ரணிலுக்கு தண்ணி காட்டும் சஜித்

breaking
ஶ்ரீலங்கா: போக்குவரத்து மற்றும் சிவில் விமான சேவைகள் இராஜாங்க அமைச்சர் அஷோக அபேசிங்கவினால் குருணாகல் மாவட்டத்தின் சத்தியவாதி மைதானத்தில் இன்று ஐக்கிய தேசிய கட்சியின் பிரதி தலைவரும் வீடமைப்பு நிர்மாணத்துறை அமைச்சருமான சஜித் பிரமேதாசவை வரவேற்கும் பொது மக்கள் கூட்டம் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இக் கூட்டத்தில் நிதி இராஜாங்க அமைச்சர் எரான் விக்கிரமரத்ன, டிஜிட்டல் உட்கட்டமைப்பு வசதிகள் மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சர் அஜித் பி பெரேரா , உள்நாட்டலுவல்கள், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி இராஜாங்க அமைச்சர் ஜே.சி.அலவத்துலவல, அபிவிருத்தி உபாயமுறைகள் மற்றும் சர்வதேச வர்த்தக பிரதி அமைச்சர் நளின் பண்டார, பாராளுமன்ற உறுப்பினர்களான துஷார இந்துநில், இந்திக பண்டாரநாயக்க ஆகியோர் உள்ளிட்ட ஐக்கிய தேசிய கட்சியின் குருணாகல் மாவட்ட தொகுதி அமைப்பாளர்கள், பிரதேச மற்றும் உள்ளுராட்சி உறுப்பினர்கள் என பலரும் கலந்து கொண்டிருந்தனர். எனினும் பதுளை மற்றும் மாத்தளையில் இதே போன்று ஏற்பாடு செய்யப்பட்டிருந்த கூட்டங்களில் கலந்து கொண்டிருந்த முக்கிய உறுப்பினர்களான அமைச்சர் மங்கள சமரவீர, ஹரின் பெர்னாண்டோ, உள்ளிட்ட முக்கியஸ்தர்கள் கலந்து கொண்டிருக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கதாகும். இன்று மாலை 4 மணியளவில் இக் கூட்டம் ஆரம்பமாகியிருந்த போதிலும் 5.30 மணியளவிலேயே அமைச்சர் சஜித் மைதானத்திற்கு வருகை தந்திருந்தார். அத்தோடு மைதானத்தில் நூற்றுக்கணக்கான மக்கள் திரண்டிருந்ததோடு, சஜித் மேடைக்கு வருகை தந்த போது கடித உரைகளையும் பலர் கையளிக்க முற்பட்டனர். மேலும் 1326 என்ற அவசர தொலைபேசி இலக்கம் வழங்கப்பட்டதோடு அந்த இலக்கத்திற்கு அழைப்பை ஏற்படுத்துமாறும் அறிவிக்கப்பட்டது. அண்மையில் மாத்தளையில் இடம்பெற்ற கூட்டத்தில் இந்த தொலைபேசி இலக்கம் அறிமுகப்படுத்தப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கதாகும். இந்த கூட்டத்தில் கலந்து கொண்ட மக்கள் சஜித் பிரேமதாசவின் புகைப்படத்துடனான பதாதைகளை ஏந்தியவாறு ' அடுத்த ஜனாதிபதி சஜித் பிரேமதாச ' என்று கோஷம் எழுப்பியவாறிருந்தனர். கூட்டத்தில் பங்குபற்றியிருந்த கட்சி உறுப்பினர்கள் மற்றும் சஜித் பிரேமதாசவினுடைய உரையைத் தொடர்ந்து தேசிய கீதத்துடன் கூட்டம் நிறைவடைந்தது. TAGS