இங்கிலாந்து பல்கலைக்கழகத்தில் பேராசிரியராக நியமிக்கப்பட்ட குர்து அகதி .!

breaking

ஆஸ்திரேலிய தடுப்பு முகாமில் உள்ள குர்து அகதியும் பத்திரிகையாளருமான பெஹ்ரூஸ் பூச்சானி இங்கிலாந்தின் முன்னணி பல்கலைக்கழகத்தில் சட்டத்துறையின் வருகைதரு பேராசிரியராக நியமிக்கப்பட்டுள்ளார். லண்டன் பல்கலைக்கழகத்தில் உள்ள பிர்க்பெக் சட்டப்பள்ளியில் இம்மாத இறுதி முதல் அவர் பணியைத் தொடங்குவார் எனக் கூறப்பட்டுள்ளது. 

பப்பு நியூ கினியாவின் மனுஸ்தீவில் உள்ள ஆஸ்திரேலிய தடுப்பு முகாமில் தங்கியிருந்த அவர், ‘நண்பன் இல்லை, ஆனால் மலைகள்: மனுஸ் சிறையிலிருந்து எழுதுகிறேன்’ என்ற நூலை எழுதியிருக்கிறார். கிறிஸ்துமஸ் நோக்கிய ஆபத்தான பயணத்தையும் 6 ஆண்டுகளுக்கு மேலாக பப்பு நியூ கினியாவில் சிறைப்பட்டிருப்பது குறித்தும் இந்நூலில் எழுதிய இவர், இதற்காக பல விருதுகளை வென்றிருக்கிறார். 

தற்போது, மனுஸ்தீவு முகாம் மூடப்பட்டு அங்கிருந்த பூச்சானி உள்பட பெரும்பான்மையான அகதிகள் பப்பு நியூ கினியா தலைநகர் போர்ட் மோர்ஸ்பேயில் உள்ள சிறை அருகே அமைக்கப்பட்டிருக்கும் முகாமிற்கு மாற்றப்பட்டுள்ளனர். 

ஆஸ்திரேலியாவின் கடல் கடந்த தடுப்பு முகாம்களில் தஞ்சக்கோரிக்கையாளர்கள் எதிர்கொள்ளும் சூழ்நிலையை ஆஸ்திரேலிய மக்களுக்கு சொல்வதையே தனது கல்வி முயற்சிகளின் அடிப்படை நோக்கமாக கொண்டுள்ளதாக குர்து அகதி பூச்சானி தெரிவித்துள்ளார். 

ஆய்வாளர்கள் மற்றும் கல்வியாளர்களுக்கு புரியும் வகையிலேயே எப்போதும் நான் எழுதுகிறேன், அது முக்கியமென கருதுகிறேன்,” என ஆஸ்திரேலிய ஊடகத்திற்கு அளித்துள்ள பேட்டியில் குறிப்பிட்டுள்ளார் பூச்சானி. 

பல்கலைக்கழகத்தின் சட்டப்பள்ளிக்கு தலைமை வகிக்கும் பேராசிரியர் ஸ்டீவார்ட் மோதா, பூச்சானி அவர்கள் எங்கள் கல்வி மையத்திற்கு பெரும் சொத்தாக இருப்பார் எனத் தெரிவித்திருக்கிறார். 

அகதியாக தடுப்பு முகாமில் வைக்கப்பட்டுள்ள பூச்சானி, பப்பு நியூ கினியா தீவிலிருந்து வெளியேற அனுமதி இல்லாத காரணத்தால் இணையவழியாக அவர் பேராசிரியர் பணிகளை செய்யவிருக்கிறார்.