சஜித் பிரேமதாசவைப் பொது வேட்பாளராக அறிவிக்க மைத்திரி திட்டம்!

breaking

இலங்கையில் டிசம்பர் மாதம் நடைபெறவுள்ள ஜனாதிபதித் தேர்தலில் ரணில் விக்கிரமசிங்க தலைமையிலான ஐக்கிய தேசியக் கட்சியின் வேட்பாளராக அமைச்சர் சஜித் பிரேதாசவை நியமிக்க வேண்டுமென கட்சியின் தொகுதி அமைப்பாளர்கள் பலரும் அழுத்தம் கொடுத்து வருகின்றனர். மாத்தறை, அம்பாந்தோட்டை. கண்டி உள்ளிட்ட பல பிரதேசங்களில் கட்சி ஆதரவாளர்கள் சஜித் பிரேமதாசாவுக்கு ஆதரவாகச் செயற்பட்டு வருகின்றனர். சஜித் பிரேமதாசாவை ஜனாதிபதியாக்குவதே தமது நோக்கமென அமைச்சர் ஹரின் பொண்hன்டோ கூறியுள்ளார். பதுளைப் பிரதேசத்தில் நேற்றுத் திங்கட்கிழமை சஜித் பிரேமதாசவுக்கு மாபெரும் வரவேற்பு நிகழ்வு ஒன்று இடம்பெற்றது. சஜித் பிரேமதாச ஜனாதிபதி வேட்பாளராக அறிவிக்கப்பட வேண்டுமென கையெழுத்துப் போராட்டங்களும் ஆரம்பிக்கப்படுமென கட்சியின் பதுளைத் தொகுதி அமைப்பாளர் கூறியுள்ளார்.

ஐக்கிய தேசியக் கட்சிக்குள் ஏற்பட்டுள்ள அழுத்தங்களினால் சஜித் பிரேமதாசவை வேட்பாளராக நிறுத்த வேண்டிய நிலை ஏற்பட்டால் அதற்கான ஆதரவை வழங்குவது குறித்து அமெரிக்கா தற்போது தீவிரமாக ஆலோசித்து வருகின்றது. அமைச்சர் மங்கள சமரவீர அமெரிக்க இராஜாங்கத் திணைக்களத்திற்கு வேண்டப்பட்ட ஒருவர் என்ற அடிப்படையில், அமெரிக்கத் தூதரம் கடந்த சில நாட்களாக மங்கள சமரவீரடன் தொடர்புகளை ஏற்படுத்தியுள்ளது

அதேவேளை. சஜித் பிரேமதாசவை ஜனாதிபதி வேட்பாளராக அறிவிக்குமாறு கோரி ஐக்கிய தேசியக் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள் கையொப்பமிட்டு ரணில் விக்கிரமசிங்கவுக்கு அனுப்பி வருகின்றனர்.

சஜித் பிரேமதாசவே ஜனாதிபதி வேட்பாளரென அமைச்சர் மங்கள சமரவீர கொழும்பில் செய்தியாளர்களிடம் ஏற்கனவே கூறியுள்ளார். இந்த நிலையில் ஐக்கிய தேசியக் கட்சியின் மத்திய குழு விரைவில் முடிவெடுக்குமென கட்சித் தகவல்கள் கூறுகின்றன.

இலங்கை நாடாளுமன்றத்தின் சபாநாயகராகவுள்ள கட்சியின் மூத்த உறுப்பினர் கரு ஜயசூரியவே ஜனாதிபதி வேட்பாளரென ரணில் விக்கிரமசிங்க ஏற்கனவே கூறியிருந்தார். ஆனால் சஜித் பிரேமதாசவுக்கு எதிரான உறுப்பினர்கள் அதனை ஏற்றுக்கவில்லை. பகிரங்கமாகவே எதிர்க்க ஆரம்பித்தனர்.

இதேவேளை, ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியில் இருந்து அறுபது உறுப்பினர்கள் மகிந்த ராஜபக்ச தலைமயிலான ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியில் இணைந்து கொண்டதால் அவர்கள் கட்சி உறுப்புரிமையை இழந்து விட்டதாகவும் இதனால் நாடாளுமன்ற உறுப்பினர் பதவியையும் அவர்கள் இழக்க நேரிடுமெனவும் கட்சித் தகவல்கள் கூறுகின்றன.

அறுபது உறுப்பினர்களின் உறுப்புரிமைகளைப் பறித்து புதியவர்களை நாடாளுமன்ற உறுப்பினர்களாக நியமிப்பது தொடர்பாக கட்சியின் தலைவர் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நடவடிக்கை எடுத்துள்ளதாக கொழும்பு அரசியல் தகவல்கள் கூறுகின்றன.

அதேவேளை. ஐக்கிய தேசியக் கட்சியில் தனக்கு ஆதரவான உறுப்பினர்களோடு சஜித் பிரேமதாச வெளியே வந்தால், ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி புதிய அரசியல் கூட்டணி ஒன்றை அமைத்து பொது வேட்பாளராக சஜித் பிரேமதாசவை அறிவிக்க விரும்பம் கொண்டுள்ளதாக உள்ளகத் தகவல்கள் கூறுகின்றன.

இது தொடர்பாக மைத்திரிபால சிறிசேன ஏற்கனவே சஜித் பிரேமதாசவுடன் பேசியிருந்தார். தற்போது ஐக்கிய தேசியக் கட்சிக்குள் ஏற்பட்டுள்ள முரண்பாடுகளினால் சஜித் பிரேமதாசவுடன் மீண்டும் தொடர்புகளை ஏற்படுத்தியுள்ள மைத்திரிபால சிறிசேன, பொது வேட்பாளராக வருமாறு சஜித் பிரேமதாசவுக்கு அழைப்பு விடுத்துள்ளதாகவும் உள்ளகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

கோட்டாபய ராஜபக்சவை ஆதரிக்க வேண்டுமெனக் கோரி ஸ்ரீலங்கா பொதுஜனப் பெரமுன கட்சி மைத்திரிபால சிறிசேனவுடன் நடத்திய பேச்சுக்கள் வெற்றியளிக்கவில்லை. இதனால் சஜித் பிரேமதாசவை பொது வேட்பாளராக நியமிக்கும் முயற்சியில் மைத்திரிபால சிறிசேன தீவிரமாகச் செயற்படுவதாகக் கொழும்பு உயர்மட்டத் தகவல்கள் கூறுகின்றன.

கோட்டாபய ராஜபக்சவை ஆதரிக்க விருப்பமில்லாத உறுப்பினர்கள் பலர் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியில் இருப்பதாகவும் அவர்களும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தீர்மானத்தை ஆதரிப்பது தொடர்பாக மைத்திரிபால சிறிசேனவோடு பேசி வருவதாகவும் கூறப்படுகின்றது.

ஆனாலும் சஜித் பிரேமதாசவை வேட்பாளராக ஐக்கிய தேசியக் கட்சி அறிவித்தால் அதனை மைத்திரிபால சிறிசேன ஆதரிப்பாரா இல்லையா என்பது குறித்து முடிவுகள் இல்லை.

எனினும் ஐக்கிய தேசியக் கட்சி தன்னை வேட்பாளராக அறிவித்தால் அதனை ஏற்று ஆதரவு வழங்க வேண்டுமென சஜித் பிரேமதாச மைத்திரிபால சிறிசேனவிடம் கேட்டுள்ளாரென்றும் மற்றுமொரு உயர்மட்டத் தகவல் கூறுகின்றது. ஐக்கிய தேசியக் கட்சியை மையப்படுத்திய புதிய அரசியல் கூட்டணியில் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி இணைய முடியும் எனவும் சஜித் ஆலோசணை வழங்கியுள்ளார்.

சஜித் பிரேமதாச வேட்பாளராக அறிவிக்கப்பட்டால் அமெரிக்காவின் ஆதரவைப் பெற்றுத் தருவேன் என்று அமைச்சர் மங்கள சமரவீர பிரதமர் ரணில் விக்கிரமசிங்கிவிடம் உறுதியளித்துள்ளார். மைத்திரிபால சிறிசேனவுடனும் அமைச்சர் மங்கள சமரவீர பேசியுள்ளார்.

கோட்டாபய ராஜபக்சவை வேட்பாளராக நிறுத்த வேண்டும் என்பதில் கடந்த ஒரு வருடமாகக் கொழும்பில் உள்ள அமெரிக்கத் தூதரகம் முயற்சி எடுத்திருந்தது. ஆனால் சஜித் பிரேமதாசவை வேட்பாளராக நிறுத்துவது தொடர்பாக அமெரிக்கத் தூதரகம் எந்தவொரு சந்திப்பையும் நடத்தவில்லை.

எனினும் கோட்டாபய ராஜபக்சவுக்கு உள்ளக எதிர்ப்புகள் கடுமையாக நிலவியதால் கரு ஜய சூரியவை வேட்பாளராக நிறுத்தும் விடயத்தில் அமெரிக்கா கடந்த இரு மாதங்களுக்கு முன்னர் ரணில் விக்கிரமசிங்கவுடன் பேசியிருந்தது.

கண்டி பௌத்த மகாநாயக்கத் தேரர்களின் அரசியல் செல்வாக்கு இலங்கையில் அதிகளவு உள்ளதை உணர்ந்து கொண்ட அமெரிக்கா, பௌத்த தேரர்களின் விருப்பதற்திற்குரிய ஒருவரை வேட்பாளராக நிறுத்தும் முயற்சியில் தீவிரமாகவே ஈடுபட்டு வருகின்றது.

அதனடிப்படையிலேயே கடந்த இரு வாரங்களுக்கு முன்னர் கரு ஜய சூரியவை ரணில் விக்கிரமசிங்க தன்னிச்சையாக வேட்பாளராக அறிவித்திருந்தார். இதனாலேயே ஐக்கிய தேசியக் கட்சிக்குள் எதிர்ப்புகளும் ஏற்பட்டிருந்தன.

இந்த நிலையில் ஐக்கிய தேசியக் கட்சிக்குள் ஏற்பட்டுள்ள அழுத்தங்களினால் சஜித் பிரேமதாசவை வேட்பாளராக நிறுத்த வேண்டிய நிலை ஏற்பட்டால் அதற்கான அமெரிக்காவின் ஆதரவை அமைச்சர் மங்கள சமவீர மூலமாகப் பெறுவதற்கும் முயற்சிகள் இடம்பெறுகின்றன.

அமைச்சர் மங்கள சமரவீர அமெரிக்க இராஜாங்கத் திணைக்களத்திற்கு வேண்டப்பட்ட ஒருவர் என்ற அடிப்படையில், கொழும்பில் உள்ள அமெரிக்கத் தூதரகம் கடந்த சில நாட்களாக அமைச்சர் மங்கள மசரவீவுடன் தொடர்புகளை ஏற்படுத்தியுள்ளதாகவும் கொழும்பு உயர்மட்டத் தகவல்கள் கூறுகின்றன.

2015 ஆம் ஆண்டு ஜனவாரி மாதம் மைத்திரி- ரணில் அரசாங்கத்தை அமெரிக்காவின் ஆதரவுடன் அமைப்பதில் அமைச்சர் மங்கள சமரவீர தீவிரமாக ஈடுபட்டவர் என்பது குறிப்பிடத்தக்கது.