மணல் அகழ்வை தடுக்கக் கோரி மக்கள் போராட்டம்

breaking
  வடதமிழீழம்: புத்தளம் – முந்தல் பிரதேச செயலகத்திற்குட்பட்ட வம்பிவட்டவான் பகுதியில், மணல் அகழ்வுக்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டமொன்று முன்னெடுக்கப்பட்டது. இந்த போராட்டம் பிரதேச மக்களால் இன்று (செவ்வாய்க்கிழமை) காலை முன்னெடுக்கப்பட்டது. பூனைப்பிட்டி கிராம சேவகர் பிரிவிலுள்ள வம்பிவட்டவான் பகுதியில் காணப்படும் தனியார் காணியில் குளம் தோண்டும் போர்வையில் சிலர் மணல் அகழ்வில் ஈடுபட்டு வருவதாக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டோர் தெரிவித்தனர். அத்தோடு, அகழப்படும் மணலை புதிதாக அமைக்கப்பட்டுள்ள வீதியின் ஊடாக வெளிமாவட்டங்களுக்கு கொண்டுசெல்லும்போது வீதிக்கு சேதம் ஏற்படுவதாக தெரிவித்தே அவர்கள் இந்த போராட்டத்தை முன்னெடுத்திருந்தனர். வடமேல் முன்னாள் மாகாண சபை உறுப்பினர் துஷார பத்துரகே, கல்பிட்டி பிரதேச சபை உறுப்பினர் சந்தமாலி பெனாந்து மற்றும் நூற்றுக்கு மேற்பட்ட பொதுமக்கள் பல்வேறு கோஷங்களை எழுப்பியவாறு இந்த ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இந்நிலையில் ஆர்ப்பாட்ட களத்திற்க சென்ற முந்தல் பிரதேச செயலக நிர்வாக கிராம அதிகாரி கே.எம்.எஸ்.சிரோமி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட மக்களுடன் கலந்துரையாடி, இதற்கான தீர்வை பெற்றுத் தருவதாக தெரிவித்ததையடுத்து ஆர்ப்பாட்டக்காரர்கள் அங்கிருந்து சென்றனர்.