ஜெனிவா கூட்டத்தொடர் ஆரம்பம் – சிறிலங்கா குறித்து மௌனம்

breaking

ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் 42 ஆவது கூட்டத்தொடர் ஜெனிவாவில் இன்று ஆரம்பமாகியுள்ளது. இந்தக் கூட்டத்தொடரில் சிறிலங்கா நிலைமைகள் குறித்து கரிசனை வெளியிடப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ஐ.நா மனித உரிமைகள் இந்தக் கூட்டத்தொடர் நிகழ்ச்சி நிரலில் சிறிலங்கா தொடர்பான விவகாரங்கள் உள்ளடக்கப்பட்டிருக்கவில்லை.

எனினும், காணாமல் ஆக்கப்பட்டவர்கள் விவகாரம், போர்க்குற்றச்சாட்டு சுமத்தப்படும் லெப்.ஜெனரல் சவேந்திர சில்வா இராணுவத் தளபதியாக நியமிக்கப்பட்ட விவகாரம் என்பன குறித்து, இந்த அமர்வில் கரிசனை செலுத்தப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் 42 ஆவது கூட்டத்தொடரை ஆரம்பித்து வைத்து, ஐ.நா மனித உரிமைகள் ஆணையாளர் மிச்சேல் பசெலெட் அம்மையார் உரையாற்றியிருந்தார்.

அவர் தனது உரையில் பல்வேறு நாடுகளின் மனித உரிமைகள் நிலைமைகள் குறித்து கவலை வெளியிட்டிருந்த போதும் சிறிலங்கா விவகாரங்கள் குறித்து எந்தக் கருத்தையும் வெளியிடவில்லை.

அதேவேளை, அண்மையில் சிறிலங்கா இராணுவத் தளபதியாக லெப். ஜெனரல் சவேந்திர சில்வா நியமிக்கப்பட்டதற்கு, ஐ.நா மனித உரிமை ஆணையாளர் கவலையை வெளியிட்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.