ஒட்டுக்குழுவான புளொட் கூட்டமைப்பில் இருந்து விலகாதாம்!

breaking
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பில் இருந்து தமது கட்சி விலகிக் கொள்ளாது என, புளொட் தலைவர் தர்மலிங்கம் சித்தார்த்தன் தெரிவித்துள்ளார். பொதுஜன பெரமுனவின் அதிபர் வேட்பாளராக பெயரிடப்படவுள்ள, கோத்தாபய ராஜபக்சவை, புளொட் தலைவர் தர்மலிங்கம் சித்தார்த்தன் கடந்தவாரம் சந்தித்திருந்தார். இதையடுத்து, கூட்டமைப்பில் இருந்து புளொட் விலகவுள்ளதாக வதந்திகள் பரவியுள்ள நிலையில், கொழும்பு ஆங்கில நாளிதழ் ஒன்றுக்கு அளித்த செவ்வியில், தர்மலிங்கம் சித்தார்த்தன் அதனை மறுத்துள்ளார். ”எனது தலைமையிலான கூட்டமைப்பின் குழுவை கடந்த வாரம் கோத்தாபய ராஜபக்ச சந்திக்க அழைத்திருந்தார். இதன்போது, அவர் தாம் ஆட்சிக்கு வந்தார் 13 ஆவது திருத்தம் செயற்பாட்டுக்கு கொண்டு வரப்படும் என்றும் உறுதியளித்தார். தென்பகுதி மக்களின் வாக்குகளால் மட்டும் தன்னால் வெற்றி பெற முடியும் என்றும்,  எல்லா மக்களாலும் தெரிவு செய்யப்பட்ட அதிபராக  இருக்கவே தாம் விரும்புவதாகவும், அதற்கு தமிழ் அரசியல் கட்சிகளின் ஆதரவு தேவை எனவும் கோத்தாபய ராஜபக்ச கூறினார். அதிபர் தேர்தலில் தமிழ் மக்களின் வாக்குகள் தனக்குத் தேவையில்லை என்று கோத்தாபய ராஜபக்ச கூறவில்லை. அதிபர் தேர்தலில் போட்டியிட கட்சிகள் நிறுத்தும் வேட்பாளர்களுக்காக காத்திருக்கிறோம். பிரதமர் ரணில் விக்ரமசிங்க யாரை நிறுத்தப் போகிறார் என பார்த்துக் கொண்டிருக்கிறோம். அதனை பொறுத்து முடிவெடுப்போம்.” என்றும் அவர் கூறினார்.