காஷ்மீரில் அரங்கேறும் கண்ணீர்க்காட்சிகள்.!

breaking
அதிரடி நடவடிக்கைக்கு பெயர் போன பிரதமர் மோடி தலைமையிலான மத்திய பாரதீய ஜனதா கூட்டணி அரசு, கடந்த 5-ந் தேதி காஷ்மீருக்கு வழங்கப்பட்டு வந்த சிறப்பு அந்தஸ்தை ரத்து செய்தது. அத்துடன் காஷ்மீர், மத்திய அரசின் நேரடி கட்டுப்பாட்டுக்குள் வருகிற 2 யூனியன் பிரதேசங்களாக பிரிக்கப்பட்டது. அதைத் தொடர்ந்து காஷ்மீரில் தகவல் தொடர்பு சேவை முற்றிலுமாக முடக்கப்பட்டுள்ளது. குறிப்பாக செல்போன் சேவை, இணையதள சேவை கிடையாது. எங்கெங்கோ வாழ்ந்து கொண்டு இருக்கிற காஷ்மீர் மக்கள் சொந்த ஊருக்கு போக முடியாத பரிதாப நிலை நிலவுகிறது. பக்ரீத் பண்டிகையைக்கூட காஷ்மீர் மக்கள் எங்கெங்கு இருக்கிறார்களோ, அங்கிருந்து கொண்டாடும் நிலை உருவானது. இருப்பினும் அவசர தொலைபேசி சேவையை அரசு ஏற்படுத்தி தந்திருக்கிறது. இந்த தொலைபேசி சேவையானது, ஸ்ரீநகரில் உள்ள துணை கமிஷனர் அலுவலகத்தில் ஏற்படுத்தப்பட்டுள்ளது. இந்த தொலைபேசியை பயன்படுத்தி, வெளியூர்களில் உள்ள குடும்பத்தினருடன் ஒருவர் பேச வேண்டுமென்றால் அவர் குறைந்தபட்சம் 2 மணி நேரம் நீண்ட வரிசையில் காத்து நிற்கும் அவலநிலை உள்ளது. அப்படி 2 மணி நேரம் காத்திருந்தாலும், 2 நிமிடத்தில் உரையாடலை முடித்துக்கொள்ள வேண்டிய சூழலும் இருக்கிறது. தங்கள் உரையாடலை கண்ணீருடன் தொடங்கி கண்ணீருடன் முடித்துக்கொள்கிறார்கள். இப்படி இடுப்பில் தனது ஒரு வயது ஆண் குழந்தையை சுமந்து கொண்டு 2 மணி நேரம், காத்திருந்து டெல்லியில் உள்ள தனது சகோதரியுடன் மருபா பாத் என்ற பெண் பேசினார். தனது கண்ணீரை சமாளித்து, சூழ்நிலையை கடந்து வந்து வார்த்தைகளால் அவரால் தெளிவுபட பேசக்கூட முடியவில்லை. இது பற்றி அவர் கூறியபோது, “என் அப்பாவுக்கு இதயத்தில் பாதிப்பு ஏற்பட்டு, டெல்லியில் பைபாஸ் அறுவை சிகிச்சை நடந்தது. சமீபத்தில் நாங்கள் இங்கு திரும்பி வந்து விட்டோம். அப்பாவின் மாத்திரை, மருந்துகள் காலியாகி விட்டன. இதை என் சகோதரியிடம் சொல்வதற்காகத்தான் வந்தேன்” என்று அவர் கூறியபோது கண்களில் கண்ணீர் வழிந்தோடியது. இந்த தொலைதொடர்பு கட்டுப்பாடு, ஆட்கள் போக்குவரத்து கட்டுப்பாடு இன்னும் சில நாட்கள் நீடிக்கும் என்று டெல்லியில் உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார். அதே நேரத்தில் காஷ்மீர் மாநில முதன்மை செயலாளர் ரோகித் கன்சால், பாதுகாப்பு கட்டுப்பாடுகள் தளர்த்தப்படும் என நம்பிக்கை தெரிவித்தார். இது பற்றி அவர் குறிப்பிடுகையில், “காஷ்மீர் மற்றும் லடாக் பகுதிகளில் உள்ள பல்வேறு மாவட்டங்களில் சுதந்திர தின ஒத்திகை முடிந்ததும் கட்டுப்பாடுகள் மேலும் தளர்த்தப்படும் என நம்புகிறோம்” என கூறினார். இதற்கிடையே 300 பொது தொலைபேசி சேவைகள் ஏற்படுத்தப்பட்டுள்ளதாக மாநில நிர்வாகம் சொல்கிறது. ஆனால் இதுபற்றி அர்சலான் வானி என்பவர் கூறும்போது, “நான் எனது தேசிய தகுதி தேர்வு விண்ணப்பத்தை நிரப்புமாறு சண்டிகரில் உள்ள எனது சித்தப்பாவிடம் சொல்வதற்காக வந்துள்ளேன். 300 பொது தொலைபேசி பூத்துகள் அமைக்கப்பட்டு இருப்பதாக சொல்கிறார்கள். அவை எங்கே இருக்கின்றன?” என கேள்வி எழுப்பினார். மேலும், “எனது செல்போன் மணி ஒலிப்பதுபோல கனவு காண்கிறேன்” என்றும் கூறினார். காஷ்மீர் மக்கள் இயல்பு நிலை என்று திரும்பும் என கண்ணீரோடு காத்திருப்பது என்னவோ உண்மைதான்.