யுத்தக் குற்றங்களுடன் தொடர்புடையவர்கள் சுதந்திரமாக நடமாட கூட்டமைப்பே முழுப் பொறுப்பு - கஜேந்திரன்.!

breaking
மகிந்த ராஜபக்ச, கோத்தபாய ராஜபக்ச, சவேந்திர சில்வா, சரத் பொன்சேகா உள்ளிட்ட யுத்தக் குற்றங்களுடன் தொடர்புடையவர்கள் தற்போது சுதந்திரமாக நடமாடுவதற்கான நிலைமையை ஏற்படுத்திவிட்டவர்கள் நல்லாட்சி என்ற பெயரில் ஆட்சிப்பீடமேறிய மைத்திரிபால சிறிசேனவும், ரணில் விக்கிரமசிங்கவும் மட்டுமல்ல தமிழ்த்தேசியக் கூட்டமைப்பினருக்கும் இதில் முழுமையான பங்குள்ளதாக கடுமையாக குற்றம்சாட்டியுள்ள தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியின் பொதுச் செயலாளரும், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான செல்வராஜா  கஜேந்திரன் சவேந்திர சில்வாவின் நியமனம் என்பதும் பேரினவாத சிந்தனையுடைய மத பீடங்களையும், மக்களையும் மகிழ்ச்சிப்படுத்தித் தங்கள் அரசியல் செல்வாக்கைத் தொடர்ந்தும் தக்கவைத்துக் கொள்வதற்காக எடுக்கப்பட்டதொரு முடிவாகவேயுள்ளது எனவும் சாடியுள்ளார்.
இலங்கையின் புதிய இராணுவத் தளபதியாக சவேந்திர சில்வா ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனாவால் நியமிக்கப்பட்டுள்ளமை தொடர்பாக கருத்துத் தெரிவித்த போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார். 
 
அவர் மேலும் தெரிவிக்கையில்,  
சர்வதேச மனித உரிமை அமைப்புக்களாலும், தமிழ்மக்களினாலும் யுத்தக்க குற்றவாளியாகவும், மனித உரிமை மீறல்களில் ஈடுபட்டதாகவும் குற்றம்சாட்டப்பட்டுள்ள சவேந்திர சில்வா இலங்கையின் 23 ஆவது இராணுவத் தளபதியாக நியமிக்கப்பட்டுள்ளார்.
இந்த நியமனம் தொடர்பில் பல்வேறு தரப்புக்களிலிருந்தும் கண்டனங்கள் எழுந்துள்ளன. ஆனால், தமிழர்களைப் பொறுத்தவரை சவேந்திர சில்வாவின் நியமனம் ஆச்சரியமளிக்குமொரு விடயமல்ல.
சிங்கள- பெளத்த பேரினவாத அரசின் கடந்தகால, நிகழ்காலச் செயற்பாடுகள் அனைத்தும் இந்தத் தீவை முழுமையாக சிங்கள- பெளத்த மயமாக்கும் வகையிலேயே அமைந்துள்ளன. தமிழ்மக்களுடன் அதிகாரங்களைப் பகிர்ந்து கொண்டு தமிழ்மக்களும், சிங்கள மக்களும் சமத்துவமாக வாழும் நிலையை உருவாக்குவதை விடுத்துத் தமிழ்மக்களைப் படிப்படியாக கரைத்து அழித்துத் தமிழர்களை இல்லாமல் செய்துவிட்டுத் தீவை முழுமையாக சிங்கள- பெளத்த மயமாக்க வேரண்டுமென்பது தான் அவர்களுடைய நிகழ்ச்சி நிரல்.
இந்நிலையில் இவ்வாறான சிங்கள- பெளத்த மயமாக்கல் என்ற நிகழ்ச்சி நிரலுக்குத் தடையாகவிருந்தவர்கள் தமிழீழ விடுதலைப்புலிகள். குறிப்பாக 1970 ஆம் ஆண்டிலிருந்து 2009 ஆம் ஆண்டு வரை வடக்கு- கிழக்கில் சிங்கள- பெளத்த மயமாக்கலைத் தடுத்து நிறுத்துவதில் விடுதலைப்புலிகளின் பங்கு மிகப் பாரியதாகவிருந்தது. இதற்காக 50 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாவீரர்கள் உயிர்த்தியாகம் செய்துள்ளனர். உலகத் தமிழினமே விடுதலைப்புலிகளுக்குப் பின்னால் நின்று தமிழ்த்தேசத்தைப் பாதுகாப்பதற்கான போராட்டத்துக்கு வலுச் சேர்த்துக் கொண்டிருந்தார்கள்.  சிங்கள-  பெளத்த பேரினவாதிகளின் மகாவம்சம் என்ற புனைகதையின் அடிப்படையில் இலங்கைத் தீவை முழுமையாக சிங்கள மயமாக்கல் என்ற கனவுக்கு இடைஞ்சலாகவிருந்த காரணத்தால் தமிழ்மக்கள் மீது ஒரு இனவழிப்பை மேற்கொண்டு அந்த இன அழிப்பின் ஊடாக விடுதலைப்புலிகளை அழித்தொழித்திருக்கிறார்கள். இதன்மூலம் அவர்கள் சிங்கள பெளத்த மயமாக்கலுக்கான தடையைத் தற்போது நீக்கியுள்ளனர்.
இதற்காகப் பங்களிப்புச் செய்த அனைவரையும் சிங்கள பெளத்த பேரினவாதமானது தேச பக்தர்களாகப் போற்றிப் பூசிக்கின்ற போக்குத்தான் கடந்த பத்துவருடங்களாகத் தொடர்ந்தும் நீடித்து வருகிறது.
சர்வதேச சமூகம் மகிந்த ராஜபக்ச, கோத்தபாய ராஜபக்ச, சவேந்திர சில்வா போன்றவர்களை யுத்தக் குற்றவாளிகளாகவும், தமிழர்கள் இவர்களை மிக மோசமான, கொடூரமான இனப்படுகொலையாளிகளாகவும் குற்றஞ்சாட்டிக் கொண்டிருக்க தென்னிலங்கை சிங்கள மக்களோ அவ்வாறானவர்களின் ஆட்சியதிகாரம் வர வேண்டும் என்ற நோக்குடன் மாத்திரமே செயற்பட்டுக் கொண்டிருக்கிறார்கள்.
2015 ஆம் ஆண்டுக்குப் பின்னர் பொதுஜனபெரமுன என்ற கட்சி உருவாக்கப்பட்டிருந்தது. அந்தக் கட்சி 2018 ஆம் ஆண்டு உள்ளுராட்சித் தேர்தலில் போட்டியிட்ட போது அந்தக் கட்சிக்கே மிகப் பெருமளவான சிங்கள மக்கள் வாக்களித்துள்ளனர். இதன் மூலமாகத் தமிழர்களை முழுமையாக இல்லாதொழித்து இந்தத் தீவை முழுமையாக சிங்கள- பெளத்தம் என்ற நிலையை நோக்கி கொண்டு செல்வதற்குத் தாம் நம்புகின்றவர்களேயே தலைவர்களாகத் தெரிவு செய்கின்றதொரு போக்குக் காணப்படுகிறது.
பெரும்பான்மைச் சிங்கள மக்களின் பேரினவாத மனநிலையை மகிழ்ச்சிப்படுத்துவதற்குத் தாம் எவ்வாறான செயற்பாடுகளைச் செய்தால் பெளத்த பீடங்கள் மத்தியில் பாராட்டுக்களையும், ஆதரவுகளையும் பெறலாம் என்று கருதுகின்றார்களோ அதனடிப்படையிலேயே சிங்கள ஆட்சியாளர்களும் செயற்பட்டு வருகிறார்கள்.
வடக்கு- கிழக்குத் தமிழ்மக்களின் 80 வீத வாக்குகளைப் பெற்று நாடாளுமன்றம் தெரிவு செய்யப்பட்டு தெரிவு செய்யப்பட்ட மறுவாரமே இந்த அரசு ஒரு நல்லாட்சி அரசு. இந்த அரசு மீது எங்களுக்கு நம்பிக்கையிருக்கிறது. அவர்களுடன் நாங்கள் இதயத்தால் இணைந்திருக்கின்றோம் எனவே, இந்த அரசாங்கம் தமிழ்மக்களுக்கு நீதி பெற்றுத் தரும். எனவே, யுத்தக் குற்றங்கள் தொடர்பாக நீங்கள் சர்வதேச விசாரணை நடாத்த வேண்டாம். அதனைக் கைவிடுங்கள். உள்ளக விசாரணைக்கு சந்தர்ப்பம் கொடுங்கள் என 2015 ஆம் ஆண்டு செப்ரெம்பர் மாதமளவில் சுமந்திரன் , மாவை தலைமையில் ஜெனிவாவுக்குச் சென்ற கூட்டமைப்புக் கும்பல் கோரியிருந்தது. அதன் பின்னர் ஒன்றரை வருடங்களாக எந்தவிதமான முன்னேற்றங்களுமில்லாத நிலையில் மீண்டும் 2017 ஆம் ஆண்டு மார்ச் மாதம் ஜெனிவாவுக்குச் சென்ற இதே கும்பல் மீண்டும் அவர்களுக்கு இரண்டு வருடகால அவகாசம் வழங்குமாறு கேட்டிருந்தது. அவர்களின் எஜமானர்களான இந்திய மற்றும் மேற்குலக நாடுகளின் வேண்டுகோளின் அடிப்படையிலேயே அவர்கள் இவ்வாறு செயற்பட்டிருந்தார்கள்.
இதன்பின்னர் கடந்த- 2017 ஆம் ஆண்டு மார்ச் மாதத்திலிருந்து 2019 ஆம் ஆண்டு மார்ச் மாதம் வரையான இரண்டாண்டுகள் தமிழ்மக்களுக்கான பொறுப்புக் கூறல் தொடர்பாகவோ, காணாமற் போனோர் விவகாரம் தொடர்பாகவோ எந்தவிதமான பதிலும், நீதியும் கிடைக்காத நிலையில் 2019 ஆம் ஆண்டு மார்ச் மாதம் மீண்டும் ஜெனிவா சென்ற தமிழ்த்தேசியக் கூட்டமைப்புக் கும்பல் தனிப்பட்ட ரீதியில் தங்களுக்கான சுகபோகங்களைப் பெற்றுக் கொண்டு தங்களுடைய எஜமானர்களின் வேண்டுகோளுக்கிணங்க மீண்டும் அரசாங்கத்திற்கு இரண்டு வருட கால அவகாசத்தைப் பெற்றுக் கொடுத்திருக்கிறார்கள்.
கூட்டமைப்பினால் கடந்தகாலங்களில் பாதுகாக்கப்பட்டவர்களே தற்போது தமிழ்மக்களை மீண்டும் அழிக்க கூடிய வகையில் செயற்பட ஆரம்பித்திருக்கிறார்கள் என்பதே துரதிஷ்டவசமான உண்மை.
சர்வதேச சமூகத்தை எடுத்து நோக்கினால் யஸ்மின் சூக்கா போன்றவர்கள் நேர்மையாகத் தமிழ்மக்களுக்கு நீதி பெற்றுக் கொடுக்க வேண்டுமென்பதற்காக இனப்படுகொலைக் குற்றங்களை நிரூபிக்க வேண்டுமென்ற அடிப்படையில் செயற்பட்டு வருகிறார்கள்.  இன்னொருபுறத்தில் அமெரிக்கா போன்ற மேற்குலக நாடுகள் நீலிக்கண்ணீர் வடித்துக் கொண்டிருக்கின்றன.
இனப்படுகொலையாளியான கோத்தபாய ராஜபக்ச தங்களுடைய நாட்டிற்கு வருகின்ற போது அவருக்கெதிராக வழக்குகளைப் போட்டு நடவடிக்கை எடுப்பதை விட்டுவிட்டுத் தற்போது கோத்தபாய ராஜபக்ச ஜனாதிபதி வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் மகிந்த தரப்புடன் ஏதோவொரு வகையில் தொடர்புகளை ஏற்படுத்தி பேசுகின்ற போக்கையும் காண முடிகிறது. இவ்வாறான நிலையில் மேற்குலக நாடுகள் யுத்தக் குற்றங்களை எதற்காகப் பயன்படுத்துகிறார்கள் என்பதை நோக்குமிடத்தில் இவர்கள் மீது நெருக்கடிகள் கொடுப்பதன் ஊடாக சீனசார்பு போக்கிலிருந்து இவர்களை மெல்ல விலகச் செய்து தங்களுடைய நலன்களைப் பேண வேண்டுமென்பதே இவர்களின் குறியாகவுள்ளது.
ஆகவே, எதிர்காலத்திலாவது இடம்பெறுகின்ற ஜெனிவா அமர்வுகளின் போது தமிழ்மக்கள் ஒருமித்த கருத்துக்களுடன் யுத்தக் குற்ற விவகாரங்களை ஐ. நா பாதுகாப்புச் சபை நோக்கி அல்லது சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தை நோக்கி நகர்த்துவதற்கான அழுத்தங்களை வழங்க வேண்டும்.
நடைபெற்று முடிந்த இனப்படுகொலைக்கு சர்வதேச குற்றவியல் விசாரணையே வேண்டுமென்பதாக தமிழ்மக்களின் நிலைப்பாடிருக்கின்ற போது தமிழ்மக்களால் தெரிவு செய்யப்பட்ட அரசியல் தலைமைகளின் நிலைப்பாடு உள்ளக விசாரணைகளுக்கு சந்தர்ப்பம் கொடுங்கள் என்பதாகவுள்ளது. இவ்வாறான நிலையில் மக்களால் தெரிவு செய்யப்பட்ட பிரதிநிதிகளின் நிலைப்பாடே ஜெனிவாவில் எடுபடுகின்றது.  இவ்வாறான நிலையில் எதிர்காலத்திலாவது எமது மக்கள் இவ்வாறான விடயங்களை சரியாக விளங்கிக் கொண்டு மக்களுடைய விருப்பங்களை சரியான வகையில் சர்வதேச மட்டத்தில் பிரதிபலிக்கின்றவர்களை நாடாளுமன்றம் அனுப்புவதற்கான முடிவுகளை எடுக்க வேண்டும் எனவும் அவர் மேலும் வலியுறுத்தியுள்ளார்.