மகிந்தவின் பதவிகளிற்கு ஆபத்து!

breaking
  பெரமுனவின் தலைவர் பதவியை எதிர்க்கட்சி தலைவர் மஹிந்த ராஜபக்ஷ பெற்றுக் கொண்டமையினால் அவரது நாடாளுமன்ற உறுப்பினர் பதவி கேள்விக்குறியாகியுள்ளதாக ஐக்கிய தேசிய கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் முஜிபுர் ரஹ்மான் தெரிவித்துள்ளார். இந்த விடயம் தொடர்பாக இன்று (திங்கட்கிழமை) கருத்து தெரிவித்த முஜிபுர் ரஹ்மான், குறித்த பிரச்சினை எதிர்காலத்தில் சபாநாயகர் கரு ஜயசூரியவுக்கு தெரிவிக்கப்படும் என்றும் கூறியுள்ளார். அவர் மேலும் தெரிவிக்கையில் “முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பின் சார்பில் போட்டியிட்டு நாடாளுமன்றத்திற்கு தேர்ந்தெடுக்கப்பட்டார். இதேவேளை ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பின் சார்பாகவே அவர் எதிர்க்கட்சி தலைவர் பதவியையும் பெற்றுக்கொண்டுள்ளார். ஆனால் நாடாளுமன்ற உறுப்பினர் மஹிந்த ராஜபக்ஷ, ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தலைவராக பதவியை ஏற்றுக்கொண்டு தனது கட்சியை மாற்றியுள்ளார். இந்நிலையில் மஹிந்த ராஜபக்ஷ தொடர்பாக ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பின் பொதுச் செயலாளர் மஹிந்த அமரவீர எடுத்த முடிவு என்ன? மஹிந்த ராஜபக்ஷவுக்கு எதிர்க்கட்சித் தலைவர் பதவியைத் தொடர சட்டப்பூர்மாக இடம் இருக்கின்றது என்றால் அதனை சபாநாயகர் நாடாளுமன்றத்தில் அறிவிக்க வேண்டும். இதேவேளை இந்த விடயம் தொடர்பாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவும் பதிலளிக்க வேண்டும் என நான் கேட்டுக்கொள்கின்றேன்” என கூறியுள்ளார்.