Take a fresh look at your lifestyle.

கதிர் ஆனந்தை எம்.பி.யாக்கிய வேலூர் மக்களுக்கு அவமானமில்லையா விளாசும் சீமான்.!

வேலூர் தேர்தலில் திமுக வேட்பாளர் கதிர் ஆனந்த்தை மக்கள் தேர்ந்தெடுத்திருப்பது குறித்து நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கடுமையாக சாடியுள்ளார்.

‘மாற்று அரசியல்! மாற்று அரசியல்!’ என்று சில தலைவர்கள் சொல்லிக் கொண்டுதான் இருக்கிறார்களே தவிர செயலில் எந்த மாறுபாட்டையும் காட்டுவதில்லை. ஆனால் சீமானோ கூட்டணி வைக்கும் கட்சிகளின் தரம், தேர்தல் அறிக்கை, பிரசார யுக்தி, பிரசாரத்தில் பேசும் பொருள் ஆகியவற்றில் மிகப்பெரிய மாற்றத்தை காட்டுகிறார்.

 

பணம் மற்றும் செல்வாக்கில் ஆனானப்பட்டவர்களான விஜயகாந்த், தினகரன் மற்றும் கமல்ஹாசன் ஆகியோரே சில தேர்தல்களை புறக்கணிக்கும் வேளையில் சீமான் புறம் காட்டாமல், நெஞ்சு நிமிர்த்தி போட்டியிடுவது ஆச்சரியப்படுத்துகிறது. இப்போது கூட வேலூர் லோக்சபா தேர்தலில் போட்டியிட்டு தோல்வியை தழுவியுள்ளார். இந்த சூழலில் அங்கே வென்றிருக்கும் தி.மு.க.வையும், தோற்றிருக்கும் அ.தி.மு.க.வையும் தன் வெந்நீர் வார்த்தைகளால் வைத்து விளாசியுள்ளார். அவரது கருத்துக்களில் சாட்டையடியான வரிகளின் அணிவகுப்பு இதோ….

ஐயா துரைமுருகனின் மகன் கதிர் ஆனந்த் வேலூர் நாடாளுமன்ற தேர்தலில் வெற்றி பெற்றார்! என அத்தனை ஊடகங்களும் அறிவிக்கின்றன. உண்மையில் அவர் வெற்றி பெற்றார்! என்பது தவறு. வெற்றியை வாங்கினார் என்பதே சரி.

அண்ணாவின் பெயரைச் சொல்லி கட்சி நடத்தும் தி.மு.க., மற்று அ.தி.மு.க. இரண்டும் தவிட்டை காட்டித் தங்கத்தை வாங்கிக் கொண்டிருக்கிறார்கள்.

மற்ற லோக்சபா தொகுதிகளோடு சேர்த்து வேலூரில் ஏன் தேர்தல் நடைபெறவில்லை? கத்தை கத்தையாக கதிர் ஆனந்தின் பணம் சிக்கியது, வாக்காளர்களுக்கு கொடுப்பதற்காக வைத்திருந்தார்! என்றெல்லாம் குற்றம் சாட்டி காணொலி காட்டினார்கள்.

யாரால் தேர்தல் ரத்தானதோ இன்று அவர்தான் நாடாளுமன்ற உறுப்பினராகியுள்ளார். பின் ஏன் அந்த நடவடிக்கை? இங்கு மட்டுமல்ல ராதாகிருஷ்ணன் நகர் இடைத்தேர்தலிலும் இதே நிலைதான்.

பணத்தை ரகசியமாக விநியோகிக்கும் முறையை வேட்பாளர்களுக்கு கற்றுக் கொடுக்கத்தான் தேர்தலை ரத்து செய்கிறதா ஆணையம்? கதிர் ஆனந்த், தினகரன், செந்தில்பாலாஜி என இவர்களின் கதைகளில் இதுதான் நடந்திருக்கிறது.

பணம் விநியோகித்தார்கள் என்று குற்றம்சாட்டப்பட்ட நபர்கள்தான் மீண்டும் போட்டியிட்டு வென்றுள்ளார்கள். இவர்கள் மீது தேர்தல் ஆணையம் நடவடிக்கை எடுக்காதது ஏன்?

அட ஆணையத்தை விட்டுத் தள்ளுங்கள். மக்களும் மீண்டும் மீண்டும் இவர்களுக்குத்தானே வாக்களித்து வெற்றி பெற வைக்கிறார்கள். இப்படிப்பட்ட நபர்களை தங்களின் பிரதிநிதியாக தேர்ந்தெடுப்பது மக்களுக்கு அவமானமாக இல்லையா?

இந்த தேசத்திலேயே தேர்தல் ரத்தான தொகுதியாக வேலூர் அறிவிக்கப்பட்டதே! யாரால் அந்த அவமானம் ஏற்பட்டதோ அதே மனிதரையே நாம் தேர்ந்தெடுக்கிறோமே எனும் வெட்கமும், வேதனையும் வேலூர் மக்களுக்கு கொஞ்சங்கூட இல்லையா?

நாங்கள் பணத்துக்கு விலை போகாத மக்கள்! என்று சொல்லி, வேட்பாளர்களில் எளிய பிள்ளை ஒருவரை தங்களின் நாடாளுமன்ற தொகுதி உறுப்பினராக தேர்வுசெய்து ஒரு புரட்சியை செய்திருக்க வேண்டாமா வேலூர் மக்கள்

கோடி கோடியாய் பணத்தைக் கொட்டிய ஏ.சி.சண்முகத்துக்கும், அவருக்கு நிகராக கொட்டிய கதிர் ஆனந்துக்கும் அள்ளியள்ளி வாக்குகளை போட்டுள்ளனர். வெற்றி வித்தியாசம் பத்தாயிரத்துக்கும் குறைவே. அப்படியானால் இந்த இரண்டு நல்லவர்களில் யாரை தேர்ந்தெடுப்பது? என திக்கித் திணறி முடிவை தந்திருக்கிறார்கள் மக்கள், இல்லையா