முல்லைத்தீவில் சத்தமின்றி தொடரும் சிங்களக் குடியேற்றங்கள்.!

breaking
தமிழர் தாயகமான வடமாகாணம் முல்லைதீவு மாவட்டத்தில் 2009 ஆம் ஆண்டு மே மாதத்திற்கு முன்னரான காலத்திலும் அதற்குப் பின்னரும் கொக்கிளாய், கொக்குதொடுவாய், கருநாட்டுகேணிப் பிரதேசங்களில் பூர்வீகமாக வாழ்ந்த ஈழத் தமிழர்களின் காணிகளில் சிங்களக் குடியேற்றங்கள் திட்டமிட்டு மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இலங்கை ஒற்றையாட்சி அரசின் கொழும்பு நிர்வாகத்தின் கீழ் மகாவலி அபிவிருத்தித் திட்டத்தின் கீழ் சிங்களக் குடியேற்றங்கள் இடம்பெற்று வருவதாக இலங்கை மனித உரிமை ஆணைக்குழுவின் வவுனியா அலுவலகத்தில் இன்று வியாழக்கிழமை முறையிடப்பட்டுள்ளது. இந்தக் கிராமங்களில் வாழ்ந்து பாதிக்கப்பட்ட மக்களே இவ்வாறு முறைப்பாடு செய்துள்ளனர். மனித உரிமை ஆணைக்குழுவின் கொழும்பில் உள்ள தலைமை அலுவலகத்தில் இருந்து வவுனியா அலுவலகத்திற்குச் சென்ற மனித உரிமை ஆணைக்குழு அதிகாரிகளிடமே மக்கள் முறையிட்டுள்ளனர். குறிப்பாக ஆமையன்குளம், ஊத்தராயன்குளம், அடையாதான் குளம், கூமாவடிக்குளம், தட்டாமலை, சின்னகுளம், குஞ்சுக்குளம், நாயடிச்சமுறிப்பு. போன்ற பிரதேசங்களில் ஆயிரத்து 31 ஏக்கர் வயல்காணி மற்றும் மேட்டுக்காணி மகாவலி அபிவிருத்தி திட்டம் என்ற பெயரில் சுவீகரிக்கப்பட்டுள்ளது. ஜே.ஆர். ஜயவர்த்தனா தலைமையிலான ஐக்கிய தேசியக் கட்சியின் ஆட்சிக் காலத்தில் 1984 ஆம் ஆண்டு கொழும்பை மையமாகக் கொண்ட இலங்கை ஒற்றையாட்சி நிர்வாகம் திட்டமிட்ட முறையில் தமது காணிகளை சுவீகரித்ததாகவும் இலங்கை இராணுவத்தின் அச்சுறுத்தல் காரணமாக மக்கள் அங்கிருந்து வெளியேற வேண்டிய நிலை ஏற்பட்டிருந்ததாகவும் பாதிக்கப்பட்ட மக்கள் கூறியுள்ளனர். அழுத்தங்கள் காரணமாக 1990 ஆம் ஆண்டு மீளகுடியமர்த்தப்பட்டு மீண்டும் அந்த ஆண்டு ஏப்ரல் மாதம போர் ஆரம்பிக்கப்பட்டதும் இலங்கை இராணுவத்தின் திட்டமிடப்பட்ட தாக்குதல் காரணமாக அங்கிருந்து வெளியேறியதாகவும் பாதிக்கப்பட்ட மக்கள் மனித உரிமை ஆணைக்குழு அதிகாரிகளிடம் எடுத்துக் கூறினர். 2009 ஆம் ஆண்டு மே மாதத்தின் பின்னரான சூழலில் சர்வதேச அழுத்தங்கள், கண்காணிப்புகளினால் 2012ஆம் ஆண்டு மீளவும் குடியமர்த்தப்பட்டாலும் 1984 ஆம் ஆண்டு திட்டமிட்டு வெளியேற்றப்பட்டதன் நோக்கத்தை இலங்கை அரசாங்கம் இராணுவத்தின் ஒத்துழைப்புடன் நிறைவேற்றி வருகின்றது. குறிப்பாக விவசாயச் செய்கைகளை ஊக்குவிப்பது என்ற போர்வையில் சிங்கள விவசாயிகளை மாத்திரம் மையமாகக் கொண்ட மகாவலி அபிவிருத்தி திட்டத்தைச் செயற்படுத்தி அதன் மூலம் சிங்கள மக்கள் குடியேற்றபட்டு வருகின்றனர். இதற்காக தமிழர்களின் பாரம்பரிய காணிகள் அனைத்தும் இராணுவத்தின் உதவியோடு அபகரிக்கப்படுவதாக பாதிக்கப்பட்ட மக்கள் மனித உரிமை அதிகாரிகளிடம் எடுத்துக் கூறியுள்ளனர். திட்டமிடப்பட்ட இந்த நடவடிக்கைகள் குறித்து முல்லைத்தீவு மாவட்ட அரச அதிபர் உள்ளிட்ட உயர் அதிகாரிகளுக்கு கடந்த மாதம் 28 ஆம் திகதி மகஜர் ஒன்று கையளிக்கப்பட்டது. ஆனாலும் இதுவரை பதில் கிடைக்கவில்லை என்று கூறிய மக்கள் தொடர்ச்சியான போராட்டங்களை நடத்தவுள்ளதாகவும் ஆணைக்குழு அதிகாரிகளுக்குத் தெரிவித்தனர். அதேவேளை, இலங்கை மனித உரிமை ஆணைக்கு இலங்கை ஒற்றை ஆட்சி அரசின் நிறுவனமாகும். இலங்கை ஒற்றையாட்சி அரசியலமைப்பில் கூறப்பட்ட மனித உரிமைகள் தொடர்பான விடயங்களை உள்ளடக்கியே இந்த ஆணைக்குழு செயற்பட்டு வருகின்றது.