காஷ்மீரிகளும், பாகிஸ்தானியர்களும் ஒன்றுதான்.?

breaking
காஷ்மீரிகளும், பாகிஸ்தானியர்களும் ஒன்றுதான் என்று பாகிஸ்தான் ஜனாதிபதி ஆல்வி சர்ச்சைக்கிடம் அளிக்கிற வகையில் பேசி உள்ளார். காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து அளிக்கும் இந்திய அரசியல் சாசன சட்டத்தின் பிரிவு 370-ஐ மத்திய அரசு அதிரடியாக ரத்து செய்து உள்ளது. மேலும் காஷ்மீரை இரு யூனியன் பிரதேசங்களாகவும் பிரித்துள்ளது. இதனால் காஷ்மீர், யூனியன் பிரதேசம் என்ற வகையில் மத்திய அரசின் நேரடி கட்டுப்பாட்டின்கீழ் வருவது பாகிஸ்தானுக்கு கலக்கத்தை ஏற்படுத்தி உள்ளது. காஷ்மீர் விவகாரம், எங்கள் உள்நாட்டு விவகாரம் என்று சர்வதேச சமூகத்திடம் இந்தியா தெளிவுபடுத்திவிட்டது. இந்த நிலையில், பாகிஸ்தான் சுதந்திர தினத்தையொட்டி இஸ்லாமாபாத்தில் நேற்று நடந்த நிகழ்ச்சியில், அந்த நாட்டின் ஜனாதிபதி ஆரிப் ஆல்வி கலந்துகொண்டு பேசினார். அப்போது அவர் கூறியதாவது:- எந்த நிலையிலும் காஷ்மீர் மக்களை தனிமையில் அப்படியே விட்டு விட மாட்டோம். அவர்களின் கண்ணீர் எங்கள் இதயங்களை கலங்கச்செய்கிறது. எங்கள் துயரம் பொதுவானது. காஷ்மீரிகளும், பாகிஸ்தான் மக்களும் ஒன்றுதான். நாம் காஷ்மீர் மக்களுடன் இருப்போம். காஷ்மீர் மக்களுடன் எப்போதும் நிற்போம். அப்படியே தொடர்ந்து செய்வோம். எல்லை கட்டுப்பாட்டு கோடு பகுதியில் சண்டை நிறுத்த ஒப்பந்தத்தை மீறி இந்தியா அப்பாவி பொதுமக்கள் மீது துப்பாக்கிச்சூடு நடத்துகிறது. பீரங்கியால் சுடுகிறது. பாகிஸ்தான் சமாதானத்தை விரும்பும் நாடு. காஷ்மீர் பிரச்சினையை பேச்சுவார்த்தைகள் மூலம் தீர்க்க விரும்புகிறது. அதே நேரத்தில் நமது சமாதான கொள்கையை பலவீனமாக இந்தியா எடுத்துக்கொள்ளக்கூடாது. இவ்வாறு அவர் கூறினார். காஷ்மீர் இந்தியாவின் ஒருங்கிணைந்த ஒரு பகுதி, காஷ்மீர் மக்கள் இந்திய மக்கள் என்கிறபோது, அவர்களும் பாகிஸ்தான் மக்களும் ஒன்றுதான் என்று பாகிஸ்தான் ஜனாதிபதி ஆரிப் ஆல்வி கூறி இருப்பது சர்ச்சைக்கு உரியது ஆகும்.