அரசியலுக்கு அடிபணியாமல் மக்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்துங்கள்: பேராயர் வேண்டுகை

breaking
  பொலிஸார் மற்றும் பாதுகாப்பு துறையினர் மக்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்துவதற்காக அரசியல் தேவைகளுக்கு அடிபணியாது சுயாதீனமாகச் செயற்பட வேண்டும் என்று தெரிவித்த பேராயர் கர்தினால் மெல்கம் ரஞ்சித் ஆண்டகை, இவர்கள் எவ்வித பயமும் இன்றி தைரியமாக தமது கடமைகளை நிறைவேற்ற வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்தார். குற்றம் மற்றும் குற்றப்புலனாய்வு பிரிவுக்கு பொறுப்பான பிரதி பொலிஸ்மா அதிபர் பிரியந்த ஜயகொடியின் நூல் வெளியீட்டு விழா கொழும்பில் இடம்பெற்றது. இந்நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே பேராயர் இவ்வாறு தெரிவித்தார். தற்போது சில பொலிஸ் அதிகாரிகள் அரசியல்வாதிகளின் தேவைக்கேற்ப செயற்படுகிறார்கள். இவ்வாறு அரசியல் தேவைகளை நிறைவேற்றிக் கொள்வதற்காக உண்மைகளை வெளிப்படுத்தாது விட்டால் பொலிஸ் சேவையின் தனித்துவம் மற்றும் முக்கியத்துவம் இல்லாமல் போய்விடும். பொது மக்கள் மத்தியில் காணப்படுகின்ற சந்தேகம் , அச்சம் என்பவற்றை இல்லாமல் செய்து நீதியை நிலைநாட்ட வேண்டிய பொறுப்பு பொலிஸ் அதிகாரிகளுக்கு கட்டாயமாக்கப்பட்டுள்ளது. எனவே அரசியல் அழுத்தங்களுக்கு தலை சாய்க்காது பொலிஸ் அதிகாரிகளும் பாதுகாப்பு அதிகாரிகளும் தமது கடமையை முறையாக முன்னெடுக்க வேண்டும். எவ்வித பயமும் இன்றி மக்களுக்காக தையரியமாக சேவை செய்ய வேண்டும். தற்போது மக்களிடையே மதங்கள் மீதான நாட்டம் குறைவடைந்துள்ளது. அத்தோடு மதத் தலைவர்கள் முன்னுதாரணமாக செயற்படுகின்றமையும் குறைவடைந்துள்ளது. அனைவரும் பணம் மற்றும் அரசியல் இலாபத்திற்காக சுயநலமாகச் செயற்படுகின்றார்கள். இவ்வாறு செயற்படுவதை தவிர்த்துக் கொள்ள வேண்டும்.