பொதுசின்னம் இல்லையேல் கூட்டு இல்லை :தயாசிறி திட்டவட்டம்

breaking
  பொதுச் சின்னத்தின் கீழ் களமிறங்க பொதுஜன பெரமுனவினர் சம்மதம் தெரிவிக்காவிட்டால், கூட்டணி சாத்தியப்படாதென ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பொதுச் செயலாளர் தயாசிறி ஜயசேகர தெரிவித்துள்ளார். ஹெட்டிபொல பிரதேசத்தில் இடம்பெற்ற நிகழ்வில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும்போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். தயாசிறி ஜயசேகர மேலும் கூறியுள்ளதாவது, “என்மீது தற்போது சிலர் வேண்டுமென்றே குற்றச்சாட்டுக்களை முன்வைத்து வருகிறார்கள். எவ்வாறாயினும், நான் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் உறுப்பினர் என்ற ரீதியில்தான் கருத்துக்களை வெளியிட்டு வருகிறேன். இலங்கையின் கடந்த கால அரசியல் வரலாற்றை எடுத்துக்கொண்டால், கூட்டணியொன்று அமைக்கப்படும்போது பிரதானக் கட்சியொன்றின் சின்னத்துடன் அந்தக் கூட்டணி எந்தவொரு தேர்தலிலும் களமிறங்கியதில்லை. மாறாக பொதுச் சின்னமொன்றே பயன்படுத்தப்பட்டு வருகின்றன. ஏனையக் கட்சிகளுக்கு பாதிப்பு ஏற்படும் என்பதால்தான் அவ்வாறான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுகின்றன. தற்போது ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி- ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் கூட்டணி தொடர்பான பேச்சுவார்த்தைகள் இடம்பெற்று வருகின்றன. இதன்போது, நாம் பொதுவான சின்னமொன்றில் களமிறங்குவது தொடர்பாகவே தொடர்ச்சியாக வலியுறுத்தி வருகிறோம். எமக்கு தாமரை மொட்டுச் சின்னத்தில் வாக்குக் கேட்க முடியாது. இதனை சுதந்திரக் கட்சியின் ஆதரவாளர்களும் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள். அதேபோல், ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவினருக்கு எமது சின்னமான கை சின்னத்தில் களமிறங்குமாறும் எம்மால் கேட்க முடியாது. இதனாலேயே பொதுச் சின்னத்திற்கு செல்ல வேண்டும் என்று நாம் கோரிவருகிறோம். அந்தவகையில், சிறுபான்மையினருக்கு மிகவும் பழக்கப்பட்ட வெற்றிலை சின்னத்தில் களமிறங்குவதே சிறந்ததாக இருக்கும் என்று நாம் கருதுகிறோம். இதனை அவர்கள் ஏற்றுக்கொள்ளாவிட்டால் சுதந்திரக் கட்சி என்ற ரீதியில் தனியாகத்தான் தேர்தலில் களமிறங்க வேண்டியேற்படும்” என குறிப்பிட்டுள்ளார்.