தேவாலயத்தை உடைத்து அசிங்கப்படுத்தியவர்களை தேடும் விசேட பணியில் ஶ்ரீலங்கா காவல்துறை

breaking
  வடதமிழீழம்: வவுனியா கூமாங்குளம் பகுதியில் தேவாலயமொன்று உடைக்கப்பட்ட சம்பவம் நேற்று இரவு இடம்பெற்றிருப்பதாக ஶ்ரீலங்கா காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். இச் சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருகையில், வவுனியா கூமாங்குளம் முறியாகுளம் பகுதியிலுள்ள புனித இராஜப்பர் தேவாலயத்தில் விசமிகள் சிலரால் நேற்று இரவு உடைத்திருக்கலாம் என சந்தேகத்துடன் நேற்று மாலை தேவாலயத்திற்கு வழிபடச்சென்ற பொதுமக்கள் சிலுவைக்கு அருகே வைக்கப்பட்டுள்ள பூச்சாடி எரியூட்டப்பட்டிருப்பதை அவதானித்ததையடுத்து நிர்வாகத்திற்கு தெரியப்படுத்தியுள்ளனர். இன்று (15.08) காலை தேவாலயத்திற்கு ஆலய நிர்வாகத்தினர் சென்று பார்த்த போது தேவாலயத்தின் பின் பக்கமாக உடைக்கப்பட்டு உள்ளே சிலர் சென்றுள்ளதாகவும் நிறப்பூச்சை பயன்படுத்தி ஆலயத்தின் சுவரில் தகாத வார்த்தைகள் எழுதப்பட்டுள்ளதை அவதானித்த நிர்வாகத்தினரால் வவுனியா பொலிசாருக்கு தெரியப்படுத்தியுள்ளனர். இதையடுத்து சம்பவ இடத்திற்கு சென்ற வவுனியா குற்றத்தடுப்பு பொலிஸ் பொறுப்பதிகாரி தலைமையிலான பொலிஸ் குழுவினர் மோப்ப நாயின் உதவியுடன் தேடுதலினை மேற்கொண்டு வருகின்றனர். இந்நிலையில் ஆலயம் உடைக்கப்பட்டு தகாத வார்த்தைகள் எழுதப்படுள்ளது மட்டுமே இடம்பெற்றுள்ளதாகவும் திருட்டு சம்பவங்கள் எவையும் இடம்பெற்றிருக்கவில்லையென ஆரம்பகட்ட விசாரணைகளின் மூலம் தெரியவருவதாகவும் மேலதிக விசாரணைகள் இடம்பெறுவதாகவும் பொலிசார் தெரிவித்துள்ளனர். எனினும் இச் சம்பவம் தொடர்பாக இதுவரை எவரும் கைது செய்யப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.