தீவிரவாதிகளை நுழையவிட்டு நல்லூரில் தமிழர்களின் வேட்டியை சோதனையிடும் பேரினவாத அரசு.!

breaking
வரலாற்றுச் சிறப்புமிக்க நல்லூர் ஆலய வருடாந்த மகோற்சவம் இன்று கொடியேற்றத்துடன் ஆரம்பமாகியுள்ள நிலையில், ஆலயத்திற்கு சென்ற பக்தர்கள் சிங்களப் பொலிஸார் மற்றும் விசேட அதிரடிப்படையினரின் செயற்பாடு தொடர்பாக கடும் விசனம் வெளியிட்டுள்ளனர். ஐ.எஸ்.ஐ.எஸ் தீவிரவாதிகள் கொழும்பிலும் கிழக்கு மாகாணத்திலும் உள்ள கிறிஸ்தவ தேவாலயங்களில் வெடிகுண்டுத் தாக்குதல்களை நடத்தி பெருமளவான மக்களைக் கொன்றுகுவித்துள்ளதைத் தொடர்ந்து சிறிலங்காவில் படையினரும் பொலிஸாரும் வீதிக்கு இறக்கப்பட்டனர். வட தமிழீழம் , யாழ்ப்பாணம் உட்பட வடக்கு மாகாணத்தில் பாதுகாப்பு என்ற போர்கையில் தமிழ் மக்கள் பெரும் அசௌகரியங்களுக்கு உள்ளாக்கப்பட்டு வருகின்றனர். யாழ்ப்பாணத்தில் பல பிரதேசங்களிலும் வீதிச் சோதனைகள் இன்றுவரை நடைபெறுகின்றன. இந்தநிலையில், நல்லூர் முருகன் ஆலய மகோற்சவம் ஆரம்பமாகியதைத் தொடர்ந்து வரலாற்றில் என்றுமில்லாதவாறு நல்லூர் கடும் பாதுகாப்பிற்கு உட்படுத்தப்பட்டுள்ளது. நல்லூர்க் கந்தசுவாமி ஆலயத்திற்குள் பக்தர்கள் நுழைகின்ற அனைத்து வாயில்களிலும் சோதனைச் சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. ஆலயத்திற்குச் செல்கின்ற பக்தர்கள் வயது வேறுபாடின்றி சோதனை செய்யப்பட்ட பின்னரே அனுமதிக்கப்படுகின்றனர். இதனால் புனிதமாக ஆலயத்திற்குச் செல்லும் பக்தர்கள் விரக்தி அடைந்துள்ளனர். கடும் யுத்தம் நடைபெற்றபோது கூட நல்லூர்க் கந்தன் ஆலய வழிபாட்டிற்குச் செல்வதற்கு இத்தகைய  நெருக்கடிகளை எதிர்நோக்காத தாங்கள் தற்போது பெரும் சிரமங்களை எதிர்நோக்குகின்றனர் என பக்தர்கள் கருத்துக் கூறியுள்ளனர். சோதனைக்காக பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருக்கவேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் குழந்தைகளுடன் செல்வோரும் வயோதிபர்களும் சிரமங்களை எதிர்நோக்குகின்றனர். தங்களைத் தொட்டு சோதனை செய்யும் சிங்களப் படையினர் ஒருமாத காலம் மாமிசம் புசிக்காமல் இருப்பார்களா? புனிதமாக ஆலயத்திற்குச் செல்லும் எங்களை மாமிசம் புசித்துவிட்டு நிற்கும் படையினர் எப்படி தொட்டுச் சோதனையிட முடியும் எனவும் பக்தர்கள் கேள்வி எழுப்பியிருக்கின்றனர். பொலிஸாரும் படையினரும் பாதுகாப்புக் கடமையில் ஈடுபடட்டும். ஆனால், இந்தச் சோதனை நடவடிக்கை தங்களுக்கு தேவையில்லை என பக்தர்கள் தெரிவித்துள்ளனர்.