Take a fresh look at your lifestyle.

தற்கொலைக்கு முயன்ற விளக்கமறியல் கைதி!

 

ஹெரோயின் போதைப்பொருளை உடமையில் வைத்திருந்த குற்றச்சாட்டில் தொடர்ச்சியாக விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள சந்தேகநபர், தனது கழுத்தை கூரிய ஆயுதத்தினால் கீறி, உயிர் துறப்புக்கு முயற்சித்த சம்பவம் யாழில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது.

நேற்று (வியாழக்கிழமை) இந்தச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.

2 கிராம் 400 மில்லிக்கிராம் ஹெரோயினை குறித்த சந்தேகநபரின் உடமையிலிருந்து கைப்பற்றியதாக, பொலிஸார் யாழ்ப்பாணம் நீதவான் நீதிமன்றில் அறிக்கையொன்றை தாக்கல் செய்தனர்.

இதனால் சந்தேகநபர், கடந்த ஜூலை 5ஆம் திகதியிலிருந்து தொடர்ச்சியாக விளக்கமறியலில் வைக்கப்பட்டார்.

இந்நிலையிலேயே குறித்த வழக்கு நேற்று விசாரணைக்கு வந்தபோது, சந்தேகநபரின் விளக்கமறியலை நீடித்து யாழ்ப்பாணம் நீதிமன்ற நீதவான் ஏ.பீற்றர் போல் உத்தரவிட்டார்.

குறித்த உத்தரவுக்கமைய, சிறைச்சாலை உத்தியோகத்தர்களால் சந்தேகநபர், நீதிமன்ற மறியல் கூடத்துக்குள் தடுத்து வைக்கப்பட்டார்.

இதனால் மனஉளைச்சலுக்கு உள்ளான சந்தேகநபர், தான் வைத்திருந்த கூரிய ஆயுதத்தினால் தனது கழுத்தை கீறி காயத்தை ஏற்படுத்தியுள்ளார்.

அதனைத் தொடர்ந்து, அவரை சிகிச்சைக்காக அழைத்துச் செல்ல சிறைச்சாலை வாகனம் அவ்விடத்திற்கு வருவதற்கு, சுமார் அரை மணிநேரம் தாமதமானது. அதனால் சந்தேகநபரின் தாயார் நீதிமன்றக் கட்டடத் தொகுதிக்குள் பெரும் சத்தமிட்டு குரல் எழுப்பினார். எனினும் பொலிஸார் அவரை நீதிமன்ற வளாகத்துக்கு வெளியே அழைத்துச் சென்று நீதிமன்றில் அமைதியை ஏற்படுத்தினர்.

இதேவேளை, சந்தேகநபரை தொடர்ச்சியாக விளக்கமறியலில் வைக்கும் நோக்குடன், ஹெரோயினை அவரது உடமைக்குள் திணித்து சோடிப்பு வழக்கைத் தாக்கல் செய்தனர் என்று சந்தேகநபரின் உறவினர்கள் குற்றஞ் சுமத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.