திருமாவளவனை தமிழ்த் தேசிய அரங்கிலிருந்து அகற்றும் முயற்சி

breaking

கடந்த வார இறுதியில், சனி, ஞாயிறு தினங்களில் லண்டனில் நடைபெற்ற இரண்டு நிகழ்ச்சிகளில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவரும் இந்திய நாடாளுமன்ற உறுப்பினருமான தொல். திருமாவளவன் கலந்துகொண்டு உரையாற்றியிருந்தார். லண்டனில் இயங்கும் ‘விம்பம்’ என்ற அமைப்பு இந்த இரண்டு நிகழ்ச்சிகளையும் ஏற்பாடு செய்திருந்தது. முதல் நாள் நிகழ்ச்சி திருமாவளவன் எழுதிய ‘அமைப்பாய் திரள்வோம்’ என்ற நூல் அறிமுகவிழாவாக அவரை மையப்படுத்தியதாக அமைந்தது. அடுத்த நாள் லண்டன் பல்கலைகழக மண்டபம் ஒன்றில் நடைபெற்ற நிகழ்சியில் அவரது கட்சி எதிர்கொள்ளும் சவால்கள் பற்றி திருமாவளவன் உரையாற்றினார். இந்த நிகழ்ச்சிகள் மற்றும் அவர் ஆற்றிய உரைகள் பற்றிப் பார்க்க முன்னர் திருமாவளவனின் அரசியலைச் சற்று நோக்குவோம். திருமாவளவன் ஒடுக்கப்பட்ட மக்களுக்கு ஆதரவாகப் போராடுவதற்கு அமைப்புக் கட்டிய ஒரு தமிழ்த் தேசியவாதி. தலைவர் பிரபாகரனையும், விடுதலைப்புலிகள் அமைப்பின் செயற்பாடுகளையும் பார்த்து அதனால் உந்தப்பட்டு ‘விடுதலைச் சிறுத்தைகள்’ அமைப்பை உருவாக்கியதாக அவரே பலமுறை கூறியிருக்கிறார். ஒடுக்கப்படும் மக்களுக்காகப் போரடப் புறப்பட்டவர் என்ற வகையில் அவரது தலைமையை ஏற்று கணிசமானவர்கள் அவரைப் பின்தொடர்ந்திருந்தால் தமிழக அரசியலில் ஒரு தவிர்க்க முடியாத சக்தியாகவும், சமூகமாற்றத்தை ஏற்படுத்துபவராகவும் அவர் அமைந்திருக்கக் கூடும். ஆனால் இயக்கமாக இயங்குவதிலிருந்து விலகி 1998 இல் தேர்தல் அரசியலுக்குள் அவர் கால்பதித்தார். கோட்டுபாட்டு அரசியலில் அவர் பெற்ற தோல்வி இந்த மாற்றத்திற்குக் காரணமாக அமைந்திருக்கலாம். இவ்விடயத்தில் அவரை மட்டும் குறைகூறுவதில் எவ்வித அர்த்தமில்லை. ஏனெனில் தமிழக சமூக அமைப்பு இன்றைக்கும் அவ்வாறுதான் இருக்கிறது. திருமாவளவன் லண்டன் பல்கலைக்கழக மண்டபத்தில் நடைபெற்ற கூட்டத்தில் கூறியதுபோன்று அவரது தலைமையை ஏற்றுச் செய்பட அறிவார்ந்த சமூகத்திலிருந்து ஒருவர்கூட முன்வரவில்லை. இன்னும் குறிப்பாகச் சொல்லப்போனால் அவரது சாதியினரைத் தவிர்த்து வேறுயாரும் அவரது தலைமையை ஏற்கத் தயாராக இல்லை. பத்தாம் வகுப்பு சித்தியடையாதவர்களை வைத்தே கடந்த முப்பதுவருடமாகத் தான் அரசியல் செய்வதாக மேற்படி உரையில் அவர் வேதனையுடன் குறிப்பிட்டார். ஆனால் திருமாளவனை ஆதரிப்பதுபோலக் காட்டி தங்களை முற்போக்காளர்களாக நிலை நிறுத்த முனைபவர்கள் ஏராளமாக இருக்கிறார்கள். இத்தகைய பின்னணியில் தனது சாதிவாக்குகளை மூலதனமாக்கி பதவிகளைப் பெற்றுக் கொள்ளும் நிலைக்குத் திருமாவளவன் தள்ளப்பட்டுள்ளார். திருமாவளவன் இப்போது ‘அமைப்பாகத் திரளும்’ ஒருவர் அல்ல. தேர்தல் கூட்டுகள் மூலம் பேரம் பேசி ஆசனங்களைப் பெற்றுக்கொள்ளும் நிலைக்கு அவரது அரசியல் குறுகிவிட்டது. ஆகையால் அவரது உண்மையான தமிழ்த் தேசிய நிலைப்பாட்டுக்கும், வலிந்து ஏற்படுத்தவேண்டியிருக்கிற இந்திய அதிகாரங்களுடான உறவிற்கும் இடையிலிருந்து அவர் அல்லாடுவது தெரிகிறது. அவர்சார்ந்த சாதி வாக்குகளுக்காக அவரை தமது அணியில் வைத்திருக்கும் திராவிட முன்னேற்றக் கழகம் மறுபுறத்தில் அனைத்துத் தமிழர்களுக்குமான ஒரு தலைவர் என்ற நிலையில் அவரை வைத்திருக்க விரும்பாது. ஆனால் அவருடனான கூட்டு மூலம் தாங்கள் சாதிகடந்து செயற்படுவதாக காட்டுவதற்கு திமுக அதனை வாய்பாகப் பயன்படுத்தி வருகிறது. இனி புத்தக வெளியீடு விடயத்திற்கு வருவோம். தங்களைத் முற்போக்குகளாகவும் தலித்திய ஆதரவாளர்களாகவும் காட்டிக்கொள்ள விரும்புகிற ஒரு சிறு குழுவினர் திருமாவளவனை தங்கள் பக்கம் வைத்திருக்க எடுத்த முயற்சியே இப்புத்தக வெளியீடு. தன்னுடைய புத்தகம் லண்டனில் வெளியிடப்படுகிறது என்ற ஒன்றை மாத்திரம் கருத்தில் எடுத்த திருமாளவனுக்கு அதனை யார் வெளியிடுகிறார்கள் என்பது ஒரு பொருட்டாகத் தோன்றவில்லை. காவிரி தொலைக்காட்சியில் நடைபெற்ற நேர்காணலில், இதுபற்றிக் கேட்கப்பட்டபோது அவரே இதனைத் தெரிவித்திருக்கிறார். லண்டனில் அவரைச் சந்தித்த தமிழ்ச் செயற்பாட்டாளர்களிடமும் இதனையே கூறியுள்ளார். இதுதான் ‘அமைப்பாய் திரள’ முற்பட்டவருக்கும், தேர்தல் கூட்டு மூலம் பதவிக் கதிரையை பிடிக்க முயல்பவருக்குமிடையிலான வேறுபாடு. லண்டனில் திருமாளவன் முன்னர் கலந்து கொண்ட கூட்டங்களை ஒழுங்கு செய்தவர்கள், அவரது பயணத்திற்கு உதவியவர்கள். தங்க இடம் கொடுத்தவர்கள் தமிழ்த் தேசிய செயற்பாட்டாளர்கள். அவர்கள் இப்போது திருமாளவனை அழைத்து நிகழ்ச்சி நடத்தத் தயாராக இல்லை. கொங்கிரஸ் கட்சியுடன் கூட்டு வைத்திருக்கும் அவரை தமிழ்த் தேசிய அரசியலில் உள்ளவர்கள் ஏற்க மறுப்பதில் ஆச்சரியமில்லை. இந்த இடைவெளியைத்தான் ‘விம்பம்’ அமைப்பு தமக்குச் சாதகமாகப் பயன்படுத்தியுள்ளது. இக்கூட்டங்களை ஏற்பாடு செய்தவர்களின் நோக்கத்தைப் புரிந்துகொள்வது ஒன்றும் சிரமமில்லை. திருமாவளவனை ஒரு தலித் இயக்த்தின் தலைவராகக் காட்டி அவரைத் தமிழ்த் தேசியத்திலிருந்து அந்நியப்படுத்த எடுத்த முயற்சிதான் இது. இருப்பினும் ‘விம்பம்’ எதிர்பார்த்தவாறு விடயங்கள் நடந்தேறவில்லை. திருமாவளவன் கலந்துகொண்ட இரண்டு நிகழ்ச்சிகளில் அவர் முடிந்தளவு தன்னைத் தமிழ்த் தேசியவாதியாக இனங்காட்ட முயற்சித்திருக்கிறார். தன்னை ஒரு தலித் கட்சி தலைவர் என அழைப்பதனையிட்டுக் கவலை கொள்வதாகத் தெரிவித்திருக்கிறார். கிடைத்த ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும் தலைவர் பிரபாகரனின் புகழ் பாடியிருக்கிறார். கூட்டிக் கழித்துப்பார்த்தால், கூட்ட ஏற்பாட்டாளர்களுக்கு சொந்தச் செலவில் சூனியம் வைத்த நிலைதான். இருந்தாலும் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியுடன் உறவாடவும், அதை வைத்து இதர தலித் அமைப்புகளுடன் தொடர்புகளை ஏற்படுத்தவும் அவர்களுக்கு ஒரு கதவு திறக்கப்பட்டிருக்கிறது. இதனைப் பயன்படுத்தி அவர்கள் மேலும் முன்னேறலாம்.

இக்கூட்டங்களில் திருமாவளவன் ஈழத்தமிழர்களுக்கு வழங்கிய அறிவுரையும் அவரை தமிழ்த் தேசியத்தளத்திலிருந்து ஒதுக்குவதற்கு உதவுவதாகவே அமைகிறது. இந்திய ஆளும்வர்க்கத்துக்கு ஆதரவாகவே ஈழத்தமிழர்கள் நடந்துகொள்ளவேண்டும் எனவும், பிரதமர் மோதி, பா.ஜ.க வின் தலைவரும் உள்துறை அமைச்சருமான அமித் ஷா ஆகியோருடன் தொடர்பாடல்களைப் பேணவேண்டும் எனவும் அவர் கூறியிருக்கிறார். உள்நாட்டில் மோதி அரசாங்கத்திற்கு எதிராகக் கருத்து வெளியிடும் திருமாளவன், ஜம்மு - காஸ்மீர் மாநிலத்திற்கு வழங்கப்பட்ட சிறப்புரிமையை இரத்துச் செய்தமையை எதிர்ப்பதாகக் கூறுபவர், ஈழத்தமிழர்கள் தங்கள் உரிமைகளைப் பெற்றுக்கொள்ளவதற்கு அதே அரசாங்கத்தை நாடுமாறு கூறுவது முரண்நகையாகவே அமைகிறது. தவிரவும் திருமாவளவனின் ஆலோசனைப்படி நடந்துகொள்வதாயின், ஈழத்தமிழர்கள் அழைத்து விழா எடுக்கவேண்டியவர் திருமாவளவன் அல்ல நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் போன்று மோதிக்கு நெருக்கமானவர்களே என்பதில் அவர் உடன்படுவாரா? திருமாவளவனை தமிழ்த் தேசிய அரசியலிலிருந்து பிரித்தெடுக்கும் முயற்சி பலவருடங்களுக்கு முன்னரே ஆரம்பிக்கப்பட்டுவிட்டது. 2007 ஒக்ரோபரில் பரிசில் தமிழ்த் தேசியத்திற்கு எதிரானவர்களால் நடத்தப்பட்ட ‘தலித் மாநாடு’ என்ற கூட்டத்திற்கு திருமாவளவன் அழைக்கப்பட்டிருந்தார். முதலில் அந்த அழைப்பை ஏற்ற அவர் பின்னர் அவருக்கு வழங்கப்பட்ட அழுத்தங்கள் காரணமாக அக்கூட்டத்தினைப் புறக்கணித்தார். மிகச்சிலரே கலந்துகொண்ட இக்கூட்டத்திற்கு முக்கியமளித்து பிபிசி தமிழ்ச்சேவை பெட்டக நிகழ்ச்சி ஒன்றை வழங்கியிருந்தது.

விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் முக்கிய உறுப்பினரும், தற்போது நாடாளுமன்ற உறுப்பினராகவும் தெரிவுசெய்யப்பட்டுள்ள துரை இரவிக்குமார், விடுதலைப்புலிகளைச் சாதிவாதிகளாகச் சித்தரித்து நேபாளத்திலிருந்து வெளியிடப்பட்ட Himal Magazine என்ற ஆங்கிலச் சஞ்சிகையில் ‘Castiest Tiger’ என்ற தலைப்பில் கட்டுரை ஒன்றை எழுதியிருந்தார். அமெரிக்காவைத் தளமாகக் கொண்டு இயங்கம் ஒரு அரசுசாரா நிறுவனத்தால் வெளியிடப்பட்ட இந்த சஞ்சிகையின் ஆசிரியர் குழுவிலிருந்த அகிலன் கதிர்காமர் என்பவர் விடுதலைப்புலிகளுக்கு எதிரான பரப்புரையில் ஈடுபட்டுவருபவர் என்பது அனைவரும் அறிந்ததே. போர் நடைபெற்ற காலத்தில் விடுதலைப்புலிகளுக்கு எதிரான பரப்புரைக்காக உருவாக்கப்பட்ட Sri Lanka Democracy Forum என்ற அமைப்பிலிருந்த நிர்மலா, இராகவன் ஆகியோருடன் தொடர்புகளைப் பேணிவந்த அகிலன் இவர்கள் இருவரது செவ்விகளையும் 2009 போர் இறுதிக்காலத்தில் மேற்படி சஞ்சிகையில் பிரசுரித்திருந்தார். திருமாவளவன் லண்டனில் கலந்துகொண்ட முதல்நாள் கூட்டத்திற்கு இதே இராகவன் என்பவரே தலைமை தாங்கினார் என்பதிலிருந்த இந்த வலைப் பின்னல்களைஅறிந்து கொள்ள முடிகிறது. இருப்பினும் இராகவன் என்பரையோ மேற்படி நிகழ்ச்சிகளை ஏற்பாடு செய்த மற்றவர்களையோ தான் அறிந்திருக்கவில்லை என திருமாவளவன் கூறியிருக்கிறார். இது உண்மையானால் திருமாவளவனுக்குத் தெரியாமலே பின்னப்பட்ட வலையில் அவர் அறியாமலே விழுந்திருக்கிறார் என்றே எடுத்துக் கொள்ள வேண்டியுள்ளது.

கோபி இரத்தினம்