"ஆடுகளை கைது செய்த காவல்துறை" இது தான் காரணம்.!

breaking
தெலங்கானா மாநிலம் ஹுசுராபாத் பகுதியில் செடிகளை சாப்பிட்டதால் இரண்டு ஆடுகள் போலீசாரால் கைது செய்யப்பட்டது. இந்த செய்தி பலருக்கும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. தெலங்கானா மாநிலம் ஹுசுராபாத் பகுதியில் 900 மரச்செடிகளை நட்டுள்ளனர். இந்த செடிகள் 'Save The Trees' என்ற தெலங்கானா அரசாங்கத்தை சார்ந்த அமைப்பினரால் நடப்பட்டு பராமரிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் அவர்கள் வளர்த்து வந்த செடிகள் தொடர்ந்து காணாமல் போவதாக காவல்துறையில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. அதுமட்டுமல்லாமல் செடிகளை வளர விடாமல், ஆடுகள் சாப்பிட்டு வந்ததால், கண்காணிப்பை அதிகாரிகள் தீவிரப்படுத்தினர். இந்நிலையில் அந்த வழியாக வந்த இரு ஆடுகள் சுமார் 250 செடிகளை மேய்ந்துள்ளதாக தகவல் தெரிவித்துள்ளனர். அதன் தொடர்ச்சியாக செடிகளை தொடர்ந்து நோட்டமிட்ட ஆடுகள் இன்று மீண்டும் செடிகளை சாப்பிட்டு கொண்டிருந்த போது கையும் களவுமாக காவல்துறையிடம் சிக்கியது. பின் ஆடுகளின் உரிமையாளருக்கு தகவல் தெரிவித்து, அவரிடம் ரூபாய் 1000 வசூலித்த நகராட்சி அதிகாரிகள் ஆடுகளை உரிமையாளரிடம் அனுப்பி வைத்துள்ளனர்.