இன்னொரு சுபஸ்ரீ உயிர் பறிபோயிட கூடாது கொதிக்கும் மக்கள்.!

breaking
வயிறு எரிந்து போயிருக்கிறார்கள் தமிழக மக்கள்.. அதிமுக பேனர் விழுந்ததில் இளம்பெண்ணின் அநியாய மரணம் மக்களை நிலைகுலைய வைத்துள்ளது. பள்ளிக்கரணை அதிமுக முன்னாள் கவுன்சிலர் ஜெயபால். இவரது வீட்டு கல்யாணத்துக்குதான் பேனர் வைக்கப்பட்டிருந்தது. அது சரிந்து விழுந்து அந்த வழியாக ஸ்கூட்டியில் சென்று கொண்டிருந்த சுபஸ்ரீ மீது விழுந்தது. நிலைதடுமாறி கீழே விழுந்த சுபஸ்ரீ மீது வேகமாக வந்த லாரி ஸ்கூட்டியுடன் மோதியதில் ரத்தவெள்ளத்தில் விழுந்தார். லாரி டிரைவர் மனோஜ் கைது செய்யப்பட்டுள்ளார். பேனர் வைத்த ஜெயகோபால் மீது பள்ளிக்கரணை போலீசாரும் பரங்கிமலை டிராபிக் போலீசாரும் வழக்கு பதிவு செய்துள்ளனர். சுபஸ்ரீ மரணத்துக்கு காரணமான பேனர் அச்சடித்த அச்சகத்துக்கு சீல் வைக்கப்பட்டுள்ளது. அதாவது கோவிலம்பாக்கத்தில் உள்ள சண்முகா கிராபிக்ஸ் மற்றும் ஸ்டிக்கர்ஸ் அச்சகத்துக்கு மாநகராட்சி அதிகாரிகள் சீல் வைத்துள்ளனர். இவ்வளவு நடந்தும் மக்கள் மனசு ஆறவே இல்லை. அந்த பேனரை யாருமே சரியாக கட்டிவிட காணோம். சும்மா அப்படியே நிற்க வைத்திருக்கிறார்கள். அதனால்தான் காற்றில் விழுந்துள்ளதாக சொல்லப்படுகிறது. விபத்து ஏற்படுத்திய அந்த லாரி அவ்வளவு வேகமாக வந்திருக்கிறது. டிரைவர் முயற்சி செய்தும் நிறுத்தவே முடியவில்லையாம். சுபஸ்ரீ, ஸ்கூட்டி மீது ஏறி இறங்கிய பிறகுதான் நிறுத்த முடிந்திருக்கிறது. அந்த ரோட்டில் அவ்வளவு வேகமாக லாரிவர காரணம் என்ன? என்பதுதான் கேள்வி. உயிருக்கு ரத்த வெள்ளத்தில் போராடிய பெண்ணை உடனே ஆஸ்பத்திரிக்கு தூக்கி செல்ல ஒருத்தரும் உதவி செய்ய காணோம். ரோட்டில் அவ்வளவு வண்டிகள் போனாலும், யாருமே சுபஸ்ரீயின் உயிரை காப்பாற்ற உதவ வராமல் இருந்திருக்கிறார்கள். இதைதான் ஜீரணிக்க முடியவில்லை என்கிறார்கள் பொதுமக்கள். ரத்தம் சொட்ட சொட்ட சுபஸ்ரீயை கையாலேயே 100 மீட்டர் தூரத்துக்கு தூக்கி சென்றோம் என்று சம்பவ இடத்தில் இருந்தவர் கண்ணீர் மல்க தெரிவிக்கிறார். "மனிதாபிமானம் மக்கி போயிடுச்சா.. வயிறு எரியுதுங்க.. இன்னொரு சுபஸ்ரீ இப்படி அநியாயமா செத்துட கூடாதுங்க" என்று கொதித்து போய் சொல்கிறார்கள் சம்பவத்தை பார்த்தோர்! இவ்வளவும் ஒரு பக்கம் நடந்தால், இன்னொரு பக்கம் சுபஸ்ரீ மரணம் அரசியலாகிவிடக்கூடாது என்ற கொந்தளிப்பும் எழுந்துள்ளது. சம்பந்தப்பட்ட பேனர் அதிமுகவினுடையது. இதற்கு சோஷியல் மீடியாக்களில் கடும் விமர்சனங்கள் எழ ஆரம்பித்துள்ளன. அரசின் அலட்சியம், அதிகாரிகளின் பொறுப்பின்மை, போலீசாரின் மெத்தனம், என்று எதிர்க்கட்சிகளின் பதிவுகளும் குவிந்து வருகின்றன.