Take a fresh look at your lifestyle.

மன்னார் மாவட்டத்தில் வரட்சியினால் 63115 பேர் நேரடியாக பாதிப்பு

 

வடதமிழீழம்: மன்னார் மாவட்டத்தில் நிலவும் கடும் வரட்சியான காலநிலை காரணமாக, மன்னார் மாவட்டத்திலுள்ள 05 பிரதேச செயலகப் பிரிவுகளிலுமுள்ள 104 கிராம அலுவலகப் பிரிவுகளில் 18 ஆயிரத்து 704 குடும்பங்களைச் சேர்ந்த 63 ஆயிரத்து115 பேர் நேரடியாக பாதிக்கப்பட்டுள்ளதாக, மன்னார் மாவட்ட அனர்த்த முகாமைத்துவ திணைக்களத்தின் இறுதி அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதில் 13 ஆயிரத்து 416 குடும்பங்களைச்சேர்ந்த 46 ஆயிரத்து 632 பேருக்கு மன்னார் அனர்த்த முகாமைத்துவ நிவாரண சேவை 03 லொறி பவுசர்களிலும், 05 டிரக்டர் பவுசர்களிலும் நாளாந்தம் 7,101 லீற்றர் குடிநீர் வழங்கி வருவதாக,மன்னார்மாவட்ட அனர்த்த முகாமைத்துவ நிலையம் தெரிவித்தது.

இவற்றில் மடு, முசலி பிரதேச செயலகப் பிரிவுகளே குடிநீர் பிரச்சினைக்கு அதிகமாக முகம் கொடுத்து வருகின்றன. மடு பிரதேச செயலகப் பிரிவில் 4,099 குடும்பங்களும், முசலிப் பிரதேசத்தில் 3,723 குடும்பங்களும் குடிநீர் பிரச்சினைக்கு அதிகமாக முகம் கொடுத்து வருகின்றன.

மன்னார் மாவட்டத்தில் தொடர்ச்சியாக வரண்ட காலநிலை நிலவி வருகின்றது.இதனால் மன்னார் மாவட்டத்தில் பல பகுதிகளில் மேற்கொள்ளப்பட்டு வருகின்ற மேட்டுநிலப் பயிர்ச்செய்கை பாதிப்புக்குள்ளாகியதாக விவசாயிகள் கவலை தெரிவிக்கின்றனர்.

கடந்த ஒரு சில வாரங்களாக மன்னார் பகுதியில் மழை பெய்வதற்கான அறிகுறிகள் காணப்படுகின்ற போதும்,மழை சிறிதளவு கூட பெய்யவில்லை.

மன்னார் மாவட்டத்திலுள்ள மேற்படி 05பிரதேச செயலகப் பிரிவுகளிலும் கடும் வரட்சி நிலவி வருகின்றமையால் கிணற்று நீர் வற்றிய நிலையில் காணப்படுகின்றது.

குறிப்பாக நானாட்டான், மாந்தை, மடுப் பிரதேசங்களில் விவசாய குடும்பங்களால் மேற்கொள்ளப்பட்ட மேட்டுநிலப் பயிர்ச்செய்கைகள் மற்றும் வீட்டுத் தோட்டங்கள் பாதிப்படைந்த நிலையில் காணப்படுவதாக விவசாயிகள் கவலை தெரிவிக்கின்றனர்.