கொழும்பு குப்பைகளை திருப்பி அனுப்பிய புத்தளம் மக்கள்

breaking
  கொழும்பு குப்பை அகற்றல் செயற்பாடு மீண்டும் சிக்கலாகியுள்ளது. கழிவுநீர் வடிந்தோடிய நிலையில் புத்தளத்திற்கு குப்பைகளை கொண்டு சென்ற வாகனங்களை புத்தளம் மக்கள் வழிமறித்து ஆர்ப்பாட்டம் செய்தனர். போராட்டக்காரர்களை கடந்து செல்ல முடியாத நிலையில் வாகனங்கள் திரும்பி சென்றன. பல நாட்களாக கொழும்பு குப்பைகள் அகற்றப்படாமலிருந்த நிலையில், நேற்று முன்தினம் மாலை தொடக்கம் குப்பை அகற்றுவது வழமைக்கு திரும்பியதாக அரசு அறிவித்திருந்தது. வண்ணாத்துவில்லு பிரதேசசபையுடன் ஏற்படுத்திக் கொள்ள இணக்கப்பாட்டிற்கு அமைய, புத்தளம் அருவாக்காடு பகுதியில் குப்பை கொட்ட, கொழும்பிலிருந்து டிப்பர் வாகனங்களில் குப்பை எடுத்து செல்லப்பட தொடங்கியது. குப்பையாக அல்லாமல், பொதி செய்த, பதப்படுத்திய குப்பைகளையே கொட்டுவோம் என அதிகாரிகள் ஏற்கனவே புத்தளம் மக்களிற்கு வாக்குறுதியளித்திருந்தபோதும், தற்போது கழிவு திரவம் வாகனங்களிலிருந்து வடிந்தோடும் நிலையிலேயே குப்பைகள் எடுத்து வரப்படுகின்றன. இதனால் கழிவு வாகனங்கள் சென்ற வீதிகளில் துர்நாற்றம் வீசி வருகிறது. நேற்றைய தினமும் கொழும்பிலிருந்து குப்பைகளை எடுத்து சென்ற டிப்பர் வாகனங்களிற்கு பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். புத்தளம், வேப்பமடு பகுதியில் ஒன்று திரண்ட மக்கள் கழிவுகளுடன் வந்த டிப்பர் வாகனங்களை வழிமறித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். உலக கழிவுகளை புத்தளத்தில் கொட்ட வேண்டாம் என குரல் எழுப்பினர். வாகனங்களை தொடர்ந்து பயணிக்க போராட்டக்காரர்கள் அனுமதிக்காததையடுத்து, கழிவுகளுடன் டிப்பர் வாகனங்கள் திரும்பிச் சென்றன.