டாக்டர் மீது மாணவி புகார்!

breaking
சில நேரங்களில் காவல்துறைக்கு வரும் புகார்களும், அத்துறையினர் பதிவு செய்யும் முதல் தகவல் அறிக்கைகளும், அதனைப் படிக்கும்போதே உண்மைத்தன்மையை வெளிப்படுத்திவிடும்.  இந்தக் கட்டுரையும் அதுபோன்ற இரு புகார்களைத்தான் விவரிக்கிறது. திருநெல்வேலியைச் சேர்ந்த டாக்டர் மேத்யூ ஜாக்சன் என்பவர் மனுதாரர்.  சட்டக்கல்லூரி மாணவி திவ்யா (பெயர் மாற்றப்பட்டுள்ளது) என்பவர் எதிர்மனுதாரர். திவ்யா மீது பலவித குற்றச்சாட்டுக்களை அடுக்கி, திருநெல்வேலி காவல் ஆணையாளரிடம் புகார் அளித்திருக்கிறார் டாக்டர் மேத்யூ ஜாக்சன். அப்படி ஒரு புகார் கொடுத்ததற்கான காரணத்தை முதலில் பார்ப்போம்! சட்டக்கல்லூரி மாணவியான திவ்யா மதுரையைச் சேர்ந்தவர். எம்.பி., பி.எஸ். முடித்துவிட்டு, திருநெல்வேலி மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் காது, மூக்கு, தொண்டை சம்பந்தமான மருத்துவப் படிப்பில் முதுநிலை பட்டப்படிப்பு இறுதியாண்டு படித்து வருபவர் டாக்டர் மேத்யூ ஜாக்சன். முகநூலில் அறிமுகமான மூன்றே மாதங்களில் காதலித்து,  திருமணம் செய்துகொள்வதாக முடிவெடுத்து,  இருவரும் நெருங்கிப் பழயிருக்கின்றனர்.  கடந்த மே 25-ஆம் தேதி சென்னை அண்ணா சாலையிலுள்ள பப்புக்குப் போயிருக்கின்றனர். அதன் பிறகு, தன் செல்போனிலுள்ள ஓயோ ஆப் மூலம் ஆயிரம் விளக்குப் பகுதியிலுள்ள ஒரு கெஸ்ட் ஹவுஸில் அறையை முன்பதிவு செய்து அழைத்துச் சென்ற மேத்யூவிடம் முழுவதுமாக தன்னை இழந்திருக்கிறார் திவ்யா. மேலும்,  சூளைமேடு பஜனைகோவில் முதல் தெருவிலுள்ள பிளாட் ஒன்றில் இருவரும் கணவன் மனைவிபோல் வாழ்ந்திருக்கின்றனர். இதே உறவு, திருநெல்வேலியில் உள்ள மேத்யூ வீட்டிலும், அங்குள்ள விடுதி ஒன்றிலும் தொடர்ந்திருக்கிறது.   எதிர்கால வாழ்க்கை குறித்த பயத்தில் “விரைவில் என்னைத் திருமணம் செய்துகொள்ளுங்கள்..” என்று கெஞ்சியிருக்கிறார் திவ்யா. அப்போதுதான், தன் சுயரூபத்தைக் காட்டியிருக்கிறார் மேத்யூ.  “நீ தாழ்ந்த ஜாதி. என் அம்மா உன்னை ஏற்றுக்கொள்ள மாட்டார்.” என்று நிராகரித்திருக்கிறார். இதனைத் தாங்கிக்கொள்ள முடியாத திவ்யாவை மேத்யூ அடிக்கவும் செய்தார். இந்த விவகாரத்தில் திவ்யாவுக்கு  உதவ வழக்கறிஞர் ஒருவர் முன்வந்திருக்கிறார். ஆனாலும் மேத்யூ, “நகை, பணம், கார் என சகல வசதிகளோடு எனக்கு வேறு இடத்தில் பெண் பார்த்துவிட்டார்கள். வேறு வழியில்லாமல் நான் ஒப்புக்கொண்டுவிட்டேன்.” என்று தனது நிலைமையைக் கூறியிருக்கிறார். மேத்யூவின் அம்மா ரெபேக்கா “என் மகனோடு  படுத்ததற்கு எவ்வளவு பணம் வேண்டும்? கீழ்சாதியில் பிறந்த நீ என் மருமகளாக முடியாது.  ஒருக்காலும் சம்மதிக்க மாட்டேன். ஒழுங்கு மரியாதையாக ஓடிவிடு. இல்லையென்றால், ரவுடிகளை வைத்து உன்னைக் கொலை செய்துவிடுவேன்.” என்று மிரட்டியிருக்கிறார். அம்மா தந்த தெம்பில் மேத்யூவும் “உன்னால் என்னை ஒன்றும் செய்ய முடியாது. என்னோடு பழகிய பெண்களுக்கெல்லாம் வாழ்க்கை கொடுக்க வேண்டுமென்றால், எத்தனை பெண்களை நான் திருமணம் செய்ய வேண்டியிருக்கும் தெரியுமா?” என்று கேட்டு திவ்யாவை அவமானப்படுத்தி விரட்டியிருக்கிறார். மனம் நொந்துபோன திவ்யா, கடந்த 28-ஆம் தேதி மேத்யூ மீதும் அவருடைய அம்மா ரெபேக்கா மீதும் சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று, மேற்கண்ட சம்பவங்களைக் குறிப்பிட்டு,  திருநெல்வேலி காவல் ஆணையாளரிடம் புகார் அளித்தார். திவ்யா மீது  மேத்யூ அளித்திருக்கும் புகார் என்ன தெரியுமா? இருவரும் முகநூல் மூலம் கருத்துப் பரிமாற்றம் செய்தும், செல்போனில் பேசியும் வந்தோம். கடந்த 25-5-2019 அன்று அறுவை சிகிச்சை உபகரணங்கள் வாங்குவதற்காக  நான் சென்னைக்குச் செல்வதை எனது முகநூல் வாயிலாகத் தெரிந்துகொண்ட திவ்யா சென்னையில் எக்பிரஸ் அவென்யூவில் நேரில் சந்தித்தார். பேசிவிட்டுப் போய்விடலாம் என்று நினைத்த நான்,  அவர் என்னைத் தொடர்வதை தவிர்க்க நினைத்தேன். அவரோ, தொடர்ந்து என்னிடம் பேசி, நான் தங்குமிடத்தை அறிந்துகொண்டார். நான் எக்ஸ்பிரஸ் அவென்யூவில் இருந்து தங்குமிடத்துக்கு வந்தேன். அங்கும் என்னைப் பின்தொடர்ந்து வந்தார்.  ஏன் இங்கு வந்தாய்? என்று கேட்டேன். அதற்கு,  “நேரமாகிவிட்டதால் தனியாக நான் வீட்டிற்குச் செல்ல முடியாது. என் தோழி வீட்டிற்குத்தான் செல்லவேண்டும். அவளே வந்து என்னைக் கூட்டிச் செல்வாள்..” என்று சொன்னாள்.  அதனால், என் அறைக்குள் திவ்யாவை அனுமதித்தேன். பிறகு,  கட்டிலில் படுத்துவிட்டார். நான் சுமார் 10 மணிக்கு எழுப்பினேன். அப்போது,   அறையைவிட்டுச் செல்ல மறுத்து, தூங்கியெழுந்து மறுநாள் காலை சென்றுவிடுவதாகக் கூறினாள்.  போதை உட்கொண்டு மயக்க நிலையில் காணப்பட்டாள். நான் அன்றிரவு முழுவதும் தூங்க முடியாமல் விழித்திருந்தேன். எனக்கும் திவ்யாவுக்கும்  உடல் ரீதியான உறவு எதுவும் அன்று நடக்கவில்லை. அடுத்து, செல்போனில் அவள் என்னைத் தொடர்புகொண்டபோதெல்லாம் துண்டித்தேன். மே 26-ஆம் தேதிக்குப் பிறகு ஒருநாள், திருநெல்வேலியில் நான் குடியிருக்கும் வீட்டிற்கு வந்தாள். வீட்டில் யாரெல்லாம் இருக்கின்றார்கள் என்று கேட்டாள். அன்று முகம் கழுவி ஒப்பனை செய்துவிட்டுக் கிளம்பினாள். ஜூன் 20-ஆம் தேதி, திருநெல்வேலி வண்ணாரப்பேட்டை, தெற்கு பைபாஸ் ரோட்டிலுள்ள ஒரு லாட்ஜில் தங்கியிருந்தவள், “நான் கனடா நாட்டிற்குச் சென்று அங்கு குடியேறிவிடுவேன். உடனே என்னைப் பார்க்க வா..” என்றாள். வேலைப்பளுவின் காரணமாக நான் செல்ல மறுத்தேன். அதற்கு அவள் “நீ இங்கு வரவில்லையென்றால், தற்கொலைக் குறிப்புக்கள் எழுதிவைத்துவிட்டு, இந்த அறையிலேயே உயிரை விடுவேன்.” என்று மிரட்டினாள். பயந்துபோய் நான் அவளைச் சந்தித்தேன். என்னோடு ஒரு செல்பி எடுத்துக்கொள்ளவேண்டும் என்றாள். வேறுவழியின்றி சம்மதித்தேன். ஜூலை 30-ஆம் தேதி, சுமார் 7 பேருடன் திருநெல்வேலி வந்தாள் திவ்யா. அவர்களில் ஒருவன் “திவ்யாவுடன் நீ நெருங்கிப் பழகியதால் அவள் கர்ப்பம் அடைந்துவிட்டாள். திருமணம் செய்துகொள்ள மறுக்கிறாய். அதனால், நஷ்ட ஈடாக ரூ.3 லட்சம் கொடு.” என்று மிரட்டினான். அச்சத்தின் காரணமாக, என் அம்மாவும் நண்பர் மதுவும் அவர்களிடம் ரூ.3 லட்சம் பணம் தந்தனர். அதன்பிறகும் என்னை விடவில்லை. மதினா என்ற பெண் என்னைத் தொடர்புகொண்டு, “திவ்யா மீது நடவடிக்கை எதுவும் எடுத்தால் நீங்கள் உயிருடன் இருக்க மாட்டீர்கள்..” என்று கடுமையாகப் பேசினாள்.  திவ்யாவின் நடத்தை எனக்கும் என் அம்மாவுக்கும் மிகுந்த உயிர்பயத்தை ஏற்படுத்தியிருக்கிறது. மிரட்டி வாங்கிய பணத்தை மீட்டுத் தரவேண்டும் என்பதுதான் மேத்யூ அளித்திருக்கும் புகார். திவ்யா நம்மிடம் ”மேத்யூ கொடுத்த புகாரைப் படித்துப்பார்த்த போலீஸ் அதிகாரி சிரித்தேவிட்டார்.  அந்த அளவுக்கு அந்தப் புகாரில் பொய் மட்டுமே இருந்தது. நான் அளித்த புகாரில் நடந்த அனைத்தையும்  ஆதாரத்துடன் குறிப்பிட்டிருந்தேன். மேத்யூ அளித்திருக்கும் பொய்ப் புகாரில் எனக்கெதிராக எந்த ஆதாரத்தையும் தரமுடியவில்லை. அவன் ஒரு டாக்டர் என்பதால், பல பெண்களின் வாழ்க்கையில் விளையாடிவிட்டான். அவனுக்கு என் மூலமாவது  தண்டனை கிடைக்கவேண்டும் என்பதற்காகத்தான், ஒரு பெண்ணாக இருந்தும் அலைச்சலைப் பொருட்படுத்தாமல் நீதி கிடைக்கவேண்டும் என்று போராடிக்கொண்டிருக்கிறேன்.” என்றார். பப் வரை போகவைத்திருக்கிறது இவர்களின்  முகநூல் பழக்கம்.  விடுதியில் ஒரே அறையில் தங்கியிருக்கிறார்கள். பிளாட்டில் ஒன்றாக வாழ்ந்திருக்கிறார்கள். உண்மைக் காதல் இல்லையென்பதால், கசந்துபோனது அந்த வாழ்க்கை. தற்போது, ஒருவர் மீது ஒருவர்  குற்றம் சுமத்தி காவல் நிலையத்தில் நிற்கின்றனர். இதெல்லாம் என்ன கலாச்சாரமோ?