கேக்கிறவன் கேணையன் என்றால் எருமை மாடு ஏரோப்பிளேன் ஓட்டுமாம்: சம்மந்தரை வைச்சு ஏரோப்பிளேன் ஓட்டும் சுமந்திரன்

breaking
  நடைபெறவுள்ள ஶ்ரீலங்கா ஜனாதிபதித் தேர்தலில் அமெரிக்காவின் நிகழ்ச்சி நிரலுக்கு கேடு நேராதவாறு தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தீர்மானம் இருக்கும் என்று எதிர்பார்க்க கூடாது என்ற கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்மந்தனின் கருத்தினால் அமெரிக்கா அதிர்ச்சியடைந்துள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ. சுமந்திரன் தெரிவித்துள்ளார். தமிழ் தேசியக் கூட்டமைப்பினால் களுவாஞ்சிக்குடியில் ஏற்பாடு செய்யப்பட்டடிருந்த மக்கள் தெளிவூட்டல் நிகழ்வில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும்போதே நாடாளுமன்ற உறுப்பினர் சுமந்திரன் இதனை தெரிவித்துள்ளார். குறித்த விடயம் தொடர்பாக மேலும் தெரிவித்த நாடாளுமன்ற உறுப்பினர்,“இலங்கைக்கான விஜயத்தினை மேற்கொண்டிருந்த அமெரிக்க இராஜாங்க திணைக்களத்தின் மத்திய மற்றும் தெற்காசியாவிற்கான உதவி இராஜங்க செயலாளர் எலிஸ் வேல்ஸ் அம்மையாரை, சம்மந்தன் ஐயாவும் நானும் சந்தித்து கலந்துரையாடினோம். 2011 ஆண்டு உங்களுடைய நாட்டிற்கு (அமெரிக்காவிற்கு) நாங்கள் வருகை தந்து பல்வேறு மட்டத்தினரையும் சந்தித்து கலந்துரையாடி தீர்க்கமான முடிவு ஒன்று மேற்கொள்ளப்பட்டது. அதனடிப்படையில் ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவையில் 3 தீர்மானங்களை அமெரிக்க கொண்டு வந்திருந்தது. அவற்றை இலங்கை அரசாங்கமும் ஏற்றுக் கொண்டிருந்தது. ஆனால், அவை தொடர்பாக சில நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டிருக்கின்ற போதிலும் எதுவும் பூரணப்படுத்தப்படவில்லை. குறிப்பாக மீளநிகழாமையை உறுதிப்படுத்துவதற்கான புதிய அரசியலமைப்பு உருவாக்கும் முயற்சிகள் பூரணப்படுத்தப்படவில்லை. இவற்றையெல்லாம் எவ்வாறு முன்னகர்த்துவது என்று அமெரிக்க பிரதிநிதியிடம் சம்மந்தன் ஐயா கேட்டார். அதற்கு பதிலளித்த அமெரிக்க உதவி இராஜங்க செயலாளர், தேர்தல் வருகின்றதல்லவா, அதில் எவ்வாறான கேடும் நேராதவாறு பார்த்துக்கொள்ள வேண்டும் என்ற கோரிக்கை முன்வைத்தார். அதனை உடனடியாக மறுத்த சம்மந்தன் ஐயா, முடியாது – கேடு நிகழக்கூடாது என்பதற்காக செயற்பட்டு நாங்கள் களைத்துப் போய் விட்டோம் என்பதையும் எதிர்காலத்தில் கேடு நிகழக்கூடாது என்பதற்காக மட்டும் எமது மக்கள் வாக்களிக்க மாட்டார்கள் என்பதையும் உறுதியாக தெரிவித்துவிட்டு எழுந்து சென்று விட்டார். சம்மந்தன் ஐயாவின் இந்த தீர்மானத்தினால் உதவி இராஜங்க செயலாளர் எலிஸ் வேல்ஸ் அம்மையார் அதிர்ச்சியடைந்து விட்டார்” என்று நாடாளுமன்ற உறுப்பினர் எம். ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார்.