தென்கரையாக விழுங்கப்படும் வவுனியா வடக்கு

breaking
வவுனியா வடக்குப் பகுதி அமைதியாக இருக்கிறது. அண்மைக்காலமாக அப்பகுதியிலிருந்து எவ்விதமான செய்திகளும் வருவதில்லை. வெளித்தோற்றத்துக்கு அப்படித்தான் இருக்கிறது. வவுனியா வடக்கின் தெற்குப் பக்கமாக இருக்கின்றன அடர்காடுகளுக்குள் நுழைந்து பார்த்தால், பெருமரங்கள் மட்டுமே நிற்கின்றன. காடுகளுக்குள் மிக விரைவாக குடில்கள் முளைக்கின்றன. அடர்காடுகள் என அடையாளமாகியிருந்த இடங்கள், செறிவான மரங்களுடையனவாக மாறிக்கொண்டிருக்கின்றன. எங்கிருந்தோ வரும் சிங்கள மக்களும், பௌத்த மத தலைவர்களும் தங்களுக்கான இடங்களைப் பிடிப்பதிலும், புதிய கட்டடங்களை அமைப்பதிலும் இரவுபகல் பாராது உழைத்துக்கொண்டிருக்கின்றனர்.

கட்டுரையாசிரியர் குறிப்பிடும் இந்தப் பகுதி வட மத்திய மாகாணத்தையும், வட மாகாணத்தையும் பிரிக்கும் எல்லைக்கோடு இந்த இடத்தின் ஊடாகத்தான் கீறப்பட்டிருக்கிறது. வட மாகாணத்தின் வவுனியா மாவட்டத்துக்குரிய கச்சல்சமளங்குளம், முதலிக்குளம், ஊற்றுக்குளம், கொக்கச்சாங்குளம் ஆகிய தொன்மைக் கிராமங்கள் இந்த எல்லைக்கோட்டின் அருகே இருக்கின்றன. கடந்தகாலத்தில் இடம்பெற்ற போர் நடவடிக்கைகள், எல்லைக்கிராமங்களில் ஏற்பட்ட வன்முறைகள் காரணமாக இங்கிருந்த தமிழர்கள் முற்றாக இடம்பெயர்ந்து வேறிடங்களுக்குச் சென்றுவிடவே, தற்போது இக்கிராமங்கள் அடர்வனமாக மாறிவிட்டன.

அடர்வனமாக மாறிவிட்ட இந்தப் பகுதிகள்தான் இப்போது சிங்கமயப்பட்டுக்கொண்டிருக்கின்றன.

எப்போதோ ஆரம்பித்துவிட்டது

இக்குடியேற்றம் இன்று நேற்று திடீரெனத் தோன்றியவையல்ல. 1983, 1984 ஆம் ஆண்டுகளில் பதவி என்கிற சோழ ராச்சியத்தின் நிர்வாக மையத்தை, பதவியா என சிங்களத்திற்குப் பெயர்மாற்றி குடியேற்றங்கள் நடத்தப்பட்டன. அதன் நீட்சிதான் வவுனியா வடக்கு பகுதியின் எல்லைக்குள் நுழைந்திருக்கிறது.

தற்போதைக்கு வவுனியா நகரிலிருந்து பார்த்தால், 1990 ஆம் ஆண்டுகளில் இருந்து சிங்கள குடியேற்றங்கள் வவுனியா நகரை அண்மித்த பகுதியில் ஏற்படத்தொடங்கியிருக்கின்றன. மடுகந்தை பெரியளவிலான குடியேற்றத்தை முதலில் கண்டது. அது அப்படியே பரவலடைந்து, எட்டம்பகஸ்வெவ, ஈரப்பொத்தானை, மாமடு என விரிவடைந்திருக்கிறது. 2009க்குப் பின்னர் விரைவான குடியேற்றங்களும் புதிய காடழிப்புக்களும் இப்பகுதியில் இடம்பெற்றிருக்கின்றன. அது வளர்ச்சியடைந்து, வட மத்திய மாகாணத்தின் எல்லைக்குள் நுழைந்து அம்மாகணத்தின் குறுக்காகப் பரவியிருக்கிறது. அந்தப் பரவல் குறித்த மாகணத்தின் ஒரு பகுதியை முழுவதுமாக நிரவி, 2014ஆம் ஆண்டளவில் அளவில் வடமாகாணத்தின் இறுதி எல்லையான வவுனியா வடக்கிற்குள் நுழைந்துவிட்டது. 2019 இன் நடுப் பகுதி வரையில் வவுனியா வடக்கின் வெடிவைத்தகல்லு வரைக்கும் பரவியிருக்கிறது. அதாவது வவுனியா நகரம், அனுபுரத்தின் வடமுனை வவுனியா வடக்கின் தென்பகுதி வரைக்கும் குறுக்காக நன்கு திட்டமிட்ட வகையில் புதியதொரு சிங்கள குடியேற்றம் ஏற்படுத்தப்பட்டிருக்கிறது. எவ்விடத்திலும் மாற்றினத்தவரின் குடியேற்றங்கள் குறுக்காக வந்துவிடாத வகையில் மாகாண, மாவட்ட, பிரதேச நிர்வாக எல்லைகளையெல்லாம் கவனத்தில் எடுக்காது, தொடர்ச்சியான குடியேற்றம் செய்யப்பட்டிருக்கிறது. (வரைபடத்தில் சிவப்புக் கோடிட்ட பகுதியைக் கவனிக்க)

கலாபோகஸ்வெவ எனப் பெயர்மாறிய கச்சல்சமளங்குளம்

இவ்வாறு வவுனியா வடக்கிற்குள் நுழைந்துவிட்ட சிங்கள குடியேற்றத்தின் பெயர் கலாபோகஸ்வெவ. அதாவது கச்சல் சமளங்குளத்திற்கு இடப்பட்டிருக்கும் சிங்களப் பெயர் கலாபோகஸ்வெவ. வவுனியா வடக்கின் வெடிவைத்தகல்லு கிராமசெயலாளர் பிரிவுக்குள் உள்ளடக்கப்பட்டிருக்கிறது. அப்பகுதிக்குள் கிட்டத்தட்ட 400 வரையிலான சிங்கள குடும்பங்கள் குடியேற்றப்பட்டுள்ளார்கள் என அங்கு கடந்த வருடம் தெரிவிக்கப்பட்டது. அங்கு உண்மையில் எவ்வளவு சிங்கள குடும்பங்கள் உள்ளன என்பதை அறிவதற்கு கடந்த மூன்று மாதங்களுக்கு முன்னர். கட்டுரையாளர் வவுனியா வடக்கு பிரதேச செயலகத்திற்கு விண்ணப்பித்த தகவல் அறியும் உரிமைச்சட்ட விண்ணப்பபப்படிவத்திற்கு இன்னமும் உரிய பதில் வழங்கப்படவில்லை. அண்மையில் அரசினால் வவுனியா வடக்கு பகுதியில் வாழும் வறிய குடும்பங்களுக்கு வழங்கப்பட்ட சமுர்த்தி கொடுப்பனவுக்கான சான்றிதழ்களைப் பெற வந்தவர்களில் தமிழர்களைவிட சிங்களவர்களே அதிகம் என அதில் கலந்துகொண்ட தமிழர்கள் முணுமுணுத்துக்கொண்டனர்.

எப்படி உருவானது இந்தக் குடியேற்றம்

இந்தக் குடியேற்றங்களை வடக்கில் சிங்களவர்களுக்கான சமூக, பண்பாடு பொருளாதார நலன்களை முன்னெடுக்கும் நிறுவனம் ஒன்று ஆரம்பத்தில் மேற்கொண்டிருக்கின்றது. இதற்கான நிதிப் பங்களிப்பை அவுஸ்திரேலியாவைச் சேர்ந்த ஓய்வுபெற்ற பேராசிரியர் ஒருவர் செய்துள்ளார். குறித்த பேராசிரியரின் நிதிப்பங்களிப்பில் அமைக்கப்பட்ட வீடுகளை 2014 ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் 14 ஆம் திகதி இராணுவம் பொதுமக்களிடம் கைளித்திருகின்றது. இவ்வாறு நிகழ்ந்த குடியேற்றமே இன்றளவில் எவ்விதமான கணக்குத் தொகையும் இன்றி வளர்ந்திருக்கின்றது. இந்தக் குடியேற்றங்கள் இப்போதும் நடந்துகொண்டுதான் இருக்கின்றன. காடுகளுக்குள் புதிய வீதிகள் அமைக்கப்பட்டுக்கொண்டிருக்கின்றன. ஆங்காங்கே மண்ணாலான குடில்கள் அமைக்கப்பட்டுள்ளன. பெரிய கட்டடங்களை அமைப்பதற்கான மணல், தளபாடங்கள் பறிக்கப்பட்டிருக்கின்றன. புத்தர் சிலைகளும், கொடிகளும் காடுகளுக்குள் கட்டப்பட்டுள்ளன. கீழ்க் காடுகள் அழிக்கப்பட்டு, சிறுகுடில்களும் அமைக்கப்படுகின்றன.

சபுமல்கஸ்கட சைத்திய

சபுமல்கஸ்கட சைத்திய

கச்சல்சமளங்குளத்தின் அண்மைப் பகுதியான கொக்கச்சாங்களும் – ஊற்றுக்குளம் பகுதியில் அமைக்கப்பட்டுவரும் பௌத்த சைத்தியத்தின் பெயர்தான் சபுமல்கஸ்கட சைத்திய. புராதன தொல்லியல் சிதைவுகள் காணப்படும் இவ்விடத்தை 2013 ஆம் ஆண்டிலிருந்து இராணவம் பாதுகாத்து வந்தது. தற்போது பௌத்த சிதைவுகளைப் பாதுகாக்கும் சில அமைப்புக்களும், பிக்குமாரும் பொறுப்பெடுத்து புதிய விகாரைகளையும் கட்டடங்களையும் அமைத்துவருகின்றனர். பௌத்த மதப் பிக்குகளும் இங்கு தங்கியிருக்கின்றனர்.

புனரமைக்கப்பட்டது குளம்

ஏற்கனவே குறிப்பிட்டதைப் போல கச்சல்சமளங்குளம் மிக நீண்டகாலமாகவே கைவிடப்பட்டிருந்தது. இதனால் பயன்படுத்த முடியாதளவுக்கு சேதமடைந்திருந்தது. கடந்த வருடம் வவுனியா வடக்கு பிரதேச செயலாளர் பிரிவுக்குள் இருக்கும் இக்குளத்தை அனுராதரபுரம் கமநல சேவைகள் திணைக்களம் மீள்புனரமைப்பு செய்துகொடுத்திருக்கிறது. அதாவது சிங்கள மக்களைக் குடியேற்றும் நோக்குடன் இந்தக் குள புனரமைப்பு மிகவேகமாக வட மத்தியமாகாணத்துக்குள் வரும் அரச திணைக்களத்தினால் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

நீரற்ற மகாவலி நதியைக் கொண்டு நடத்தப்படும் குடியேற்றவாத அரசியலின் இன்னொரு கட்டம்தான் இது. தமிழர்களின் நிலத்தொடர்ச்சியை முற்றாக சிதைக்கும் நோக்குடன் உருவாக்கப்பட்ட மகாவலி எல் வலையத்திற்குள்தான் இந்தப் பகுதிகள் வருகின்றன. இது இப்படியே பரவலடைந்தால் முல்லைத்தீவு மாவட்டத்தின் கரைதுறைப்பற்று பிரதேச செயலாளர் பகுதிக்குள் மேற்கொள்ளப்பட்டுவரும் சிங்கள குடியேற்றங்களுடன் விரைவில் இணையும். அவ்வாறு இணையும்போது வவுனியாவிலிருந்து கொக்கிளாய் முகத்துவாரம் வரையில் குறுக்காகப் பெரியதொரு சிங்கள குடியேற்றம் அமையும். அது தனியான நிர்வாக அலகாகவும், தேர்தல் காலங்களில் தமிழர்களின் பிரதிநிதித்துவத்தைக் குறைக்கும் தந்திரமாகவும் மாறும். இந்தப் பகுதிகளில் தனியான நிர்வாக அலகுகள் உருவாக்கப்படும் வேலைத்திட்டங்கள் ஏற்கனவே ஆரம்பித்துவிட்டன என்பதையும் கவனத்தில் கொள்ள வேண்டும்.

-ஜெரா-