யார் ஆட்சிக்கு வந்தாலும் தமிழ் மக்களின் இருப்பை அழிப்பார்கள் -செ.கஜேந்திரன்!
சீன சார்பு ஒருவர் ஜனாதிபதியாகினால் இந்தியாவின் தேசிய பாதுகாப்பு அச்சுறுத்தலாகும். அதனால் ராஜபக்ச தரப்பினர் மீண்டும் ஆட்சிக்கு வருவதை இந்தியா தடுக்கும். இந்த இடத்தில் இந்தியா தமிழ் தேசிய கூட்டமைப்பையும், தனது வேட்பாளருக்கு ஆதரவாக வாக்களிக்க வைப்பார்கள்.
தமிழ்தேசிய மக்கள் முன்னணியின் செயலாளர் செ.கஜேந்திரன் சமகால அரசியல் நிலமைகள் குறித்து 13.04.19 யாழ்.ஊடக அமையத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக் கும்போதே அவர் மேற்கண்டவாறு கூறியுள்ளார்.
இதன்போது மேலும் அவர் கூறுகையில்,
சிங்கள பௌத்த தேசியவாதம் தமிழ் மக்களுக்கான தீர்வினை விரும்பி வழங்கப்போவதில்லை. நாம் தீர்வினை வழங்குவதற்கான நிர்ப்பந்தங்களை விதிக்கும்போதே எமக்கான தீர்வு சாத்தியமானது. அந்தவகையில் கடந்த 5 வருடங்களில் பல பேரம் பேசும் சந்தர்ப்பங்கள் மக்கள் ஆணை பெற்றவர்களுக்கு கிடைத்தபோதும் அவர்கள் அதனை பயன்படுத்த தவறியுள்ளார்கள்.
அல்லது பேரம் பேசும் சந்தர்ப்பத்தை இந்தியா மற்றும் மேற்கு நாடுகளின் நலன்களுக்காக பயன்படுத்தினார்கள். மாறாக தமிழ் மக்களின் நலன்களுக்காக பயன்படுத்தப்படவில்லை. அதுவே தமிழ்தேசத்தின் இருப்பை அழித்திருக்கின்றது. தேர்தல்கள் பேரம் பேசுவதற்கான சிறந்த சந்தர்ப்பங்கள். அதனை சரியாக பயன்படுத்தவில்லை. இந்தியாவின் நலன்களிற்காக இந்தியாவினால் கொண்டு வரப்பட்ட 13வது திருத்தச்சட்டத்தை உயிர்ப்போடு வைத்திருக்க, அரசியலமைப்பில் நிரந்தரமாக இடம்பெற செய்யும் வகையில் புதிய அரசியலமைப்பு ஒன்றை உருவாக்க முயற்சித்தார்கள்.
தமிழ் அரசு கட்சியின் தேசிய மாநாட்டில் இரா.சம்பந்தன் அதை தெளிவாக குறிப்பிட்டுள்ளார். அரசியலமைப்பில் 13வது திருத்தம் முழுமையாக இடம்பெறவில்லையென்றும், அதனை முழுமையாக அரசியலமைப்பிற்குள் இணைக்க முயற்சிப்பதாகவும் தெரிவித்தார்.
13வது திருத்தத்தை அரசியலமைப்பில் முழுமையாக உள்வாங்கி, இந்தியாவிற்கு மாறான தரப்புக்கள் ஆட்சிக்கு வந்தாலும் அதை நீக்க முடியாத விதத்தில், அரசியலமைப்பில் இணைக்கவே முயற்சிக்கிறார்கள்.
புதிய அரசியலமைப்பு 13வது திருத்தத்தை தாண்டிச் செல்லவில்லை, ஒரு இஞ்சி கூட நகரவில்லையென சுமந்திரனும் தெரிவித்துள்ளார். மக்களிடம் வழங்கிய வாக்குறுதிக்கு மாறாக, ஒற்றையாட்சி அரசியலமைப்பை கொண்டு வருவதன் குற்ற ஒப்புதல் வாக்குமூலம்தான் சுமந்திரனின் கருத்து.
மைத்திரிபால சிறிசேனாவை மகாத்மா காந்தி, நெல்சன் மண்டேலா, ஆபிரகாம் லிங்கன் என்றார்கள். அதனை நம்பியே மக்கள் வாக்களித்தார்கள். சீன சார்பு ராஜபக்சவை வீழ்த்தவே அப்படி பொய் சொன்னார்கள். பதவிக்கு வந்த பின்னர் யாராயினும் தமிழர்களின் இருப்பை அழிப்பார்கள், சர்வதேச விசாரணையை முடக்குவார்கள் என்றோம். ஆனால் துரதிஷ்டவசமாக எமது கருத்துக்கள் அன்று மக்களிடம் சரியாக கொண்டு செல்லப்படவில்லை. ஆனால் அன்று வாக்களிக்க சொன்னவர்களே, ஏமாற்றி விட்டார், பொய் சொல்லி விட்டார் என ஓலம் போட்டுக் கொண்டிருக்கிறார்கள்.
இப்பொழுதும் சொல்கிறோம்- யார் ஆட்சிக்கு வந்தாலும் தமிழ் மக்களின் இருப்பை அழிப்பார்கள். வேட்பாளர்களுடன் தனிப்பட்டரீதியில் பேரம் பேசி எந்த பலனுமில்லை.
அடுத்த தேர்தலில் இந்தியா, மேற்கின் நலன்களை பாதுகாக்கும் ஒருவர் களமிறக்கப்படவுள்ளார். அவரை தமிழ் தேசிய கூட்டமைப்பும், விக்னேஸ்வரன் ஐயாவும் ஆதரவளிப்பதாக வாக்களித்துள்ளனர்.
இந்தியா மற்றும் மேற்கு நாடுகளின் நலன்களுக்கு சாதகமாக செயற்படகூடிய ஒரு ஜனாதிபதி வேட்பாளருக்கு ஆதரவு வழங்குவதாக இருந்தால் தமிழ்தேசத்தை அங்கீகரித்து இந்திய நாடாளுமன்றில் தீர்மானம் நிறைவேற்ற வேண்டும். சீன சார்பு ஒருவர் ஜனாதிபதியாகினால் இந்தியாவின் தேசிய பாதுகாப்பு அச்சுறுத்தலாகும். அதனால் ராஜபக்ச தரப்பினர் மீண்டும் ஆட்சிக்கு வருவதை இந்தியா தடுக்கும். இந்த இடத்தில் இந்தியா தமிழ் தேசிய கூட்டமைப்பையும், தனது வேட்பாளருக்கு ஆதரவாக வாக்களிக்க வைப்பார்கள்.
இந்த நிலையில், தமிழ் தேசத்தை அங்கீகரிக்க வைப்பதே கோரிக்கையாக இருக்க வேண்டுமென்பதே எமது கோரிக்கை என்றார்.
ஒற்றையாட்சியை ஏற்றுக்கொண்டு, சமஷ்டியை கைவிட்டு, போர்க்குற்ற விசாரணையை கைவிட்டு, மக்கள் ஆணைக்கு எதிராக செயற்படும் தமிழ் அரசு கட்சியின் ஒற்றுமைக்கான அழைப்பை நிராகரிப்பதாகவும் தெரிவித்தார். அனைத்து தமிழ் தரப்பையும் ஒன்றிணைக்க வேண்டுமென, வடக்கு அவைத்தலைவர் தெரிவித்த கருத்திற்கு பதிலளிக்கும்போதே இவ்வாறு தெரிவித்தார்.
ஒற்றையாட்சி அரசியலமைப்பு முற்று பெற்றிருக்கிறது. மக்களின் ஆணையை மீறி செயற்படுகிறார்கள். அந்த கட்சியில் சிவஞானம் ஒரு சில்லறை. சம்பந்தன் தலைவர் என சொன்னாலும் அணைத்து முடிகளையும் எடுப்பது சுமந்திரன்தான் என்றார்.