மணிப்பூரில் பதற்றம் – இணையசேவைகள் முடக்கம்!

breaking

மணிப்பூரில் மெய்தி அமைப்பின் தலைவரை  கைது செய்தமையால் போராட்டக்காரர்கள் தீக்குளிக்கப் போவதாக அறிவித்தல் விடுத்துள்ளனர் .

 



வன்முறைகளை அடுத்து மணிப்பூரில் 5 நாட்களுக்கு இணைய சேவையை மாநில அரசு தடை செய்துள்ளது. ஜூன் 7 நள்ளிரவிலிருந்து 5 மாவட்டங்களில் இணைய சேவையும், தொலைபேசி சேவையும் துண்டிக்கப்பட்டுள்ளன.

 



மணிப்பூரில் மெய்தி சமுதாயத்தின் ஆரம்பை டேங்கோல் அமைப்பின் தலைவர் உட்பட ஏனைய  உறுப்பினர்களும் கைது செய்யப்பட்டதால், மணிப்பூரின் 5 மாவட்டங்களின்  பல்வேறு பகுதிகளில் போராட்டம் வெடித்துள்ளது.

 



இருப்பினும், கைது செய்யப்பட்டவர்கள் குறித்த தகவல்களையோ அவர்களுக்கு எதிரான குற்றச்சாட்டுகளையோ வெளியிட பொலிஸார்  மறுத்ததால், போராட்டம் தீவிரமானது.

போராட்டத்தில் பஸ் உட்பட பொதுச் சொத்துக்களையும் சேதப்படுத்தியதுடன், தீக்குளித்து விடுவோம்  என்றும் போராட்டக்காரர்கள்  அறிவித்தல் விடுத்துள்ளனர்



கைது செய்யப்பட்டவர்கள் மாநிலத்திலிருந்து வெளியேற்றப்படுவதாகப் பெறப்பட்ட உறுதிப்படுத்தப்படாத தகவல்களையடுத்து, போராட்டக்காரர்கள் விமான நிலையம் அமைந்திருக்கும் பகுதியையும் முற்றுகையிட்டனர்.

 



கிளர்ச்சியடைந்த கூட்டத்தைக் கட்டுப்படுத்த கண்ணீர்ப் புகைக் குண்டுகள் வீசப்பட்டதாகவும், தடியடி தாக்குதலில் ஒருவர் பலியானதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

 


இதனைத் தொடர்ந்து, விஷ்ணுபூர் மாவட்டத்தில் ஊரடங்கு உத்தரவும், இம்பால் கிழக்கு, இம்பால் மேற்கு, தவுபால், காக்சிங் மாவட்டங்களில் ஐந்து அல்லது அதற்கு மேற்பட்டவர்கள் கூடுவதற்கு தடை உத்தரவு அமுல்படுத்தப்பட்டுள்ளது.