ரணிலுடன் இணைந்து எமது போராட்டத்தை மழுங்கடிக்கும் கூட்டமைப்பு : காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள் குற்றச்சாட்டு

breaking
  வடதமிழீழம்: வவுனியாவில் சுழற்சி முறையில் 914 நாட்களாக தமது உறவுகளைத் தேடி போராடி வரும் காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகளால் இன்று மாலை கவனயீர்ப்பு போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது. வவுனியா, ஏ9 வீதியில், வீதி அபிவிருத்தி அதிகார சபைக்கு முன்னால் உள்ள காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளில் போராட்ட தளத்தின் முன்னால் குறித்த கவனயீர்ப்பு போராட்டம் முன்னெடுக்கப்பட்டது. குறித்த போராட்ட களத்தில் இருந்த தந்தை ஒருவர் ஓமந்தை சோதனைச் சாவடியில் ஒப்படைத்த தனது மகனான செல்வராசா அச்சுதன் (வயது 21) என்ற மகனை தேடி வந்த நிலையில் மகன் பற்றிய எந்த தகவலுமின்றி செவ்வாய்கிழமை தனது 56 ஆவது வயதில் காலமானார். இதனை வெளிப்படுத்தும் முகமாகவே குறித்த கவனயீர்ப்பு போராட்டம் இடம்பெற்றது. கவனயீர்ப்பு போராட்டத்தில் கலந்து கொண்டவர்கள் மரணித்தவரின் பதாதை மற்றும் அமெரிக்கா, ஐரோப்பிய ஒன்றியக் கொடிகளையும் ஏந்தியிருந்தனர். கவனயீர்ப்பு போராட்ட முடிவில் இடம்பெற்ற ஊடக சந்திப்பில், தமது பிள்ளைகளை தேடி போராட்டம் நடத்தி வரும் தாய், தந்தையர்கள் தினம் செத்து வருகின்றனர். தமிழ் தேசியக் கூட்டமைப்பு ரணில் அரசாங்கத்துடன் இணைந்து எமது போராட்டத்தை மழுங்கடித்து வருவதுடன், சர்வதேச விசாரணையை உள்ளூர் விசாரணையாக மாற்றியமைத்துள்ளது. இருப்பினும் எமக்கான நீதி கிடைக்கும் வரை எமது போராட்டம் தொடரும் எனத் தெரிவித்தனர்.