தென்னிந்தியாவில் தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தக்கூடும்.!

breaking
புனேயில் உள்ள ராணுவ சட்டக்கல்லூரியில் நடந்த நிகழ்ச்சியில் ராணுவ தென்மண்டல தலைமை கமாண்டர் லெப்டினட் எஸ்.கே.சைனி கலந்துக் கொண்டார். பின்னர் அவர் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது: தீவிரவாதிகள் இந்தியாவின் தென்பகுதியில் தாக்குதல் நடத்தக்கூடும் என்று எங்களுக்கு தகவல் கிடைத்துள்ளது. சர் கழிமுகப்பகுதியில் சில மர்மப் படகுகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. தீவிரவாதிகளின் அச்சுறுத்தலை கருத்தில் கொண்டு அதனை முறியடிப்பதற்காக சர் கழிமுகப்பகுதியில் ராணுவம் தேவையான நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. அன்னிய சக்திகள், தீவிரவாதிகளின் எந்த வகையான தாக்குதல்களையும் முறியடிக்கும் நோக்கில் தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. எனவே இதில் தீவிரவாதிகள் நினைப்பதை சாதிக்க முடியாது. இவ்வாறு அவர் கூறினார். அண்டை நாட்டில்  இருந்து வரும் அச்சுறுத்தல் குறித்து கேட்டதற்கு, ‘‘ஜம்மு காஷ்மீரை பொருத்தவரை உள்நாட்டு அச்சுறுத்தலை விட வெளிநாட்டில் இருந்துதான் அதிக அச்சுறுத்தல் இருக்கிறது. அதனை எதிர்க்கொள்ள தெளிவான கொள்கையுடன் இருக்கிறோம். அரசு ஒவ்வொரு பிரச்னையையும் அரசியல், பொருளாதார, சமூக, தூதரக அடிப்படையில் தீர்க்க தேவையான நடவடிக்கை எடுத்து வருகிறது. அரசின் நடவடிக்கைகளுக்கு சாதகமான சூழ்நிலையை உருவாக்குவதுதான் ராணுவத்தின் பணியாகும். ஜம்மு காஷ்மீரில் தற்போதுள்ள சூழ்நிலையில் எந்த சூழ்நிலையையும் எதிர்க்கொள்ள ராணுவம் முழு அளவில் தயாராக இருக்கிறது’’ என்றார். பாகிஸ்தான் அரசியல்வாதிகளும், ராணுவத்தினரும் சமீபத்தில் அணுகுண்டு தாக்குதல் நடத்துவோம் என்று மிரட்டல் விடுத்தது குறித்து கேட்டதற்கு, ‘‘அச்சுறுத்தல்களால் ராணுவத்தின் செயல்பாட்டில் எந்த மாற்றமும் ஏற்படாது. எதையும் எதிர்த்து போராட தயாராக இருக்கிறோம்’’ என்று தெரிவித்தார். ஏற்கனவே தென்னிந்தியாவில் தீவிரவாதிகள் சிலர் கடல்மார்க்கமாக ஊடுருவி இருப்பதாக சமீபத்தில் செய்திகள் வெளியானது குறிப்பிடத்தக்கது.