காஷ்மீர் பேச்சு எதிரொலி: கலைமாமணி விருதை புறக்கணித்தாரா விஜய் சேதுபதி?
கலைமாமணி விருது வழங்கும் விழாவிற்கு தாமதமாக வந்ததால், முதல்வர் கையால் விருதைப் பெறவில்லை நடிகர் விஜய் சேதுபதி. ஏற்கனவே காஷ்மீர் பிரச்சினையில் அவரது பேசியது சர்ச்சையில் சிக்கியிருக்கும் நிலையில், அவர் இந்த விருதை புறக்கணித்தாரா என்ற சந்தேகம் எழுந்துள்ளது. திரைத்துறை, எழுத்து உட்பட பல்வேறு துறைகளில் சிறந்து விளங்கிய 201 கலைஞர்களுக்கு தமிழக அரசின் உயரிய விருதான கலைமாமணி விருதுகளை முதல்வர் எடப்பாடி பழனிசாமி நேற்று சென்னையில் நடந்த விழாவில் வழங்கி கவுரவித்தார். கலைவாணர் அரங்கில் நடந்த இந்த விழாவில், சபாநாயகர் தனபால் தலைமையில் நடைபெற்ற இந்த விழாவில் அமைச்சர்கள், தலைமைச் செயலாளர் சண்முகம் உள்ளிட்டோர் பங்கேற்றனர். கலைமாமணி விருது பெரும் கலைஞர்களுக்கு மூன்று சவரன் எடையுள்ள பதக்கமும், ஒரு லட்சம் ரூபாய் காசோலையும் வழங்கப்பட்டது.
கடந்த 2011ம் ஆண்டு முதல் 2018ம் ஆண்டு வரை விருதுக்கு தேர்வானவர்களுக்கு இந்த விருது வழங்கப்பட்டது. இதில், 2017ம் ஆண்டுக்கான விருதுப் பட்டியலில் நடிகர் விஜய் சேதுபதி, நடிகை பிரியாமணி, இயக்குநர் ஹரி, இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா, நகைச்சுவை நடிகர் சிங்கமுத்து, தேவார இசை சம்பந்த ஓதுவார் உட்பட 28 கலைஞர்கள் தேர்வு செய்யப்பட்டிருந்தனர்.
ஆனால், இந்த விழாவுக்கு தாமதமாகவே வந்தார் விஜய் சேதுபதி. அவர் வருவதற்கு முன்னதாகவே முதல்வர் விருதுகளை வழங்கி விட்டு கிளம்பிச் சென்று விட்டார். எனவே, முதல்வரைத் தனியாக சந்தித்து விருதைப் பெற்றுக் கொள்வதாகச் சொல்லி அங்கிருந்து கிளம்பிச் சென்று விட்டார் விஜய் சேதுபதி.
இந்த சம்பவம் எதிர்பாராமல் நடந்ததா என்ற சந்தேகம் விழாவுக்கு வந்தவர்களுக்கு ஏற்பட்டுள்ளது. ஏனென்றால், மெல்போர்ன் விழாவில் பேசியபோது, விஜய் சேதுபதி காஷ்மீர் விவகாரம் தொடர்பாக மத்திய அரசை கடுமையாக விமர்சித்திருந்தார். காஷ்மீர் விவகாரம் ஜனநாயகத்திற்கு எதிரானது என அவர் கூறியிருந்தார்.
விஜய் சேதுபதியின் இந்தப் பேச்சுக்கு, தமிழக பாஜக தலைவர் தமிழிசை, அமைச்சர் மா.பா.பாண்டியராஜன் ஆகியோர் கடும் கண்டனங்களைத் தெரிவித்திருந்தனர். ரஜினி போன்ற மூத்த நடிகர்களே இந்த விவகாரத்தில் மத்திய அரசுக்கு ஆதரவு தெரிவித்த நிலையில், விஜய் சேதுபதியின் பேச்சு சலசலப்பை ஏற்படுத்தியது.