Take a fresh look at your lifestyle.

இணக்கப்பாடு இல்லாமல் ஆதரவு இல்லை: கறார் காட்டும் தயாசிறி

பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் கோத்தாபய ராஜபக்ஷவிற்கு நிபந்தனையற்ற ஆதரவை வழங்க முடியாது என ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி தெரிவித்துள்ளது.

பதவிகள் தொடர்பான சிக்கல் நிலைமை தொடரும் பட்சத்தில் ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பை வலுப்படுத்தி தேர்தலில் களமிறங்க வேண்டிய நிலைமையே தற்போது காணப்படுவதாகவும் சுதந்திர கட்சியின் பொதுச் செயலாளர் தயாசிறி ஜயசேகர தெரிவித்தார்.

சுதந்திர கட்சி தலைமையகத்தில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் இதனைத் தெரிவித்தார்.

பொதுஜன பெரமுன ஏனைய கட்சிகளை இணைத்து கூட்டணி அமைத்தல், வேட்பாளர் மற்றும் சின்னம் ஆகியவற்றை தனித்தே தீர்மானித்துவிட்டார்கள். தற்போது பிரதமர் வேட்பாளரையும் அவர்களுக்குள்ளேயே தீர்மானித்துவிட்டதாக அறியமுடிகிறது. இவ்வாறு அனைத்தையும் அவர்கள் தனித்தே தீர்மானித்துவிட்டால் சுதந்திர கட்சி எதற்கு என்ற கேள்வி எழுகிறது.

கடந்த 2015 ஆம் ஆண்டு ஐக்கிய தேசிய கட்சியுடன் எவ்வித புரிந்துணர்வும் இன்றி தேசிய அரசாங்கம் அமைத்தமையினாலேயே இடைநடுவில் அரசாங்கத்திலிருந்து வெளியேற வேண்டிய நிலைமை ஏற்பட்டது. அடுத்த ஜனாதிபதித் தேர்தலில் கோத்தபய ராஜபக்ஷ வெற்றி பெற்று அரசாங்கம் அமைக்கப்படும் பட்சத்தில் நாம் அவருக்கு ஆதரவு வழங்க வேண்டும் என்று தீர்மானித்தால் இதே நிலைமை ஏற்படாமல் பார்த்துக் கொள்ள வேண்டும்.

எனவே தான் தற்போது தொடர்ந்தும் பேச்சுவார்த்தைகளை முன்னெடுத்துக் கொண்டிருக்கின்றோம். கூட்டணி, வேட்பாளர் மற்றும் சின்னம் ஆகிய அனைத்திலும் இணக்கப்பாட்டினை எட்டி அனைவரையும் ஒன்றிணைக்கவே சுதந்திர கட்சி முயற்சிக்கிறது. இது என்னுடைய தனிப்பட்ட விருப்பம் அல்ல. முழு சுதந்திர கட்சியினதும் எதிர்பார்ப்பாகும் என்றும் அவர் கூறினார்.