Take a fresh look at your lifestyle.

தமிழர்கள் கடத்தப்பட்டு கொலை செய்யப்பட்டது ஶ்ரீலங்காவின் முன்னாள் கடற்படை தளபதிகளிற்கு தெரியும்:CID தகவல்

 

ஶ்ரீலங்கா: கொழும்பில் கடத்தப்பட்டு கொலை செய்யப்பட்டதாகக் கூறப்படும் இரண்டு தமிழர்களுக்கு என்ன நடந்தது என்பதை, முன்னாள் கடற்படைத் தளபதிகளான அட்மிரல் வசந்த கரன்னகொடவும் அட்மிரல் ஜயந்த பெரேராவும் அறிந்திருந்தனர் என குற்றப்புலனாய்வுப் பிரிவினர் சந்தேகம் வெளியிட்டுள்ளனர்.

மேலும் அதனை மூடி மறைக்க அவர்கள் முயன்றனர் என்ற சந்தேகம் எழுந்துள்ளதாகவும் அந்த பிரிவு தெரிவித்துள்ளது.

கடத்தல்கள் நிகழ்ந்தபோது, அட்மிரல் வசந்த கரன்னகொட கடற்படை தளபதியாக பதவியில் இருந்தார்.

அத்தோடு, கடத்தப்பட்டு காணாமலாக்கப்பட்ட ஒருவரின், அலைபேசியில் கடற்படை தளபதியின் பெயரில் இருந்த சிம் அட்டை பொருத்தப்பட்டு பயன்படுத்தப்பட்டுள்ளதைக் கருத்திற்கொண்டே, அட்மிரல் வசந்த கரன்னாகொடவும் இதனை அறிந்திருந்தார் என குற்ற விசாரணைப் பிரிவு கருதுவதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதேவேளை, கொழும்பில் 11 பேர் கடத்தப்பட்டு காணாமலாக்கப்பட்ட சம்பவங்கள் தொடர்பாக விசாரணை நடத்தி வரும் குற்ற விசாரணைப் பிரிவினர், முன்னாள் கடற்படைத் தளபதி அட்மிரல் ஜயந்த பெரேராவிடம் விசாரணைகளை நடத்தியுள்ளனர்.

குற்ற விசாரணைப் பிரிவின் சமூக கொள்ளைகள் விசாரணை அறைக்கு அழைக்கப்பட்டு, முன்னாள் கடற்படைத் தளபதியிடம் விசாரணை நடத்தப்பட்டு, வாக்குமூலமும் பெறப்பட்டுள்ளது.

இதுவரை நடத்தப்பட்ட விசாரணைகளின் அடிப்படையில், கடற்படையின் முன்னாள் புலனாய்வுப் பணிப்பாளர் றியர் அட்மிரல் ஆனந்த குருகே விரைவில் கைது செய்யப்படுவார் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

ஆட்கள் கடத்தப்பட்டு காணாமலாக்கப்பட்ட சம்பவங்களுடன் அவருக்கு தொடர்புகள் இருப்பதற்கான சான்றுகள் கிடைத்திருப்பதாக, குற்ற விசாரணைப் பிரிவின் உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.