26.03.2007 அன்று சிங்களத்தை அதிரவைத்த தமிழீழ வான்ப்படையின் முதலாவது தாக்குதல் ...!

breaking

வான்  புலிகளின் அறிமுகமும் முதலாவது வான் தாக்குதலும்26.03.2007

தமிழரின் விடுதலையை வென்றெடுக்கவும் தமிழரின் படை பலத்தில் தரைப்படை  கடற்படையோடு  தமிழீழத்  தேசியத்  தலைவர்  மேதகு வே.   பிரபாகரனால்   மூன்றாவது   படையணியாக   தனியரசின் "வான்படை" என்ற  மூன்றாவது  படையை  அறிமுகப்படுத்திய  நாள்.  இந்நாளின் (26.03.2007) அதிகாலை 1.45 மணியளவில் கட்டுநாயக்கா சிங்கள வான் தளம் மீது ஒரு வெற்றிகரமான வான் தாக்குதலை நிகழ்தினர்.





வான்படையின் பிறப்பு புலிகளின் புதிய போர்ப்பரிமாணம்.!

கட்டுநாயக்கா சிங்கள வான்தளம் மீது வெற்றிகரமான ஒரு மரபுவழிக் குண்டு வீச்சுத் தாக்குதலுடன் தமது வான்படையின் பிறப்பைப் புலிகள் இயக்கம் பிரகடனப்படுத்தியுள்ளது.

வான் படையின் பிறப்புடன் தமிழரின் விடுதலைப் போராட்டமும் புதியதொரு அரசியல் – இராணுவப் பரிமாணத்துள் பிரவேசித்துள்ளது.

செயற்திறனுள்ள தரைப்படை – கடற்படை – வான்படை என்ற முப்படையும் கொண்ட ஒரு விடுதலை இயக்கமாக புலிகள் இயக்கம் தரஉயர்வு கண்டுள்ளது.

வான் புலிகளின் தாக்குதல் இலக்குகள் சிங்களத்தின் இராணுவ – பொருண்மிய இலக்குகளாகவே இனங்காணப்பட்டுள்ளன. கொழும்பில், குளிரூட்டி அறைகளுக்குள் இருந்து கொண்டு தமிழர் தாயகப் பகுதிகளில் இன அழிப்பு நோக்கம் கொண்ட ஆக்கிரமிப்புப் போருக்கு உத்தரவுகளை வழங்கிக் கொண்டிருக்கும் அரசின் உயர்மட்டத் தலைவர்கள் – தளபதிகளை உலுக்கியெடுக்கும் வகையில் வான் புலிகளின் தாக்குதலும் – இலக்குகளும் அமைந்திருந்தன.

இராணுவ ரீதியில் சிங்கள அரசை மிரட்டும் வகையில் புலிகள் இயக்கம் இராணுவ வெற்றிகளைப் பெறும் ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும் போரின் யதார்த்தமான போக்கை இனங்கண்டு தமிழ் – சிங்கள இனப்பிணக்கிற்கு நியாயமான வகையில் அரசியல் தீர்வைத் தேடுவதைக் கைவிட்டு விட்டு உலகநாடுகளிடம் ஓடிச்சென்று புலிகளின் பல வளர்ச்சியைத் திரித்துக்காட்டி உலகிற்கான ஒரு பயமுறுத்தலாக வர்ணிப்பது சிங்கள ஆட்சியாளர்களின் மரபாகும்.

வான் புலிகளின் பிறப்பையும் – அது சிங்கள அரசிற்குக் கொடுத்துள்ள அதிர்ச்சி வைத்தியத்தையும் உலகிற்கான பயமுறுத்தலாகக் காட்ட மகிந்த அரசு படாதபாடுபடுகின்றது.





“புலிகளிடமுள்ள வான் பலம் இலங்கைக்கு மட்டுமல்ல இந்தியாவுக்கும் ஆபத்தானது” என்று இந்திய அரசிடம் கூறியுள்ளது சிங்கள அரசு.

அதேசமயம் கொழும்பிலுள்ள ஐரோப்பிய நாடுகளின் தூதர்களை அழைத்துப்பேசிய சிங்களத்தின் வெளிவிவகார அமைச்சர் “புலிகளின் வான் பலம் ஆசியாக் கண்டத்திற்கு மட்டுமல்ல உலகிற்கே ஆபத்தை விளைவிக்கக்கூடியது” என்று விளக்கமளித்துள்ளார்.

புலிகள் இயக்கத்தின் வான்பல வளர்ச்சிக்கு எதிராக சிங்கள அரசுடன் உலக நாடுகளும் இணைய வேண்டும் என்ற ஒரே நோக்கிலேயே இவ்வாறு ஆளுக்கொரு விதமாக சிங்கள அரசு விசமப் பிரச்சாரம் செய்கின்றது.

வான் புலிகளின் உருவாக்கம் தமிழரின் விடுதலையுடன் சம்பந்தப்பட்டது. தமிழ் மக்களின் தற்காப்புடன் தொடர்புடையது. புலிகளின் தரைப்படை – கடற்படை போல புலிகளின் வான்படையும் சிங்களத்தின் ஆக்கிரமிப்புப் படைகளைத் தமிழர் நிலத்திலிருந்து அப்புறப்படுத்தும் போர்ச் செயற்பாடுகளிலேயே ஈடுபடுகின்றது.

சிங்கள அரசு கூறுவதுபோல புலிகளின் வான்படை இந்தியாவிற்கோ அல்லது வேறெந்த நாட்டிற்கோ அச்சுறுத்தலாக இருக்கப்போவதில்லை. தமிழரின் படைப்பலம் தமிழரின் விடுதலைக்கான கருவியேயன்றி உலகநாடுகளை அச்சுறுத்தும் நோக்கம் கொண்டதல்ல.

தமிழரின் படைப்பல வளர்ச்சிக்கான புறச்சூழலை சிங்கள இனவாத அரசே உருவாக்கிவருகின்றது. தமிழர் தாயக நிலத்தில் சிங்களத்தின் இராணுவ அட்டூழியம் தலைவிரித்தாடிய போது புலிகளின் தரைப்படை பிறந்தது.

தமிழரின் கடலில் சிங்களக் கடற்படையின் கொலைவெறி தாண்டவமாடி – தமிழ் மீனவர்களின் வாழ்வாதாரம் சிதைக்கப்பட்டபோது கடற்புலிகளின் தேவை எழுந்தது. அதேபோன்று சிங்களத்தின் வான்படை தமிழர்களை இனக்கொலை செய்யவும் – அவர்களை அச்சமூட்டிப் பணியவைக்கவும் முயன்ற சூழலில் அதற்கெதிராக புலிகளின் வான்படை பிறப்பெடுத்துள்ளது.


எனவே புலிகளின் இராணுவப் பல வளர்ச்சிக்கு வித்திட்டு – நீர் ஊற்றுவது சிங்கள அரசின் இன வெறி நடவடிக்கைகளும் – இனப்பிரச்சினைக்கு அரசியல் தீர்வு தேட மறுக்கும் அதன் இணங்காப் போக்குகளுமே யாகும். சிங்கள அரசின் இன அழிப்பு நோக்கிற்குப் பதிலடியாகவும் தற்காப்பேற்பாடாகவுமே புலிகளின் அரசியல் – இராணுவ கட்டுமானங்கள் பிறப்பெடுத்து வளர்ந்து வருகின்றன. இந்த அரசியல் யதார்த்தத்தை உலக நாடுகள் புரிந்துகொள்ள வேண்டும் என்று புலிகள் இயக்கம் எதிர்பார்க்கின்றது.

வான்புலிகள் இதுவரை நடாத்திய மூன்று குண்டு வீச்சுத் தாக்குதல்களும் இராணுவ – பொருண்மிய நிலைகள் மீது – சிவிலியன் இழப்புக்கள் அற்று நடாத்தப்பட்டிருப்பது உலக சமூகத்திற்கு மன நிறைவைக் கொடுத்திருக்கும் என்று புலிகள் இயக்கம் நம்புகின்றது.

ஏனெனில் சிங்கள வான்படை இதுவரை நடாத்தியுள்ள குண்டுவீச்சுக்களில் மிகப்பெரும்பாலானவை அப்பாவித் தமிழ் மக்களை இலக்குவைத்தே நடாத்தப்பட்டிருக்கின்றன. சிங்களத்தின் வான் தாக்குதல்களில் சிக்கிக் கொல்லப்பட்ட ஆயிரத்திற்கும் மேற்பட்ட தமிழ்மக்களின் மரணங்களே இதற்குச் சாட்சிகளாகும்.



வான் புலிகளின் பிறப்பும் – அவர்களின் வெற்றிகரமான போர்ச் செயற்பாடுகளும் சிங்களப் படைகளுடனான போரில் பெரும் திருப்பு முனைகளை உண்டுபண்ணும் சக்தியுடன் உள்ளது. தமிழரின் படைப் பல வளர்ச்சிதான் அவர்களுக்கு அரசியல் விடுதலையைப் பெற்றுக்கொடுக்கும் ஒரே ஒரு மார்க்கமாக உள்ளது என்பதே இலங்கையின் அரசியல் யதார்த்தமாகும். அந்தப் பல வளர்ச்சியில் வான் புலிகளின் பிறப்பு தமிழ் மக்களுக்கு மகிழ்ச்சியையும் – நம்பிக்கையையும் அளித்துள்ளது.

 – சித்திரை 2007  விடுதலைப்புலிகள்   இதழ்