித்திரையோ குளிப்போ இல்லாத கடமையின் இறுக்கத்தாலும் அநேகமான போராளிகளுக்கு காய்ச்சல் வந்துவிடுகின்றது. அக்கினோவுக் கும்காய்ச்சல் தான்.காய்ச்சலுடன்தான் மணலாற்றுப்பகுதியில் மகளிர் பிரிவுக்கான மருந்து, உணவு, ரவை விநியோகங்களைப் பொறுப்பெடுத்துச் செய்து கொண்டிருந்தாள்.

இராணுவத்தினர் ஒரு பக்கமாக முன்னேற முயற்சிக்க, அக்கினோ அந்த இடத்துக்கு விரைந்து, போராளிகளுக்கு நிலைமையை விளங்கிக் கொண் டிருக்கும்போது, அவளது அடுத்த குழு நின்ற பக்கமாக விமானம் பதிந்து எழுந்தது. நிலைமையை நேரில் பார்ப்பதற்காகஅக்கினோ அந்த இடத்திற்கு ஓடினாள்.

உருக்கும்போது விளங்கிகளுக்குஇன்னொரு தடவை அந்த விமானம் பதிந்து எழுந்தது.

அக்கினோவின் தசைத்துணுக்குகளும், குருதித்துளிகளும் மணலாற்று மரங்களில் தெறித்தன. அக்கினோபோன்ற நூற்றுக்கணக்கானோரின் இறுதிக் கணங்களை அறிந்து கொண்ட அந்த மணலாற்றுக்காடு இன்று மீட்கப்பட்டுவிட்டது. இந்தியப் போரின் பின் இது இரண்டாவது சண்டை, முன்னையை விட இப்போது உறுதியாய் நிற்கும். மணலாற்றுக் காடு இனி வரும் காலங்களில் இன்னும் உறுதியாய் எழுந்து நிற்கும். ஏனென்றால் அதற்குத் தெரியும் தன்னுள் உறங்கும் எங்கள் நண்பர்களைப்பற்றி.


|வெளியீடு -களத்தில் 

|நன்றி வேர்கள் இணையம்