திமுகவுக்கு செக் வைக்க சசிகலா தயாராகிறாரா.?

breaking
சசிகலாவுக்கும் - தினகரனுக்கும் இடையேயான விரிசல் விரிவடைந்து போய் கொண்டிருப்பதாகவே சொல்கிறார்கள் அரசியல் நோக்கர்கள்! இதற்கு காரணம் சாட்சாத் தினகரன்தான் என்பது இவர்களின் கணிப்பு! அதனால்தான் தினகரனை கழட்டிவிடுவதுடன், அதிமுகவை ஒருங்கிணைக்க சசிகலாவே சரி என்ற முடிவுக்கு இரட்டை தலைமை வந்துள்ளதாகவும் கூறப்படுகிறது. என்ன ஆனாலும் அதிமுகவை விட்டுவிடக்கூடாது என்பதுதான் சசிகலாவின் இறுதிவரையான குறிக்கோள். காலத்தின்கோலம்.. அமமுக என்ற கட்சி பிரிந்து வந்துவிட்டது. புது கட்சி ஆரம்பித்தாலும், தினகரனின் கோபம், யாரையும் அரவணைத்து செல்லும் பாங்கு இல்லாதது, யார் பேச்சையும் காது கொடுத்து கேளாதது போன்றவையே அவரது சறுக்கல்களுக்கும் காரணமாகி விட்டது. கெட்டதிலும் ஒரு நல்லது நடக்கும் என்பது மாதிரி, எம்பி தேர்தலில் படுதோல்வியால் துவண்டு போனதால், சசிகலாவுடன் ஒரு இணக்கமான போக்கை அதிமுக கடைப்பிடிக்க முடிவு செய்ததாக சொல்லப்பட்டது. அதேபோல, இனியும் தினகரனை நம்பி இருப்பதைவிட, எடப்பாடியுடன் இணக்கமாக சென்று அதிமுக கட்சிக்கு தலைமையாகிவிடலாம் என்று அவர் ஒரு கணக்கு போட்டார். தினகரனை சசிகலா, அதிமுக என்ற இரு தரப்புமே ஒதுக்கி தள்ளிவிடும் நிலை உச்சக்கட்டத்துக்கு வந்துள்ளதாகவே தெரிகிறது. தினகரன் எப்படி எடப்பாடியார், ஓபிஸ்-ஐ எதிர்த்தாரோ, அதே மாதிரிதான், சசிகலா குடும்பத்தில் உள்ள உறவுகளையும் எதிர்த்து கொண்டு அரசியல் செய்யவிடாமல் தடுத்து கொண்டிருந்தார். விளைவு, விவேக், அனுராதா, தினகரன் என்று ஆளுக்கு ஒரு பக்கம் சிறைக்கு சென்று சொத்து விவகாரம் முதல் அரசியல் விவகாரம்வரை புகார்களை கொண்டு சென்று குடும்ப உறவும் தினகரனுக்கு சிதைந்துவிட்டது. கடைசியில், விவேக் நடத்தி வரும் ஜெயாடிவி குழுமத்தில், தினகரன் செய்திகளே இடம்பெறாத அளவுக்கு போய்விட்டது. இதன்விளைவு, தினகரன் ஒரு புது சேனலை ஆரம்பிக்க முடிவு செய்துள்ளதாக தெரிகிறது. ஏற்கனவே குடும்ப மானம் காற்றில் பறந்துவரும் நிலையில், தினகரன் ஒரு தனி சேனலை துவங்கிவிட்டால், அது சசிகலாவுக்கு மேலும் பிளவைதான் தரும் என்கிறார்கள். இப்படி ஒவ்வொரு காரியத்திலும் தினகரன் மீதான கோபம் சசிகலாவுக்கு அதிகமாகி கொண்டுதான் இருக்கிறது. ஒருவேளை, இதன் முடிவு சசிகலாவிடம் இருந்து தினகரனை பிரித்தும்விடக்கூடும் என்கிறார்கள் விவரம் அறிந்தவர்கள். அப்படி, குடும்ப ரீதியாகவும் சரி, அரசியல் ரீதியாகவும் சரி.. தினகரனை சசிகலா ஒதுக்கி வைக்கும் பட்சத்தில் அதிமுகவுக்கு சாதகமாகும் என்று சொல்லப்படுகிறது. இன்னும் ஓபனாக சொல்லப்போனால், தினகரனை ஒதுக்கி வைக்கும் சசிகலாவிடம், அதிமுக நெருக்கம் காட்டவே தொடங்கும் என்பதுதான் சூட்சுமம். இப்போதைக்கு கட்சியை வழிநடத்த வேண்டிய கட்டாயத்திலும், இன்னொரு தோல்வியை சந்திக்கும் மனப்பான்மையிலும் அதிமுக இல்லை. அதனால் சசிகலாவின் வழிநடத்தலும், வருகையும் அதிமுகவுக்கும் அவசியமானதாகவே அக்கட்சி தலைமை நினைக்கிறது கட்சியை வலுவாக்கும் பொருட்டு, இந்த விஷயத்தை பாஜக தரப்பிடமும் அதிமுக கலந்து ஆலோசித்ததாம். எப்படியும் சசிகலா உடன் இருந்தால்தான் திமுகவை சமாளிக்க முடியும் என்றும், கட்சி கட்டுக்குள் இருக்கும் என்ற முடிவுக்கு அதிமுகவை போலவே பாஜகவும் யோசித்துள்ளது. ஆக.. தினகரனை கழட்டி விடும்பட்சத்தில், அதிமுகவை ஒருங்கிணைக்க சசிகலா தயார் என்றும், தொண்டர்களை வலுவாக்கி கட்சியை விரிவுபடுத்த அவரால்தான் முடியும் என்றும், திமுகவுக்கு செக் வைக்க சசிகலாதான் சரியானவர் என்றும், அப்போதுதான் வரும் சட்டசபை தேர்தலில் ஆட்சியை, கட்சியை தக்க வைக்க முடியும் என்றும் அதிமுக-பாஜக இரண்டுமே நினைக்கிறது